எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?..
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?..
11 ஆங்கிலப் பள்ளிகளின் வளர்ச்சி… தமிழின் வீழ்ச்சி!
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்றிருந்த நிலையை மாற்றி எங்கே தமிழ்… எதிலே தமிழ் என்ற நிலையை உருவாக்கியதில் ஆங்கிலப் பள்ளிகளுக்கும், அவற்றை ஊட்டி வளர்த்த திராவிடக் கட்சி அரசுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
ஒரு மொழி வளர வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை அது பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், பள்ளிகளில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இந்தித் திணிப்பைத் தடுத்து தமிழை வளர்க்கப்போவதாக ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழை பயிற்று மொழி என்ற நிலையிலிருந்து கீழே தள்ளி ஆங்கிலத்தை அரியணையில் அமர வைத்தன. அதன்மூலம் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை ஏற்படுத்தியது இந்த இரு கட்சிகள் தான்.
தமிழ் வழிக் கல்வி
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில வழிக் கல்வி தான் கோலோச்சியது. அதனால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறியது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்தி 1930-ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் பயனாக 1952-ஆம் ஆண்டு தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.1954-ஆம் ஆண்டு முதல் காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் உயர் நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது.
கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்கள் பல்கலைக் கழக மட்டத்திலும் தமிழே பயிற்சிமொழியாக வேண்டும் என்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார். 1960-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கோவையில் உள்ள அரசுக் கல்லூரியில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், நிலவியல், மனவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. 1961-ஆம் ஆண்டில் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதிலும் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது. பட்டப்படிப்பை தமிழ் வழிக் கல்வியில் மேற்கொள்வோருக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்பட்டால் மட்டும் போதாது, அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், 1963-ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது.
பல்கலைக்கழக பள்ளிகள்
1976-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பெரிய அளவில் இல்லை. அரசுப் பள்ளிகள் மட்டும் தான் இருந்தன. தனியார் பள்ளிகள் என்பதைக் கேள்விப்பட்டே இருக்க முடியாது. எனினும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 28 பல்கலைக்கழக பள்ளிகளும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பல்கலைக்கழக பள்ளியும் செயல்பட்டு வந்தன. அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்பு படிப்பதற்கு தேவையான மாணவர்களை உருவாக்குவது தான் என்று கூறப்பட்டது. ஆனாலும், இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர் குடும்பங்களையும், மிகப்பெரிய பணக்காரர்கள் குடும்பங்களையும் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தேவையை நிறைவேற்றுவது தான் பல்கலைக்கழக பள்ளிகளின் பணியாக இருந்தது. அந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. பல்கலைக்கழக பள்ளிகள் அனைத்தும் தனியார் அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன.
பல்கலைக்கழகப் பள்ளிகளில் மெட்ரிக் கல்வி முறையும், ஆங்கிலோ & இந்தியன் கல்வி முறையும் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இந்தப் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தன. மொத்தமுள்ள 29 பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் ஏற்பளிப்பு வழங்கின. அந்த பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது, மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்கள் செய்து வந்தன. இந்த பள்ளிகள் தமிழகத்தில் அரசால் நடத்தப்பட்ட பள்ளிகளுடன் தொடர்பின்றி இருந்தன.
அரசு பள்ளிகளே சிறப்பு
தமிழக அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தகுதி படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் பல்கலைக்கழக பள்ளிகள் திறக்கப் பட்டன என்றாலும் கூட, கல்வித் தரத்தில் அரசு பள்ளிகள் தான் சிறந்து விளங்கின. கணிதமேதை இராமானுஜம், நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.இராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட ஆளுமை களை உருவாக்கிக் கொடுத்தது தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் தானே தவிர, பல்கலைக்கழகப் பள்ளிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
1975-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மால்கம் ஆதிசேஷய்யா பதவி ஏற்றார். கிட்டத்தட்ட அதேகாலத்தில் இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இத்தகைய சூழலில் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற முடிவுக்கு மால்கம் ஆதிசேஷய்யா வந்தார். அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 28 பள்ளிகளையும் மூடும்படி அவற்றின் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பினார் ஆதிசேஷய்யா.
‘‘பள்ளிக் கல்வியில் மாநில அரசு கவனம் செலுத்தத் தொடங்கி விட்ட நிலையில், அந்தப் பணியை இனியும் பல்கலைக்கழகங்கள் தொடர வேண்டிய தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே, சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருவேளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட விரும்பாத நிர்வாகங்கள் தொடர்ந்து பள்ளிகளை நடத்த முடியாது. மாறாக, அவர்கள் பள்ளிகளை மூடிவிட்டு வேறு வடிவிலான அறப்பணிகளை மேற்கொள்ளலாம்’’ என்று அந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷய்யா கூறியிருந்தார். அதன்படி அப்பள்ளிகள் அரசுடன் இணைவதற்கு முன்வந்தன.
மெட்ரிக் பள்ளிகள் – வரலாற்றுத் தவறு
அந்தப் பள்ளிகளை மாநிலப் பாடத்திட்டத்துடன் இணைத்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போலவே தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கும். தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகள் என்ற ஒரு பிரிவே ஏற்பட்டிருக்காது. ஆனால், 1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பல்கலைக்கழகப் பள்ளிகள் தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகளாகவும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளாகவும் தொடரலாம் என்று அறிவித்தது. மேலும், அப்பள்ளிகளை நிர்வகிப்பதற்காக மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகளும் 1978-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. அதன்பின் 2001&ஆம் ஆண்டில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உருவாக்கப்பட்டது.
