உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து

சென்னை: கடந்த 2009-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இந்த வழக்கில், தொடர்புடைய வழக்கறிஞர்களைக் கைது செய்தபோது, காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, பிப்.19-ம் தேதி நடந்த இந்த மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், அவரது தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரர்கள் அனைவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி நிர்மல்குமார் தீர்ப்பளித்தார்.
