அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2023) முக்கிய செய்திகள்.
* முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு.
வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய அவர், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார்.
* உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்
உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடக்கம்.
மொத்தம் 16 அணிகள் மோதும் இந்த தொடர், இந்த மாதம் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது,1975ம் ஆண்டுக்கு பின் இந்தியா கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
* பொது வாழ்வில் தனது நீண்ட காலம் எம்.பி., ஆகவும் அமைச்சராகவும் இருந்து புகழ்பெற்றவர்”
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் மாரடைப்பால் காலமானார்.
ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனாரும், பிரபல நரம்பியல் மருத்துவருமான வி.நாகராஜன் (77) உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் தற்போது மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
* சார், மேடம் இல்லை – இனி டீச்சர் தான்” – கேரள பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவு.
கேரள மாநில கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிடப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர், அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.
அதில், பள்ளி ஆசிரியர்களை, சார் என்றும் மேடம் என்றும் கூறுவதைவிட, பாலினப் பாகுபாடு இல்லாமல், டீச்சர் என அழைப்பதுதான் மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவை அனுப்புமாறு, பள்ளிக்கல்வித் துறைக்கு குழந்தைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார்.
சட்டப்பேரவையில் அவர் நிகழ்த்திய உரை சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர்; இந்நிலையில், திடீர் பயணமாக செல்கிறார்.
* கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் விழா – தி.மு.க. அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை!..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று மாலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் மாளிகை வளாகத்தில் மாட்டு வண்டிகள், கரும்பு, மஞ்சள், மண் பானைகள் ஆகியவற்றைக் கொண்டு பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி மற்றும் முன்னாள் கவர்னர்கள் எம்.எம்.ராஜேந்திரன், எம்.கே.நாராயணன், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள்., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காவல்துறை உயர் அதிகாரிகள், தேசிய விருது பெற்றவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. முன்னதாக பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக கவர்னர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
* கவர்னர் ரவியை தாறுமாறாக விமர்சித்த ஆர் எஸ் பாரதி: https://youtu.be/EJY0znJojR8
* விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
TELEGRAM: t.me/agnipuratchi1
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:Junior Executive (Engineering- Civil)
காலியிடங்கள்: 62
பணி:Junior Executive (Engineering- Electrical)
காலியிடங்கள்: 84
பணி:Junior Executive (Electronics)
காலியிடங்கள்: 440
பணி:Junior Executive (Architecture)
காலியிடங்கள்: 10
சம்பளம்:மாதம் ரூ.40,000 – 1,40,000
தகுதி:பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020,2021,2022 ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:21.1.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.300.
இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:21.1.2023
* திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது
5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை கொன்றதாக வாக்குமூலம்
* சரத்யாதவ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
* தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின:
கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ₹200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தகவல்.
புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து, தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். -சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு.
* ஆளுநர் உரை – முதல்வர் பதிலுரை:
மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம்.
காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.
2022ம் ஆண்டில் மட்டும், 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
“10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை ஓட வைத்திருக்கிறோம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.
நாள்தோறும் உழைக்கிறேன் என்பார்கள், நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன்.
கடந்த ஆண்டில் 9,000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஒரு கோடி பேருக்கு மேல் பயனடைந்து இருக்கிறார்கள்.
மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது.
தமிழ்நாட்டில் ₹2,57,850 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
10 ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓடவிட்டிருக்கிறேன்.
என்னால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67.
இதுவரை 3346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 86% செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல.
மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன்.
‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’ என்ற கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
* சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
* பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய தொகை ₹5 கோடியில் இருந்து ₹10 கோடியாக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.
இதுவரை 233 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து 1,483 பணிகளுக்கான கோரிக்கை பட்டியல் வரப் பெற்றுள்ளன.
இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சபரிமலையில் 56 நாட்களில் ரூ. 310 கோடி வருவாய்:
சபரிமலையில் ஜனவரி 12ஆம் தேதி வரையிலான 56 நாட்களில் ரூ. 310 கோடி வருவாய்.
மண்டல பூஜை காலத்தில் ரூ. 231.55 கோடியும் மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ. 78.85 கோடியும் வருவாய்.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலையில் நடைதிறக்கப்பட்டது.
* 16ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது:
ஜனவரி 16ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு.
நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16ஆம் தேதிக்கு மாற்றியமைப்பு – தமிழக அரசு.
* அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
32 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்.
* தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெற்றது.
