அக்னிப்புரட்சி இன்றைய (15.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (15.01.2023) முக்கிய செய்திகள்.
* அக்னிப்புரட்சி இதழின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்…
* பொங்கல் விழா கோலாகலம்
தமிழகம் முழுவதும் அறுவடைத்திருநாளான பொங்கல் விழா கோலாகலம்.
புத்தாடைகள் உடுத்தி புது பானையில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து பொதுமக்கள் கோலாகல கொண்டாட்டம்.
* தொடங்கியது உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
* பொங்கல் வாழ்த்துகள்
உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கத் துவங்கும் விழா பொங்கல் விழா. பொங்கல் விழா உழவர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருவாரியான மக்களை உழவர் பெருமக்களாகக் கொண்ட ஒரு நாட்டில் உழவர் பெருநாள் தேசியத் திருநாளாக உருவாகி நிற்பது பொருத்தமே.
உழவனின் வியர்வையில் பலன் விளைந்த செந்நெல்லும்,கன்னலும், மஞ்சளும் அறுவடையின் இன்பத்தைக் காட்டும் மாட்டுப் பொங்கலும் மற்ற பொங்கல்களும் உழவனின் பெருமையைக் காட்டும்.
தமிழக உழவனுக்குப் பொங்கல் புது நாளின் பொருள் என்ன? உழைப்பின் பலனைத் தானும், தனது உற்றார் உறவினரும், தன்னைச் சூழ்ந்துள்ள பெருமக்களும் சுருக்கத்தில் சமுதாயம் முழுவதும் தங்கு தடையின்றி அனுபவித்து மகிழ்ச்சி கொண்டாடும் இன்ப நன்னாளாகும். ஆவல் துடிப்போடு எதிர்நோக்கும் சிறந்த எதிர்காலத்தை ஆர்ப்பாட்டத்துடன் வெளியிடும் பொன்னாளாகும்.
புது பொங்கல் கொண்டாடும் உழவன் புதிதாக உழக்கு அரிசியும், ஒரு புதுப் பானையும், ஒரு துண்டு புதுக் கரும்பும், ஒரு கொத்து புதுமஞ்சளும் மாத்திரம் விரும்புகிறான். தை முதல் நாளில் மட்டும் சம்பிரதாயப் புதுமையை விரும்புகிறான் அல்ல; அவன் ஒரு புதிய வாழ்வையே விரும்புகிறான்;உழவர் பெருமக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தங்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தும் பிற்போக்குச் சுரண்டல் முறையை துடைத்தெறிய விரும்புகிறான்; கிராமப்புற வாழ்வின் பொருளாதார அடிப்படையை அடியோடு புதுப்பிக்க விரும்புகிறான்.
தமிழகத்தில் உழவர் பெருமக்கள் மருத நில மக்கள். அவர்களின் கடவுள் இந்திரன் என்பர். இந்திரன் போகக் கடவுள். மழை வளம் தருவதும், உயிர் வளம் தருவதும் ஞாயிறு போற்றுதும் (சிலம்பு) உழவர் பெருமக்களுக்குப் பயிர்த்தொழிலுக்கும் மிகப் பயன் படுவன மாடுகள்.
TELEGRAM: t.me/agnipuratchi1
உழைத்துக் களைத்த உழவர்கள்
சோர்வை போக்கிக் கொள்ளும் நாளாக மார்கழி இறுதி நாளை போகி என்று கொண்டாடினர். ஞாயிற்றைப் போற்ற தை முதல் நாளை பெரும் பொங்கல் என்று கொண்டாடினர். மறுநாள் மாடுகளைப் போற்றி ஏற்ற மாட்டுப் பொங்கல் கொண்டாடினர். இந்த மூன்று நாட்களும் உழவர் பெருமக்களுக்கு ஆண்டில் சிறந்த நாட்கள்.
தை முதல் நாள்,போகியின் மறுநாள் பயனை நுகரத் தொடங்கும் நாள், அன்று உழவர் இல்லங்களில் எல்லாம் புதுமை; எதிலும் புதுமை பொங்கும். அன்று புதிய ஆடை புனைந்து, புதிய நெல் குத்தியெடுத்த புதிய அரிசியைப் புதிய பானையிலிட்டு பொங்குவர். புதிய பானைகளுக்குப் புதிய மஞ்சளை புதிய நூலில் காப்பாக அணிவர்.கோலமிட்டு செம்மண் தீட்டிய தம் இல்லத்தின் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி வைத்து புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய வள்ளிக் கிழங்கையும் புதிய பூசணிக் காயையும் படைப்பர். பின்னர் கதிரவனை வழிபட்டுப் பொங்கலிடத் தொடங்குவர். பொங்கலிடும் பானை பொங்கி வரும் போது உழவர் பெருந்தகைகள் மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரித்து மகிழ்வர்.
