அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2023) முக்கிய செய்திகள்.
* பெண் காவலரிடம் அத்துமீறல் – இருவரும் கைது
சென்னை, விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் 2 நபர்கள் அத்துமீறிய விவகாரம்
பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நள்ளிரவில் கைது செய்து போலீசார் நடவடிக்கை
* சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம்.
திமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
திமுகவை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை.
* தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
* மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவு.
மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிப்பு.
அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன.
2020, 2021-ம் ஆண்டுகளில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்.
ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகார்
பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து
147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் ரத்து – பால்வளத்துறை ஆணையர் உத்தரவு
* செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு இரயில் 07695 / 07696 வரும் ஜனவரி 04-2023 முதல் ஜனவரி 25-2023 வரை இயக்கப்படுகிறது.
* இலங்கையை சிதறடித்த சிவம் மாவி; இந்தியா அசத்தல் வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் மட்டும் 37 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன்களை எடுத்து வெளியேற இறுதியில் கைகோர்த்த அக்ஸர் படேல் மற்றும் தீபக் ஹூடா இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் ஹூடா 41 ரன்களும் அக்ஸர் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்திருந்தது.
163 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் மண்டீஸ் 28 ரன்களை சேர்த்து வெளியேற பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கேப்டன் சனகா மட்டும் 45 ரன்களை எடுத்து ஆறுதல் தந்தார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
சிறப்பாகப் பந்து வீசிய இந்திய அணியின் அறிமுக ஆட்டக்காரர் சிவம் மாவி 4 விக்கெட்களை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் 2 விக்கெட்களும் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக தீபக் ஹூடா தேர்வு செய்யப்பட்டார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை இரட்டை புற்றுநோயால் பாதிப்பு
டென்னிஸில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர் மார்டினா நவ்ரதிலோவா. தற்போது 66 வயதாகும் மார்டினா டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவருக்குத் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது அடையாளம் காணப்பட்டது.
தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சையினைத் துவங்கியபோது மார்பகத்திலும் புற்றுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து மார்டினாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது, “மார்டினாவிற்கு கண்டறியப்பட்ட இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் குணப்படுத்தக் கூடியதுதான் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து மார்டினா கூறுகையில், “இரண்டு புற்றுநோய்க் கட்டிகளும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளன. வலி தீவிரமானது என்றாலும் சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என நம்புகிறேன். இந்த நோயையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்” எனக் கூறியுள்ளார். 2010ல் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* பாஜகவிலிருந்து விலகிய மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
* கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர்,“கட்டுமானத் தொழிலாளர்கள்நல வாரியத்தை ஆலோசிக்காமல் தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்காமல் சென்ற 10.12.2022 ஆம் தேதி முதல் செய்து வரும் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையைநிறுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெற வாரிய உறுப்பினரின்வயது தவிர வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது. கட்டுமானத்தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து கடந்த முறை பொங்கலுக்கு வழங்கியது போல் 5 ஆயிரம்ரூபாய்வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்புத்தொகுப்பும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை3000ரூபாயாக உயர்த்தியும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்துஓய்வூதியமும் வழங்க வேண்டும். நல வாரியத்தில் சலுகை உதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும்”எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
* அப்போது வீரமாகப் பேசியவர்கள் இப்போது அடிமைகள் – எஸ்.பி. வேலுமணி சாடல்
கோவை தொண்டாமுத்தூரில் பால்விலை, சொத்து வரி ஆகியவற்றின் விலையேற்றங்களை எதிர்த்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இதன் பின் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தொட்டதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பயங்கர வீரமாகப் பேசினார்கள். இன்று எங்களை எல்லாம் அடிமை எனச் சொல்கின்றனர். நாங்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் அடிமை இல்லை.
காவிரிப் பிரச்சனைக்கு இப்போதிருக்கும் மத்திய அரசை 26 நாட்கள் நாங்கள் முடக்கினோம். காவிரிப் பிரச்சனையின் போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தோம். மக்களுக்கான பிரச்சனைகளில் கண்டிப்பாக எதிர்ப்போம். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர்தான் அடிமைகள்.
