இன்று (17.01.2023) காணும் பொங்கல். என்னைப் பொறுத்தவரை நான் நட்டு வளர்த்த மரம் செடி, கொடிகளை காண்பது தான் மகிழ்ச்சியான நிகழ்வு. – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
இன்று (17.01.2023) காணும் பொங்கல். என்னைப் பொறுத்தவரை நான் நட்டு வளர்த்த மரம் செடி, கொடிகளை காண்பது தான் மகிழ்ச்சியான நிகழ்வு. – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பம் கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள மரங்களையும், செடி, கொடிகளையும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இன்று தைலாபுரத்தில் இருந்து கல்விக்கோயிலுக்கு பயணித்தேன்.
கல்விக்கோயில் வளாகத்தின் நுழைவாயிலில் என்னை வரவேற்றது கிளைகளுடன் கூடிய பனைமரங்கள். அவற்றை ஆரத்தழுவி மகிழ்ந்தேன். இந்த பனைமரங்களுக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த, பசுமைத்தாயகம் அமைப்பின் அப்போதைய தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அங்கிருந்து திரும்பும் போது சில பனை விதைகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.
அந்த பனை விதைகளை கல்விக் கோயில் வளாகத்தில் அப்போது நட்டு வைத்தேன். அதன்பின் 20 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அந்த விதைகள் முளைத்து மரமாகி கிளை விட்டு வளர்ந்து இப்படி காட்சியளிக்கின்றன. கல்விக் கோயில் வளாகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் இந்த மரங்கள் குறிப்பிடத்தக்கவை.
தொடர்ந்து கல்விகோயிலின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மரம், செடி, கொடிகளை பார்த்தேன்; அவற்றிடம் நலம் விசாரித்தேன்; பொங்கல் வாழ்த்து கூறினேன்; அவற்றுக்கு நடுவே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். சுமார் இரு மணி நேரம் அவற்றுடன் செலவிட்டேன். அவற்றிடம் விடை பெற்று திரும்பும் போது எனது மனம் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. மகிழுந்தில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தபோது மரம், செடி, கொடிகளும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியில் தலையாட்டிக் கொண்டிருந்தன.
