Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

13. இறங்கி வந்த அரசு… முடிவுக்கு வந்த போராட்டம்!

தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  102 தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, இந்தப் போராட்டத்திற்கு சில நாட்கள் முன்பு தான் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்திருந்தது. அடுத்த சில மாதங்களில் மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது. எப்போதுமே மொழி சார்ந்த பிரச்சினைகள் அரசியல்ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்தப் போராட்டத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார் முதலமைச்சர் கலைஞர். அதற்காக தமிழ் உணர்வாளர்களுக்கும்,  தமிழ் வளர்ச்சி அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கும் இடையே 26.04.1999-ஆம் நாள் மீண்டும் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசு அளித்த உறுதிமொழிகள்

தமிழ் பயிற்று மொழி, தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களுக்குப் பிறகு அமைச்சர் தமிழ்க்குடிமகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

1) தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1991-ஆண்டிலேயே எங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். எனவே, எங்களுக்குக் கொள்கையில் வேறுபாடு கிடையாது. இதைச் செயற்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக வேறொரு மாநிலத்தில் அரசாணை பிறப்பித்திருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது நல்ல கொள்கை என்பதால் இதை எந்த வகையில் செயற்படுத்தலாம் என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்து நடைமுறைப்படுத்த அரசு ஆவண செய்யும்.

2) பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள வகுப்புகளுக்கு மேல் கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதற்குக் கேட்கப்பட்டது. இத்திட்டத்தினை, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு மறுத்து விட்டது. என்றாலும் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடனும் என்னுடனும் போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளாகவே வருமாறு செய்தால், நாமே செய்துவிடலாமா? அல்லது தில்லியில் இசைவைக் கேட்கலாமா? என்பது குறித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் உயர்கல்விச் செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசப்பட்டது.

இப்பாடத்திற்குரிய அனைத்து நூல்களும் தயாராக உள்ளன. மாணவர்களுடைய ஆர்வத்திற்கும் குறைவில்லை. வெகு விரைவில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, உயர்கல்விச் செயலாளர் வரும் 29.0-4.19-99 அன்று தில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார். இங்கும் உரிய அறிஞர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

2422 பள்ளிகளில் தமிழ் இல்லை

3) போராட்டக் குழுவினரின் முக்கிய, முதலாவது கோரிக்கை ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தமிழ், பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். அரசின் சார்புடைய பள்ளிகள் மொத்தம் 41,317 உள்ளன. இவற்றில் ஏற்கனவே தமிழ்பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கிறது. நாம் முடிவெடுக்க வேண்டியது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் –  2,187; சி.பி.எஸ்.இ. பள்ளிகள் – 194, ஆங்கிலோ இந்தியர்கள் பள்ளி – 41, ஆக மொத்தம் 2,422 பள்ளிகள் ஆகும்.

தமிழ் வழியில் பயிற்றுவிப்பது தொடர்பாக எங்களுக்கு இரண்டாவது கருத்தே கிடையாது. காந்தியடிகள் ஏற்கனவே ‘‘நாம் தாய்மொழியில் படிக்காததால் அனைவரும் கோழைகள் ஆகிவிட்டோம். வீரம் சார்ந்த உணர்வை இழந்து விட்டோம்’’ என்று தெளிவாக ‘மாணவர்களுக்கு’ என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதிலும் சட்டச் சிக்கல் இருக்கின்றது. மேற்கண்ட 242-2 பள்ளிகளில் மொழிச் சிறுபான்மையினர்களுக்கான பள்ளிகளும் அடங்கும். மழலையர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை தமிழைப் பயிற்று மொழியாக்க ஆணையிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மெட்ரிகுலேசன் மற்றும் பிற பள்ளிகளிலும் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வல்லுனர் குழு

இது குறித்து விவாதித்து முடிவெடுக்க  இந்த வாரத்திற்குள் குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் கலைஞர் கூறியுள்ளார். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள், சான்றோர் பேரவையின் சில உறுப்பினர்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்தக் குழு முறையாகக் கூடி, ஆய்வு செய்து, சட்டப்படியான சிக்கல் என்ன என்பதையும், அவற்றைத் தீர்ப்பதற்காக வழிமுறைகள் குறித்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கும்.

கலைஞர் அவர்களின் கருத்துப்படி வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக வரும் சூன் மாதத்திற்குள் சட்டப்படியாக சிக்கல் தீர்க்கப்படுவதற்கு ஆவண செய்யப்படும். எனவே, மேற்கண்ட விளக்கங்களை ஏற்று அவர்கள், போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது. 1008 மொழிச் சிறுபான்மை பள்ளிகள் அனைத்திலும் தமிழாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டால், அவர்கள் தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலம் மற்றும் தமிழையும் ஒரு பாடமாக நடத்துவதாக  அரசுக்கு உறுதி அளித்துள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

16.11.98 அன்று கலைஞர் அவர்கள் அறிவித்த முடிவினை அனைவரும் (மொழிச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் – தெலுங்கு, கேரள சமாஜம், உருது மொழி ஆசிரியர் கூட்டமைப்பு போன்றவர்கள்) வரவேற்றுள்ளனர். மேற்கண்ட அமைப்பினர் தமிழாசிரியர் பணியிடம் தந்தால், தமிழ்ப்பாடம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். தமிழாசிரியர் பணியிடங்கள் உருவாக்குவது தொடர்பாக வெகு விரைவில் முடிவெடுக்கப்படும். எனவே, போராட்டக் குழுவினர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவதாக பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் தமிழ்க்குடிமகன் கூறினார்.

