அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2023) முக்கிய செய்திகள்.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை.
13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.
அவர் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்கள் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு.
* தமிழைத் தேடி….!
’’….அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! ”
என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் போற்றப்பட்ட அன்னை தமிழ் இப்போது எங்கே இருக்கிறது?.
இத்தகைய சிறப்பு மிக்க தமிழைத் தேடி பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் நான் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அனைவரும் வாருங்கள்… ஆதரவு தாருங்கள்!- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அழைப்பு.
* சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் புதிய பன்னோக்கு மருத்துவமனை
ரூ.230 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சேக்ஸ்பியர் உள்ளிட்ட உலக அறிஞர்கள் பலரை பற்றி படிக்கிறோம்; அதைக் காட்டிலும் எதிர்காலத்தில் மனித வாழ்விற்கு தேவையான ஞானம் திருக்குறளில் இருக்கிறது”
“தமிழ்நாட்டில் படிக்கும் வெளி மாநில மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்”
– திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி வளாகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
* விருதுநகர்: ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
சட்டவிரோதமாக 24மணிநேரமும் மதுவிற்பதாக குற்றஞ்சாட்டி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
* உலகின் மிகப் பழமையான நாடுகள் பட்டியல்… 7 ம் இடத்தில் இந்தியா – உலக மக்கள் தொகை ஆய்வு மையம் தகவல்
உலக மக்கள்தொகை ஆய்வு மையம் வெளியிட்ட உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ம் இடத்தை பிடித்துள்ளது.
கி.மு 3 ஆயிரத்து 200ல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு 3 ஆயிரத்து 100 லும், ஆறாம் இடத்தில் உள்ள சீனாவில் கி.மு 2 ஆயிரத்து 70 லும் அரசுகள் உருவாகின.
இந்தியாவில் கி.மு 2 ஆயிரத்தில் முதன் முதலாக ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* இடைத்தேர்தல்: பெண் வேட்பாளர் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டி
வரும் 29ம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
* நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம்
வாஷிங்டன்,-நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார்.
கடந்த 1969ல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர், பஸ் ஆல்ட்ரின்.
இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971ல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் தன், 93வது பிறந்த நாளை இவர் கொண்டாடினார்.
அப்போது, அன்கா பார், 63, என்ற பெண்ணுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்ததாக பதிவிட்டுஇருந்தார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது:
என் நீண்ட நாள் காதலியை, என்னுடைய 93வது வயதில் திருமணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.
புதிதாக திருமணம் செய்த இளம் வயதினர் எப்படி மகிழ்ச்சியாக இருப்பரோ, அதேபோல் நாங்களும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள அன்கா பார், அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றுகிறார். இவருக்கு இது எத்தனையாவது திருமணம் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
TELEGRAM: t.me/agnipuratchi1
* கோகுல்ராஜ் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு
கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வு
சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட்ட நிலையில் ஆய்வு
* திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை.
ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும்.
ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார்-ஜெயக்குமார்.
* மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடி மதில் சுவரில் மோதி விபத்து. பேருந்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. இதையடுத்து பயணிகள் இறங்கிச் சென்ற பின்பு ஓட்டுநர், பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.
அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பேருந்து தானாக இயங்கத் துவங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், மேலும், பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து பேருந்து 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன.
பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர்ந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பேருந்தின் உள்ளே யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.
* ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி – தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு.
* இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. தலைமையிலான போராட்டத்தில் வன்முறை – மேற்குவங்காளத்தில் பதற்றம்
இந்திய மதச்சார்பற்ற முன்னணி மேற்குவங்காளத்தை சேர்ந்த அரசியல் கட்சியாகும். இஸ்லாமிய மத போதகர் அப்பாஸ் சித்திக் என்ற நபரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது.
இந்த கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அப்பாசின் இளைய சகோதரனான நவ்சத் சித்திக் பகன்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்பாஸ் தனது இளைய சகோதரனான நவ்சத் சித்திக்கை கட்சியின் தலைவராக நியமித்தார்.
இதனிடையே, பகன்கர் பகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அப்பாசின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி நிர்வாகியை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினர் அக்கட்சியின் எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டொரினா கிராசிங் பகுதியில் சாலையில் ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட கார், பைக்கை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கல், கட்டையை கொண்டு தாக்கினர். இதனால், அப்பகுதியே வன்முறை கலமாக மாறியது.
உடனடியாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் உள்பட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* திரிணமூல் காங்கிரஸ் அமைதியை விரும்புகிறது: மதன் மித்ரா
திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைதியை விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதவாது, டிஎம்சி தொழிலாளர்கள் தங்களைத் தாக்கியதாக இந்திய மதசார்பற்ற முன்னணி செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். மேலும் தனது கட்சி அமைதியை விரும்புகிறது. கலவரங்களில் நம்பிக்கை இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாற்றத்தை விரும்புகிறார். பழிவாங்கலை அல்ல.
இதையும் படிக்க-கம்பம்: செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
பங்கர் பகுதி கலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தை தொடங்கியவர் யார் என்பது விரைவில் நிரூபணமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள பங்கர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இருத் தரப்பினரும் ஒருவரையொருவர் தடி மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்டனர். நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒவ்வோர் இந்திய மொழியிலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள்; தலைமை நீதிபதி பேச்சு – பிரதமர் வரவேற்பு
புதுடெல்லி, நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கோர்ட்டு விசாரணையை லைவ் நிகழ்வாக வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நேரலையாக வெளிவரும்போது, சட்ட துறை ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் அதனை கவனித்து, விவாதத்தில் ஈடுபடலாம்.