* ஜன.31 முதல் ஏப்.06 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 06ஆம் தேதி நடைபெறும்; 66 நாட்களுக்கு 27 அமர்வுகளுடன் நடைபெறும்.
முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், 2வது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 06 வரையும் நடக்கிறது.
பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை நாடாளுமன்ற அலுவல் நடைபெறாது – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
* மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு.
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019க்கு இணங்க, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2026 டிசம்பர் 31ம் தேதி வரை 100% வரி விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பேட்டரி வாகனங்களுக்கு விலக்கு.
* ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது
ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்திய விசிகவினரை கைது செய்தது காவல்துறை
தடையை மீறி சின்னமலை பகுதியில் விசிகவினர் முற்றுகை போராட்டம்
* சென்னை தீவுத் திடலில் சென்னை சங்கமம் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாளை முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் என 18 இடங்களில் மயிலாட்டம், பறை, சிலம்பாட்டம், தெருக்கூத்து, கானா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
* மூன்றாம் தர அரசியல்வாதி ஆர்.எஸ்.பாரதி” -பால் முகவர்கள் சங்கம் அறிக்கை.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதமும், அதனைத் தொடர்ந்து குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் பேசிய நிகழ்வாகட்டும், அதன் பிறகு நடைபெற்ற பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையை புறக்கணித்து, வேண்டுமென்றே “தமிழக ஆளுநர்” என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாகட்டும் அவரது அண்மைக்கால செயல்பாடுகளை தமிழ் கூறும் நல்லுலகம் வன்மையாகவே கண்டித்திருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணைப்புப்பாலமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டிய ஆளுநர் மாநிலத்தில் வெறுப்பு அரசியலை உருவாக்கி இது போன்ற சகுனித்தனமான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் இருந்தது.
இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஆளுநரை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்று ஒருமையில் ஏக வசனம் பேசியதோடு, வன்முறையை தூண்டக் கூடிய வகையிலும், முகம் சுளிக்கக் கூடிய, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி மூன்றாம் தர அரசியல்வாதியின் தரத்தை விட படுமோசமாக பேசியிருப்பதும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை கண்டிக்காமல் அமைதி காப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சியா..? என தெரியவில்லை.
(எப்படி பேசினார் ஆர்எஸ் பாரதி? Watch: https://youtu.be/EJY0znJojR8 )
ஏற்கனவே பல்வேறு விடயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களால் மூன்றாம் தர அரசியல்வாதியை விட படுமோசமாக நடந்து கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தற்போது தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்திலும் தரமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேசும் போது மடக்கப்பட்டுள்ள மீதி விரல்களில் மூன்று நம்மைத் தான் சுட்டுகிறது என்பதை ஆர்.எஸ்.பாரதி போன்றோர் உணர்ந்து, தவறு செய்வோர் அது எவராக இருந்தாலும் அந்த தவறை உணரச் செய்து அவர்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு தருகிற நாகரீக அரசியலை கையில் எடுப்பது தான் தமிழ்நாட்டில் சரியான அரசியலாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். அந்த வகையில் ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (குறள்-314) என்கிற குறளுக்கேற்ப ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும், அதிகாரவர்க்கமும் செயல்படுவது தான் சரியானதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தனது தரம் தாழ்ந்த போக்கினை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.
– சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
* சேது சமுத்திர திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை – அண்ணாமலை பேட்டி!..
நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது , சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு பயனில்லை .
மத்திய அரசுடன் இணைந்து புதியதாக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் பாஜக ஆதரிக்கும். இத்திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12% வருமானம் தர வேண்டும். அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதல் அமைச்சர் கூறுவது தவறானது;
சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன் புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் . எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
* விரைவில் திவாலாகும் பாகிஸ்தான்: வல்லுநர்கள் எச்சரிக்கை
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை. கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
* உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியிலிருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லும் உலகின் மிக நீண்டதூரம் பயணிக்கும் ‛எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் சேவையை காணொளி வாயிலாக பிரதமர் மோடி இன்று (ஜன 13) துவக்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், “கங்கை நதியில் உலகின் மிக நீண்டதூர பயண கப்பல் சேவை துவங்கியிருப்பது ஒரு முக்கிய தருணமாகும்” என்றார்.
* தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணி…!
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார்.
தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் TNPSC சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
* பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னையில் ஆய்வு.
பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகளின் வசதிகள் குறித்து பேருந்தில் ஏறி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டறிந்தார்.