போராட்டக்குழு அறிக்கை

தமிழ்  பயிற்று மொழி தொடர்பாக அமைச்சர் தமிழ்குடிமகன் அளித்த உறுதிமொழிகள் குறித்து போராட்டக்குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு அருகில் உள்ள  ஒரு வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து  போராட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

எங்கள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பாகப் போராட்டக் குழுவினர் முன் வைத்த மூன்று கோரிக்கைகளைப் பற்றி அரசு மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும், மாண்புமிகு அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் நேரில் வந்து விளக்கியமைக்கும் நன்றி. நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில், உயர்கல்வியில் தமிழ்வழி எனும் எமது இரண்டாவது கோரிக்கை குறித்தும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனும் மூன்றாவது கோரிக்கை குறித்தும் அரசின் சார்பில் விளக்கம் அளித்ததை ஏற்று அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி இரண்டு கோரிக்கைகளில் உள்ள சட்டம் மற்றும் தொழில்நுட்பரீதியான சிக்கல்களை ஆய்வு செய்து படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்த ஆவண செய்வதாக அரசு உறுதியளித்திருந்தது. எங்களது முதற்கோரிக்கையாகிய குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வி தமிழுலகு தழுவிய மிக உயிரான கோரிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். ஒன்று முதல் ஐந்து வகுப்புக்கு உரிய தொடக்கப் பள்ளிகள், நாடு முழுவதும் பரவியுள்ள நர்சரி பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் அரசு எங்களிடம் தெரிவித்ததுபோல் ஏப்ரல் 30-க்குள் குழு அமைக்க வேண்டும் என்றும் மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்றும், அவ்வறிக்கையின் அடிப்படையில் ஆணை பிறப்பித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் விழைந்து வேண்டுகிறோம். இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

– இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மீண்டும் பேச்சு

அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்தில் போராட்டக் குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று அமைச்சர் தமிழ்க்குடிமகனைச் சந்தித்துப் பேசினார்கள்.  அவர்களுடன் பேச்சு நடத்திய  தமிழ்க்குடிமகன் பேச்சுக்களின் விவரங்களைத் தெரிவித்தார்.  பின்னர் போராட்டக்குழுவினரை சந்தித்த தமிழ்க்குடிமகன், “தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில், தமிழ்வழிக் கல்விக் கொள்கையில் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கும், தமிழக அரசுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தமிழ் வழிக் கல்வி நடைமுறைக்கு வருவது குறித்த சாத்தியக் கூறுகள் அனைத்தையும் ஆராய்வோம்’’ என்று கூறினார்

அதுமட்டுமின்றி,  தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை  போராட்டக்குழுவினரிடம்  வழங்கினார்.

அதில்,’’அரசுச் சார்பான 41,417 பள்ளிகளிலும் இப்போது தமிழே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள மெட்ரிகுலேசன் முதலான 2,402 பள்ளிகளில் மட்டுமே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று முதல் ஐந்து வகுப்புக்குரிய தொடக்கப்பள்ளிகள், நாடு முழுதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் வரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘தமிழ்’ ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற கொள்கையில் தமிழ் அறிஞர்களுக்கும் – தமிழக அரசுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. இக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு ஏப்ரல் 30-க்குள் ஒரு குழு அமைக்கப்படும். மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து பரிந்துரை அறிக்கை பெற்று வரும் கல்வியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு செய்யும்” என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

முடிவுக்கு வந்த போராட்டம்

அமைச்சருடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்ட போராட்டக்குழுவினர் வள்ளுவர் கோட்டத்திற்கு திரும்பினார்கள்.   அங்கு திரண்டிருந்த  தமிழ்  உணர்வாளர்களிடையே உரையாற்றிய போராட்டக்குழுத் தலைவர் தமிழண்ணல், “என் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்வுப் பூர்வமாக இங்கே திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்களே! பட்டினிப் போராளிகளே! உன்னதமான உங்கள் தமிழுணர்வுக்கும், எழுச்சிமிக்க உங்கள் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்று அறிவித்தார்.

தொடர்ந்து,  பேச்சுவார்த்தை விவரங்களை விளக்கிய தமிழண்ணல், அரசு போராட்டக் குழுவினருக்கு எழுத்துப் பூர்வமாக அமைச்சர் தமிழ்க்குடிமகன் கையொப்பத்துடன் அளித்த அறிக்கையை அனைவரும் கேட்கும் வண்ணம் படித்தார்.  அரசின் உறுதிமொழிகளை  தமிழுணர்வாளர்கள் கைத்தட்டி வரவேற்றனர். பின்னர் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் வள்ளுவர் கோட்டத்திற்கு விரைந்து வந்தார். போராட்டக் குழுவினருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் பங்கேற்ற  அனைவர் முகத்திலும் வெற்றிக் களிப்பு தென்பட்டது. தமிழ் பயிற்றுமொழியாகும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் நிறைந்தது.

நாளை….. தமிழ் பயிற்று மொழி: கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை

error

Enjoy this blog? Please spread the word :)