திமுக எனச் சொன்னாலும், உதயநிதியை அமைச்சராக்கினாலும் ஆமாம் என்கின்றனர். திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது காவல்துறை முதல் பரிசை பெற்றது. திமுக ஆட்சியில் காவல்துறை மோசமாக ஆகிவிட்டது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை” எனக் கூறினார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* பணி நிரந்தரம் வேண்டும்’ – தொடரும் செவிலியர்கள் போராட்டம்
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின்போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத்துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிகச் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில்பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்தச் செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஒப்பந்தச் செவிலியர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்தச் செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தின.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்தச் செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றார். மேலும், ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானகுழு அமைக்கப்பட்டு ஒப்பந்தச் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், அதனால், ஒப்பந்தச் செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒப்பந்தச் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எங்கள் பணிக்காலம் நிறைவடைந்தாகதமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எங்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டால், அது எங்களுக்கு நிரந்தரப் பணியாக இருக்காது. அதனால், எங்களுக்குப் பணிப்பாதுகாப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஜனவரி-6 உள்ளூர் விடுமுறை:
கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி-6 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை.
சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
விடுமுறையை ஈடுசெய்ய ஜன.28ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(46) மாரடைப்பால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்
* ₹15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்- சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.
தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு; மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு.
புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன; 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்-அமைச்சர் தங்கம் தென்னரசு
* அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை:
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து மேல்முறையீடு.
வழக்கு விசாரணை போது ‘ஓ.பி.எஸ்’, ‘இ.பி.எஸ்’ என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்த போது, “இதற்கு என்ன அர்த்தம் ?” என நீதிபதிகள் கேள்வி
அவர்களது சொந்த ஊர் கிராமம் ஆகியவற்றவயும் பெயரையும் இணைத்து இருக்கிறார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவிப்பு.
வழக்கு விவரங்கள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் உள்ளிட்ட வாத விவரங்களை உரிய தேதிகளுடன், எழுத்துப்பூர்வமாக சுருக்கமான தொகுப்பாக இன்று தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.
நீதிபதிகள்:
“இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா?”
ஈ.பி.எஸ் தரப்பு:
“ஆம், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்”
ஓ.பி.எஸ் தரப்பு:
உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
நீதிபதிகள்:
“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா?”
ஓபிஎஸ் தரப்பு:
“அந்த பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாகவே ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”
நீதிபதிகள்:
“ஜூலை 11 தேதிக்குப் பின்னர் தான் அனைத்தும் மாறியது அப்படி தானே? எனவே நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஒ.பி.எஸ் தரப்பு:
“ஜூலை 11ம் தேதிக்கு முன்னர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இருந்ததோ அதுவே தொடர வேண்டும்
நீதிபதிகள்:
“இந்த வழக்கின் விசாரணையை இந்த வாரமே நாங்கள் முடிக்க விரும்புகிறோம், வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு”
* செய்தியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்துவது ஒருவித மனநோயாக இருக்குமோ..? -அண்ணாமலை அவர்கள் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் பில், காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகள், அண்மையில் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய போது அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல், நிதானமிழந்து செய்தியாளர்களிடம் அவர்களின் ஊடகங்களின் பெயரைக் கேட்டு மிரட்டும் தொணியில் பேசியதை ஊடகங்களின் நேரலையில் கண்ட போது அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு. முருகேசன் அவர்களை மிரட்டும் தொணியில் ஆவேசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், அநாகரீகமாகவும் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதையே தொடர் வாடிக்கையாக அண்ணாமலை அவர்கள் கொண்டிருப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு ஏற்புடையதல்ல.
மேலும் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு டிஜிட்டல் மயத்தை வலியுறுத்தி வரும் நிலையில் ஊடகத்துறையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பிரிவான யூடியூப் சேனல் நடத்துவோரை இழிவுபடுத்தும் வகையில் பேசியது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
என்ன பேசினார் அண்ணாமலை? https://youtu.be/bA6lchp8FAY
மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று ஏற்பாடு செய்து பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களை தங்களின் இடத்திற்கு வரவழைத்து விட்டு, நேர்காணல் நடைபெறும் சமயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள திராணியற்று, கத்தி, கூப்பாடு போட்டு, நீ எந்த சேனல்..?, என்னை கேள்வி கேட்க நீ யார்..? யூடியூப் சேனலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என பேசுவதும், ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ஊடகங்கள் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்கிற எதிர்மறையான நோக்கத்தில் பரபரப்பு செய்திகளுக்காக எதையாவது சொல்ல வேண்டும் என்கிற ரீதியில் பேசுவதை வழக்கமாக கொண்டு அண்ணாமலை அவர்கள் செயல்படுவதை காண்கையில் இது ஒருவிதமான மனநோயாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மேலும் தமிழக அரசின் DIPR குறிப்பிட்ட பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மட்டும் லட்சங்களிலும், கோடிகளிலும் விளம்பர வருவாய் வருவதாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை அவர்கள் அதற்கான ஆதாரங்களோடு, தரவுகளோடு ஊடகங்கள் முன் தோன்றி பேசியிருந்தால் அது ஏற்புடையதாக இருந்திருக்கும்.