மெட்ரிக் பள்ளிகளிலும், ஆங்கிலோ- இந்தியன் பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அவை பல்கலைக்கழகப் பள்ளிகளாக இருக்கும் போதும் அவற்றில் ஆங்கிலம் தான் பயிற்று மொழியாக இருந்தது. ஆனாலும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகவே 29 பல்கலைக்கழக பள்ளிகள் தான் இருந்தன என்பதால் அவை குறித்து மக்களுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால், அவை அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் அவை ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பள்ளிகள் என்றே அறிவிக்கப்பட்டதால், ஆங்கிலத்தில் கல்வி வழங்கும் பள்ளிகள் தான் உயர்ந்த பள்ளிகள் போலும் என்ற தவறான எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. அது ஒரு தவறான தொடக்கமாக அமைந்தது.
அதன்தொடர்ச்சியாக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதிராக அமைந்தன. பல்கலைக்கழக பள்ளிகள் என்ற தத்துவமே தேவையற்ற ஒன்று என்பது அந்த பள்ளிகள் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்த போதே நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட, அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தான் திறமையானவர்களாகவும், சாதிப்பவர்களாகவும் திகழ்ந்தனர். அந்த பள்ளிகளை நிர்வகிக்க முடியாது என்று பல்கலைக்கழகங்கள் மறுத்துவிட்ட நிலையில், அவை அவற்றின் இயல்பான முடிவை அடைய அனுமதித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், அவை மாநில அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அந்த இரண்டையும் செய்யாமல், அவை ஆங்கில வழிப் பள்ளிகளாக செயல்பட அனுமதித்த தமிழக அரசு, அடுத்ததாக மூன்றாவது தவறையும் செய்தது.
எம்.ஜி.ஆர் அரசின் முடிவு
ஏற்கனவே இருந்த ஆங்கிலப் பள்ளிகளே தேவையில்லை எனும் நிலையில், புதிதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும், ஆங்கிலோ- இந்தியன் பள்ளிகளையும் தொடங்க எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு அனுமதி அளித்தது. தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்திலும், அடுத்து இரட்டை இலக்கத்திலும் தொடங்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகள் காலப்போக்கில் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்டன. இன்றைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 4,498 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 30 லட்சத்து 60,601 மாணவ, மாணவியர் பயில்கின்றனர் (31, அக்டோபர் 2022 &ஆம் நாள் நிலவரப்படி). இவை தவிர 6837 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 8 லட்சத்து 62,639 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பல்கலைக்கழக பள்ளிகள் வழியில் தொடங்கப்பட்ட 11,375 தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மட்டும் சுமார் 39 லட்சம் பேர் பயில்கின்றனர். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் படித்திருக்க வேண்டியவர்கள். ஆனால், அதிமுக அரசு ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததாலும், அதன்பிறகு வந்த திமுக அரசு அதைத் தொடர்ந்ததாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 37 விழுக்காட்டினர் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இவர்களில் பலருக்கு மொழிப்பாடமாகக் கூட தமிழ் கற்பிக்கப் படுவதில்லை என்பதால் ஒரு தலைமுறையே தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறையாக உருவாகிறது.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி
தமிழுக்கு எதிரான செயல்பாடுகள் இத்துடன் ஓயவில்லை. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறையை ஏற்படுத்தினார். இன்று வரை அந்த முறை தொடர்கிறது.
அதன்பின் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா, 2012-13 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்தார். முதல்கட்டமாக சில ஆயிரம் பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி முறை இப்போது 12,736 பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இவற்றில் 6,22,006 மாணவர்கள் பயில்கின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை தொடங்கப்பட்டதற்கு ஆட்சியாளர்கள் கூறும் காரணம்…. ‘‘ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்கள் விரும்புகின்றனர்’’ என்பது தான். இதுதொடர்பாக கடந்த 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த விளக்கம்:
‘‘தங்களுடைய குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடையே இருப்பதால், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் ஆங்கில வழி கல்வியினை போதிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.
ஏழை, எளிய பெற்றோர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும்; ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய ஆற்றலும் உள்ள குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகள் எல்லாம் ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவேதான், கட்டணம் ஏதும் செலுத்தாமல் ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான், 6,594 அரசு பள்ளிகளில், ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது’’ என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
திணிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி
1978-ஆம் ஆண்டு வரை தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளும், தமிழ்வழிக் கல்வி முறையும் மட்டும் தான் நடைமுறையில் இருந்தன. பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டன. தமிழ் வழிக் கல்வி மூலம் தமிழ் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. ஆனால், யாருமே கேட்காமல் ஆங்கில வழிக் கல்வியை திராவிடக் கட்சிகளின் அரசுகள் ஊக்குவித்தன. அது படிப்படியாக வளர்ந்து புரியாவிட்டாலும் ஆங்கில வழியில் கற்பது தான் கவுரவம் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதும் கூட அந்த பொய்யான மனநிலையை உடைக்க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்தனர். அதன்விளைவு தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 54 அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை. அந்தப் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆங்கில வழியில் மட்டும் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அப்போது மாணவர்கள் தமிழை படிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விடும். இத்தகைய சூழலில் தமிழ் மொழி எவ்வாறு வளரும்?
நாளை….. தமிழ் பயிற்றுமொழிக்காக போராட்டம்!