இதுபோன்ற நேரலை விசயங்களை விவாதிக்கும்போது, நமது சமூகத்தில் ஊடுருவியுள்ள அநீதியை நீங்கள் உணர முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து அவர், எங்களது அடுத்த கட்ட பணியானது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம்.
நமது குடிமகன்கள் புரிந்து கொள்ள கூடிய ஒரு மொழியில் எங்களது தீர்ப்பு விவரங்கள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது நாட்டின் 99% மக்களை சென்று சேராது என்று கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. அவை நமது கலாசார துடிப்போடு சேர்ந்து உள்ளன.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை ஒருவரது தாய்மொழியில் படிக்கும் வகையில் வாய்ப்பை வழங்குவது உள்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க எண்ணற்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்: முத்தரசன்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என அண்ணாமலை பகல் கனவில் மிதப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்குத் தான் முதல் கையெழுத்து போடும் என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு நூறு ஆண்டுகள் தாண்டிய வரலாறு இருக்கிறது.
கடவுள்கள் பெயரிலும், சாஸ்திரங்கள் வழியிலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிறு கும்பலின் பிடியில் இருந்த ஆலயங்களையும், அதன் சொத்துக்களையும் மீட்பதற்கு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும். கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களும், கோயில் நிலங்களை உழுது வரும் குத்தகை விவசாயிகளும்தான் கோயில் சொத்துக்களை சேதாரம் இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.
கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகளும், சனாதான சக்திகளும் கடவுள் சிலைகளை கடத்துவது, நகை, பணம் போன்றவைகளில் கையாடல் செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியால், ஆத்திரமடைந்த சுயநல சக்திகளின் உணர்வுகளை அண்ணாமலை பிரதிபலித்து, பகல் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.
தலைமுறை, தலைமுறையாக கோயில்மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள், நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அழகப்பா பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னர் ரவி பங்கேற்பு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலை., யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. இன்று(ஜன.,22) பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள அழகப்பா பல்கலை., யில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித் துறை முன்மைச் செயலர் கார்த்திகேயன், அழகப்பா பல்கலை., ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், குணசேகரன், பழனிச்சாமி, அழகப்பாதொலைதூரக் கல்வி இயக்குனர் குருமூர்த்தி, தேர்வாணையர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.
* நாட்டில் வெறுப்பை உருவாக்குவது யார்?: ராகுலிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி
புதுடில்லி: நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுலிடம் நான் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை உருவாக்குவது யார்? என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டைவைகள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தோம். குறிப்பாக பாதுகாப்புத் துறைக்கான அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டது. ஆனால் இப்போது எல்லாவற்றையும் இந்தியாவிலேயே தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுலிடம் நான் கேட்கிறேன். நாட்டில் வெறுப்பை உருவாக்குவது யார்?. நாட்டில் வெறுப்பு இருப்பதாகக் கூறிவதால், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. உங்களுக்கு என்ன நேர்ந்தது ராகுல்?. இவ்வாறு அவர் பேசினார்.
* சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு
பீஜிங்: சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக கடைசியாக சீன அரசு, ஜனவரி 12 ஆம் தேதி வரை 60 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 681 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். 11 ஆயிரத்து 977 பேர் கரோனா தொற்றுடன் வேறு நோய்கள் இருந்ததால் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளதால் விரைவில் கரோனா தொற்றால் அன்றாட உயிழிப்பு 36 ஆயிரமாக அதிகரிக்கும் என்று ஏர்ஃபினிட்டி என்ற தனியார் தொற்றுநோய் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. சீனா கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கோவிட் கொள்கையை தளர்த்தியதிலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கணிக்கிறது.
இருப்பினும் சீனா இன்னொரு கரோனா அலை ஏற்படாது என்று சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோய் தடுப்பு நிபுணரான வூ ஜுன்யு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெய்போ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட தகவலில், “வசந்த விழாவை ஒட்டி நிறைய பேர் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் கூட தொற்று பரவ வாய்ப்பிருந்தாலும் கூட இன்னொரு அலைக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போதே 80 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.
சீன அரசு தொற்று பரவல், உயிரிழப்புகள், மரபணு பகுப்பாய்வு முடிவுகள் குறித்து உறுதியான அதிகாரபூர்வமான தகவலை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொண்டாட்டத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை என்றும் 47 வயதாகும் எட்வின் சென் என்ற நபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடன அரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டுப்பாட்டாளர் கென்னித் மெஜியா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.
* ஹாக்கி உலகக்கோப்பை – காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா தோல்வி.
பரபரப்பான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்து அணி வெற்றி.
இந்தியாவின் உலகக்கோப்பை கனவு இந்த முறையும் தகர்ந்தது.
* கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு:
ராணிப்பேட்டை அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு.
கீழ்வீதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.
இந்த விபத்தில் – 3 பேர் உயிரிழப்பு,
7 பேர் படுகாயம்
* பொங்கல்- தமிழகம்; குடியரசு தின விழா – தமிழ்நாடு:
‘தமிழ்நாடு அரசு’ முத்திரையுடன், ‘தமிழ்நாடு ஆளுநர்’ என குறிப்பிடப்பட்டு குடியரசு தின விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு அரசு முத்திரையில்லாமல் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டு வெளியான பொங்கல் அழைப்பிதழ் சர்ச்சையாகியிருந்தது.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது திமுக.
கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