ஆனால் ஒரு வழிப்போக்கன் போகிற போக்கில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டு போவது போல ஆதாரங்கள் எதுவும் கையில் இல்லாமல் பேசுவதும், அது குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர்களிடம் நீங்கள் ஆர்டிஐ போட்டு கேளுங்க, வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்யுங்க என ஊதியம் கொடுக்கும் முதலாளி போல செய்தியாளர்கள் மீது எரிந்து விழுந்து, பிராண்டுவதும் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைமைக்கு அழகல்ல.
எனவே இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமைக்காக திரு. அண்ணாமலை அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து, தனது தவறுகளை திருத்திக் கொள்ளவும், தகுந்த தரவுகளோடும், ஆதாரங்களோடும் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் அனைவரின் எண்ணமாகும்.
சு.ஆ.பொன்னுசாமி
மாநில செயலாளர்
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி.
* ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.
இன்று (04-01-2023) புதன்கிழமை காலை சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. புதியதலைமுறை செய்தியாளர் திரு.இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் , கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல..இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
என்ன பேசினார் அண்ணாமலை? https://youtu.be/bA6lchp8FAY
அரசியலில் வளர்ந்து வரும் திரு.அண்ணாமலை அவர்கள் ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127
பாரதிதமிழன்
இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
* ”தலைநகரை விட்டு கிளம்பினால் தலைக்கு ரூ.6 லட்சம் பரிசு” : ஜப்பான் அரசு அறிவிப்பு.
டோக்கியோவில் இருந்து கிராமங்களுக்கு குடியேறுவோரின் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.6.20 லட்சம் பரிசாக வழங்கப்படுமென ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்திய கோவிட் பரவல் காரணமாக மக்கள்தொகை பரவலாக குறைந்துள்ளது.
தலைநகரில் மக்கள்தொகை எண்ணிக்கையை மேலும் குறைப்பதுடன், நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவலாக மக்கள் குடியேறுவதை ஊக்குவிக்க வேண்டுமென ஜப்பான் அரசு கருதுகிறது. வயதானவர்கள் அதிகரிப்பு, குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவால், பெரிய நகரங்களான ஒசாகா, டோக்கியோவுக்கு இடம்பெயர்வது பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காணும் விதமாகவும், மக்கள்தொகை குறைந்துவரும் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, டோக்கியோவின் 23 முக்கியமான வார்டு பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினர் , வேறு நகரங்களுக்கு குடியேறுவோரின் குழந்தைகளுக்கு தலா ரூ.6.20 லட்சம் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
* சுபஸ்ரீ விவகாரத்தில் ஜக்கி என்ன செய்தார்; நக்கீரன் ஆதாரத்தைக் காட்டிய முத்தரசன்
கடந்த டிசம்பர் 24-27, 2022 நக்கீரன் இதழில், ‘ஈஷாவிலிருந்து மாயமான இளம்பெண்? – தவிக்கும் கணவர்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஜக்கி ஆசிரமத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வெளியேறியபோது, காணாமல் போனது குறித்து எழுதியிருந்தோம். தற்போது, ஜனவரி 04-06, 2023 நக்கீரன் இதழில், ‘உளவு பார்த்த சீடர்கள்! ஜக்கி நடத்திய பஞ்சாயத்து?’ என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறோம்.
அதில் சுபஸ்ரீயின் மாமனார் சக்திவேலிடம் இது குறித்து கேட்டறிந்ததும் இடம் பெற்றிருந்தது. அதில் சக்திவேல் “மருமகள் மாயமான பின் ஜக்கியின் சீடர்கள் எங்களுடன் சேர்ந்து நாங்கள் செய்வதை நோட்டம் விட்டனர். டிசம்பர் 24 ஆம் தேதி எனது மகன் பழனிகுமாரையும் எனது பேத்தியையும் சந்தித்து சமாதானம் செய்திருக்கின்றனர். அம்மா கிடைப்பார்களா என்ற எனது பேத்தியின் கேள்விக்கு பதில் கூறாத ஜக்கி எனது மகனுக்கு ருத்ராட்ச மாலை போட்டு அனுப்பினார்” எனக் கூறினார். அவர் கூறியது மட்டுமின்றி நாமும் களத்தில் இறங்கி விசாரித்து சேகரித்த விரிவான செய்திகளை ஜனவரி 04-06 இதழில் வெளியிட்டிருக்கிறோம்.