மாட்டுப் பொங்கலன்றோ உழவர்கள் மாடுகளை நன்கு குளிப்பாட்டி அவைகளை அழகு செய்வர். அவைகளுக்குச் சோறு படைத்து நன்றி உணர்வுடன் வழிபடுவர். அன்று மாடுகளை வேலை வாங்க மாட்டார்கள். சில இடங்களில் அன்று மாலை வண்டிகளில் எருதுகளைப் பூட்டி ஓட்டப்பந்தயங்கள் விட்டு ஆரவாரம் செய்து மகிழ்வர். சில மாவட்டங்களில் மஞ்சள் விரட்டு நடத்தி மகிழ்வர். தமிழனின் சமுதாய வாழ்வில் தமிழே எங்கும் கொலுவீற்றிருந்து பாரதத்திலும் சரி, உடலிலும் சரி, எந்த முன்னேறிய மொழி மக்களோடும் தமிழன் ஈடுசோடாக நிமிர்ந்து நடக்க சபதம் எடுக்கும் திருநாளாக – இந்நன்னாளைக் கொண்டாட வேண்டுவது தமிழர் பெருமக்களின் பொன்னான கடமையாகும்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க நன்மை வந்தெய்துக; தீதெலாம் நலிக சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக நந்தேயத்தினர் நாடொறும் உயர்க – என சபதம் ஏற்போம் இந் நன்னாளில்.
பொங்கல் வாழ்த்துகள்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து பொக்காரா சென்ற பயணிகள் விமானம் திடீரென விபத்து.
விமானத்தில் பயணித்த 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
நேபாள விமான விபத்தில் 50க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்பு.
53 நேபாளிகளும், 5 இந்தியர்களும், 4 ரஷியர்கள் உட்பட 72 பேர் பயணித்ததாக தகவல்.
* நேபாளத்தில் நாளை தேசிய துக்க நாளாக அனுசரிப்பு:
72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நேபாள அரசு அறிவிப்பு.
* நேபாளத்தில் தொடரும் விமான விபத்து
நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 27 விமான விபத்துகள் நடந்துள்ளன.
1992ல், காத்மாண்டு அருகே ஒரு பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் இறந்தனர்.
அதே ஆண்டு தாய் ஏர்வேஸ் விமானம் காத்மாண்டு அருகே விபத்துக்குள்ளானது 113 பேர் பலியாகினர்.
2012ல் நடந்த விபத்தில் 15 பேரும், 2018 விமான விபத்தில் 51 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு தாரா ஏர் விமானம் மலையில் மோதி 22 பேர் உயிரிழந்தனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* மதுரை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் 10 சுற்றுகளுடன் நிறைவு; இதில் 737 காளைகள் இடம்பெற்றன.
28 காளைகளை அடக்கி மாடு பிடி வீரர் விஜய் முதலிடம்.
17 காளைகளை அடக்கி கார்த்தி
2ம் இடம்.
13 காளைகளை அடக்கி பாலாஜி
3ம் இடம்.
* 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 390 ரன்கள் குவிப்பு: கோஹ்லி 166 ரன் விளாசல்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது.
விராட் கோஹ்லி 110 பந்துகளுக்கு 166 ரன்களுடனும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), அவுட்டாகாமல் இருந்தார்.
ரோகித்(42), சுப்மன் கில்(116) ஸ்ரேயாஸ் ஐயர் (38), ரன்கள் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
* பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்..!
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது.
இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக எகிறியது. இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் ஏராளமானோர் முண்டியடித்து சென்று வாங்கும் நிலை உள்ளது.
பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* பொழி கட்டுதல்
அதிகாலை விடியலில்,ஆவாரம்பூ- கன்னிப் பிளை பூ,வேப்பிலை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வீட்டின் கதவு ஜன்னல்கள் என்று வீட்டைச் சுற்றிலும் பொழி(காப்பு) கட்டுதல் கட்டும் பழக்கம் எங்கள் கரிசல் மண் பக்கம் உண்டு. காடுகளிலும், தோட்டத்திலும் கட்டுத்தரையிலும், மோட்டார் பம்பு ஷெட்களிலும் கோழிகூப்பிடும் போதே பொழி கட்டுவாங்க. இது கிருமிகளிடமிருந்து நம்மை காக்கும்.
கையளவு துணி இருந்தாலும், கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் உழைப்பு. குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக் கூடிய துணிவு கடவுளுக்குப் பின் உழவனுக்கு மட்டுமே இருக்கிறது!
படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட….
தமிழர்கள் அதிகம் குளிர் தாங்குவதில்லை. முன் மற்றும் பின் பனிக்காலங்களில், கார்த்திகை – மார்கழியில் குளிரில் முடங்கிக்கிடந்தவர்கள் தையில் வந்த வெயிலை” பொங்கலோ பொங்கல் ” என ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.
சூரிய வெயில் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது.. கதிரவனோடு சேர்த்து உழவுக்கு சுவாசமான விலங்குகளையும் ஒரு சேர மதிக்கும் தை பொங்கல் பண்டிகை.
திருவளர்வாழ்க்கை, கீர்த்தி ,தீரம்,
நல்லறிவு, வீரம், மருவுபல் கலையின் சோதி,வல்லமை,யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள்பெருமைதா னிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு.