இந்நிலையில் இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை காவல்துறை மற்ற சாதாரண நிறுவனத்தில் இது மாதிரி ஏதேனும் மரணம் நிகழ்ந்தால் அந்த வழக்கை எப்படி விசாரிக்குமோ அவ்வாறு ஈஷா மையத்தின் விசாரணையில் இல்லை. 18 ஆம் தேதி பெண்ணைக் காணவில்லை. 24ஆம் தேதி கணவர் பழனிகுமாரை சாமியார் அழைத்துப் பேசியுள்ளார். ருத்ராட்ச மாலை போட்டுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரித்துள்ளதா.
நான் சொல்லுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நான் புலனாய்வு அதிகாரி இல்லை. ஊடகங்கள் கொடுத்த செய்திகளை வைத்து தான் கூறுகிறேன். நக்கீரன் இதழில் அது வெளிவந்துள்ளது. இதை முத்தரசன் சொல்கிறார் என்றே போடுங்கள். ஜக்கி என் மீது வழக்கு பதியட்டும்” எனக் கூறினார்.
இதுதொடர்பான கேள்விகளால் இன்று அண்ணாமலை பிரஸ்மீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. வீடியோ: https://youtu.be/bA6lchp8FAY
TELEGRAM: t.me/agnipuratchi1
* திருமகன் ஈ.வெ.ரா’ – நொறுங்கிப் போன கலைஞரின் குருகுல இல்லம்
தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்திருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது தி.மு.க. உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமான திருமகன் ஈ.வெ.ரா.வுக்கு வயது 46.
திராவிடர் கழகத்தின் நிறுவனர் தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். இவர் தொடக்கத்தில் திமுக, அடுத்து காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். இவரின் மகன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளவர். காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் தான் திருமகன் ஈவெரா.
காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த திருமகன், எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு களமாக அமைந்தது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஷேரிங் மற்றும் தொகுதிகள் ஒதுக்கும் குழுவில் இருந்த இளங்கோவன், தி.மு.க. தலைமைக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியை வழங்குங்கள் என கோரிக்கை வைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் குடும்பத்திற்குச் செய்வது கடமை என்ற உணர்வுடன் பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகனுக்காகவே ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு வழங்கினார்.
2021ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டசபைக்குச் சென்றார். தொகுதியில் மக்கள் சந்திப்பு, கோரிக்கைகளை நிறைவேற்றுதல் என தொடர்ந்து பயணம் செய்து வந்தார். கட்சியினர், பொதுமக்கள் மிக எளிமையாக இவரை சந்தித்து எங்களுக்கான தேவையை நிறைவேற்றுங்கள் என உரிமையுடன் பழகி வந்தனர்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு இவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில், 3ந் தேதி இரவு ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். 4ந் தேதி காலையில் வெகு நேரம் படுக்கையிலிருந்து அவர் எழவில்லை. அசைவற்று இருந்த திருமகன் ஈவெரா வை வீட்டில் இருந்தவர்கள் ஈரோடு கே.எம்.சி.ஹெச். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டில் திருமகன் ஈவெராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திராவிட இயக்க அரசியல் வாழ்வில் பாரம்பரியம் கொண்ட தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவே.ரா.வுக்கு இரங்கல் தெரிவித்ததோடு கலைஞரின் குருகுல இல்லமான ஈரோட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்.
எதையும் சமாளிக்கும் தைரியமும், துணிவும், அரசியலில் தோல்வி ஏற்பட்டு அதனால் வரும் கவலையைக் கூட நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்லும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று தனது மகன் மறைவால் உளவியல் ரீதியாக மன வருத்தத்தில் இருக்கிறார். அவருக்கு அத்தொகுதியினரும், ஏனைய கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தனது மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர் வைரலாகும் வீடியோ உண்மை என்ன…?
சில நாட்களுக்கு முன்பு இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவில் முதியவரும், இளம் பெண்ணும் மாலையுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இந்த வீடியோவை முதலில் டிரோல் என்ற டுவிட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும் டெக்பரேஷ் (Techparesh) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதி இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் பரேஷ் சதாலியா (Paresh Sathaliya) என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ உள்ளது.