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம்,வறுமைத்துன்பம்அவலமா மனைத்தைக்
காட்டில் அவலமாம் புலைமையச்சம்,
இவையெலாம் அறிவிலாமை என்பதோர்இருளிற் பேயாம்,
நவமுறு ஞானபாநு நண்ணுக: தொலைக பேய்கள். – பாரதி
தை மாச மதிய வெயிலில் மணல் தெரிய தெளிந்தோடும் காவிரி….
தை நினைவுகள்…..
குபராவின் எழுத்து….
தை பிறப்பு உண்மையிலேயே உயிரின் பிறப்பு. அதனால்தான் அது பிறக்கும் நாள் நமக்கு அவ்வளவு அழகான நாள். தெருக்களெல்லாம் கோலம், திண்ணைகளெல்லாம் சுண்ணாம்பு, செம்மண், சுவர்களெல்லாம் வெள்ளை, வீடுகள் மேலெல்லாம் வெள்ளை வெய்யில், வயல்களிலெல்லாம் கதிர் – கிராமத்தில்தான் தை பிறந்த வனப்பு தெருத் தெருவாகத் தோன்றும்.
TELEGRAM: t.me/agnipuratchi1
கதிர் அறுவடை, கரும்பு அறுவடை, மஞ்சள் இஞ்சி பூரண கர்ப்பத்திலிருந்து பொன்மேனியுடன் வெளிப்படும் காலம். நீரும் நிலமும் கலந்து கலவி புரிந்து பெரும் பேறு – இவையெல்லாம். தை மாதம் இயற்கையின் பேறுகாலம். குடியானவனும் மாடும் மருத்துவம் செய்கிறவர்கள்.
குடியானவனும் மாடும் இல்லாவிட்டால் என்ன இருக்கிறது? அவர்கள் தை பிறப்பில் தலை நிமிர்கிறார்கள். அவர்கள் பட்டபாடு கதிர்வாங்கிப் பழுத்து தலை சாய்ந்து நிற்கிறது.
பொங்கல் அவர்களுக்குத்தான். பொன் போலப் புதுவெயிலில் மின்னும் கதிர்கள் அவர்களுடைய உள்ளம் பொங்கி நிற்கும் நிலையில் தென்படுகின்றன. அவர்கள் வயிற்றில் பால் – புதுப்பானையின் பாலுடன்! ஆறு மாதங்கள் ஆடியோடி உழைத்த உழைப்பிற்கு தையில் பலன் – தை பிறக்கும் நாள் தூயநாள் தான்.
அந்தத் திருநாளில் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்பது உண்மை. செந்நெல்லும் கரும்பும் உள்ளே வந்து தித்தித்திப்பைத் தருகின்றன. உழைப்புக்குப் பிறகு இன்பம் – உழைப்பின்றி உயிர் வாழ முடியாது என்ற தேர்ச்சி உணவாகச் சமைந்து விடுகிறது.
பட்டணவாசிகள் தை பிறப்பை கொண்டாடுவதில் பொருளில்லை. குடியானவன்தான் அதைக் கொண்டாட வேண்டியவன். அவனுக்குத்தான் அந்த உரிமையுண்டு; அவன் போடும் சோறு நாம் உண்பது; அவன் கை உழைப்பைக் நாம் உண்டு களிக்கிறோம்; அவன் பெறுவது வாரம் ; நாம் பெறுவது மேல் வாரம். நிலம் நம்முடையது !
நிலம் எப்படி நம்முடையதாயிற்று ? அவன் ஏன் அந்த நிலத்தை இழந்தான்! அது வேறு கதை.
நிலத்தை இழந்தான் குடியானவன்; நிலம் அவனை இழக்க முடியாது. குடியானவனும் மாடும் மிதித்த பூமிதான் விளையும். அவன் கால் பட்ட இடம் கதிர்; கைப்பட்ட இடம் கரும்பு; ஏர் பிடித்த இடம் களஞ்சியம்; வாய்க்கால் பிடித்த இடம் வளப்பம்; குடியான மகளிர் குளித்த இடம் நாற்றங்கால்; நிமிர்ந்த இடம் நெஞ்சுக்கதிர்; நடக்குமிடம் நவ தானியம்; இந்த வளப்பத்தில் வாழ்ந்தும் வாடுகிறார்கள்.
ஆனால் அதுதான் இயற்கை விதியோ? தேன் சேகரித்த தேனீக்களா அதை அனுபவிக்கின்றன? பொருள் சேகரிப்பவனா பொருளை அனுபவிக்கிறான்? ஈட்டுகிறவன் அனுபவிக்க மாட்டான் என்பது சாபம் போலிருக்கிறது.
நினைவு எப்படிப் போகிறது! பொங்கலிலிருந்து
பொருளாதாரத்திற்கு வந்துவிட்டேன்!
பொங்கலன்று புதுநினைவு வர வேண்டும்; புது நினைவு புதுவாழ்வு கொடுக்க வேண்டும். தொண்டைக் கதிர் கிளம்பி வெளியே வருவது போல் நமது நல்லெண்ணம் வெளியாகட்டும்! பழுத்தப்பயிர் தலை சாய்வது போல் நமது உள்ளம், கனிந்து படியட்டும்.