அதுமட்டுமல்லாது டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது. இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் இந்தப்பக்கத்தில் அதிகம் உள்ளது.தற்போது பரப்பக்கூடிய வீடியோவில் இருக்கும் பெண் வேறொரு வீடியோவில் இருப்பதைக் காண முடிகிறது. அதில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது.
இது வீடியோக்களை வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என அறிய முடிகிறது.
இந்நிலையில்தான் தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தனது மகளையே முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகும் வீடியோ போலியானது, இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதும் நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
* பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அங்குச் சமையல் எரிவாயு பற்றாக்குறையும் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
வீடியோ: https://youtu.be/FiqAK8UF0so
இதனால் அங்குள்ள மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிச் சேகரித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.
* சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; தோழியின் அதிர்ச்சி தகவலால் வழக்கில் திடீர் திருப்பம்
டெல்லி சுல்தான் புரி பகுதியில் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் உடலில் காயங்களுடன் இளம்பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்குச் சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்குக் காரணமான காரை பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், காரில் ஐந்து பேர் இருந்ததும், அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும் அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்துவந்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், அப்பெண்ணுடன் ஸ்கூட்டரில் வந்த அவரது தோழி நிதி செய்தியாளர்களிடம் பேசும் போது, “உயிரிழந்த எனது தோழி குடிபோதையில் இருந்தார். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஸ்கூட்டரை ஓட்டுவதாகப் பிடிவாதமாக இருந்து வண்டியை ஓட்டிச் சென்றார். எங்கள் மீது பின்னால் வந்த கார் மோதிய போது நான் ஒரு பக்கம் விழுந்து விட்டேன். எனது தோழி காரின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். காரின் அடியில் ஒரு பெண் சிக்கி இருப்பது காரில் வந்தவர்களுக்குத் தெரியும். அதிர்ச்சியில் இருந்த நான் இது பற்றி யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் செய்தியாளர்களிடம் பேசும் போது, “காரில் இருந்த ஐந்து பேரையும் தூக்கிலிட வேண்டும். அதுவே எங்கள் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* பணமதிப்பிழப்பு; பிரதமர் மோடி தப்ப முடியாது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மக்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்ததால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இதனை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததும் சரி. செயல்படுத்திய முறையும் சரி. அதனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” எனத் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒன்றிய அரசு 2016 நவம்பர் 8 இல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அன்று அறிவித்த போது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கலில் விரிவான கலந்தாய்வு 8 மாதங்களாக நடந்ததாகக் கூறியிருக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8-க்கு முன்பு 2 மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பில் இருந்தார். அவர் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார். அதற்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த டாக்டர் உர்ஜித் படேலும் அதே நிலை தான் எடுத்திருந்தார். அதனால், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியபடி விரிவான கலந்தாய்வு நடந்தது என்பது உண்மைக்குப் புறம்பான கருத்து என்பது அம்பலமாகியுள்ளது.
அண்ணாமலை பிரஸ்மீட்டில் காரசாரம்: https://youtu.be/bA6lchp8FAY
ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் முடிவெடுத்து தனது சுயாட்சி தன்மையை கேலிக்குரியதாக ஆக்கிவிட்டது. இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. அதில் திரும்ப வந்தது ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி. திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு ரூ.12,877 கோடி. ஆனால், இதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூ.12,777 கோடி. இவ்வகையில் ரூ.100 கோடி மட்டுமே அரசுக்கு பலனாக கிடைத்திருக்கிறது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 99 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்து விட்டன.
கருப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த இருந்த கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு தான் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்திருக்கிறது. மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான பேர் வேலை இழந்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோதப் பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது.” என்று கூறியுள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* காஷ்மீர்: சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு; 2 மாதத்திற்கு அமல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட சர்வதேச எல்லை அமைந்த பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீ. பரப்பளவிற்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதனால், மக்கள் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவசரகால பயணம் தேவையென்றால் செல்லும்போது, உடன் ஆவணங்களை எடுத்து செல்லும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது என துணை போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
இந்த தடை உத்தரவு முன்பே விலக்கி கொள்ள அல்லது வாபஸ் பெறப்பட கூடும். அப்படி இல்லாத சூழலில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் 2 மாதங்களுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடர்பனியான சூழலில், எல்லை கடந்த ஊடுருவல், ஆளில்லா விமானம் வழியே ஆயுத கடத்தல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எல்லை பாதுகாப்பு வீரர்கள், தொடர்ந்து சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
