எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?
14. தமிழ்: கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை!
தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து 102 தமிழ் உணர்வாளர்களும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைக் கைவிட்டனர். தமிழறிஞர்கள் பலர் மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள். ஆனால், அடுத்தடுத்து கிடைக்கப் போவது ஏமாற்றம் தான் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் அரசால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர்.
தமிழ் பயிற்று மொழியாக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பற்காக 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி போராட்டக்குழு மீண்டும் கூடியது. அப்போது தமிழை பயிற்றுமொழியாக அறிவிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் குழுவில் தமிழ்ச் சான்றோர் பேரவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இளவரசு, புலவர் த.சுந்தரராசன், புலவர் கி.த.பச்சையப்பன், தோழர் தியாகு, பேராசிரியர் சோ.விருத்தாசலம், வழக்குரைஞர் சேவியர் அருள்ராசு ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான குழுவினர் அமைச்சர் தமிழ்க்குடிமகனை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினர். அதை ஏற்றுக் கொள்வதாக அவரும் அறிவித்தார்.
பிரதிநிதித்துவம் மறுப்பு
அடுத்த இரண்டாவது நாளே, அதாவது ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்கும் விஷயத்தில் அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் குழுவை அமைத்து அரசு ஆணையிட்டது. அக்குழுவின் உறுப்பினர் பட்டியலே தமிழறிஞர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. போராட்டக்குழுவின் சார்பில் சில உறுப்பினர்கள் வல்லுனர் குழுவில் இடம் பெறுவார்கள் என்று தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி போராட்டக்குழு சார்பில் 7 தமிழறிஞர்களின் பட்டியல் அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், நீதிபதி மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவில் போராட்டக்குழு சார்பில் தமிழண்ணல் பெயர் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது. நீதியரசர் மோகன், தமிழறிஞர் தமிழண்ணல் தவிர புலவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ச.முத்துக்குமரன், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி ஆகியோர் மட்டுமே குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வல்லுனர் குழுவில் போராட்டக்குழுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் மட்டுமே அளிக்கப்பட்டது அவர்களுக்கு மிகவும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது.
அதற்கு அடுத்த வாரம் போராட்டக்குழுவினருக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வல்லுனர் குழுவின் பணி வரம்பு குறித்து தமிழக அரசின் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியானது. அதன் விவரம் வருமாறு:
பள்ளிக்கல்வித் துறை 03.0-5.-1999 நாளிட்ட அரசாணை எண் 117-&இன்படி, மழலையர் பள்ளிகள் முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி வரையில் தமிழ் மொழி வழி கற்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்திட உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் மோகன் அவர்களைத் தலைவராகவும் அறிஞர்கள் நால்வரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கேட்பு
மேற்படி குழு தமிழ்வழிக் கல்வி குறித்து, பொதுமக்கள் கருத்துக்களை நேரில் கேட்டறியக் கருதியுள்ளதால், மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் மாலை 3-.00 மணி முதலாக சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்ட மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில் அந்தக் குழுவைப் பொதுமக்கள் நேர்முகமாக சந்திக்கலாம். பொதுமக்கள் நேரில் வந்து வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தங்களின் கருத்துக்களை குழுவினரிடம் தெரிவிக்கலாம் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் அறிக்கை தமிழறிஞர்களையும், தமிழுணர்வாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழ் வழிக் கல்வி என்பது தமிழர்களின் உரிமை. அதை மதித்து தமிழ் வழிக் கல்விக்கான சட்டத்தை இயற்றுவதை விட்டு விட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது தேவையற்றது என்று தமிழறிஞர்கள் கருதினர். அரசு தங்களை ஏமாற்றுவதாக நினைத்தனர்.
திரண்டு வந்த தமிழ் உணர்வாளர்கள்
தமிழக அரசின் இந்த முடிவு குறித்து அமைச்சரிடமோ, அரசிடமோ தமிழறிஞர்களால் முறையிட முடியவில்லை. எனினும், வல்லுனர் குழுவின் தலைவர் நீதியரசர் மோகன் உள்ளிட்டோரிடம் இதுகுறித்து தமிழறிஞர் தமிழண்ணல் தமது வருத்தத்தை பதிவு செய்தார். ஆனாலும், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. 1999-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் 20-ஆம் தேதி தொடங்கும் என்று மட்டுமே வல்லுனர் குழு சார்பில் அறிக்கை வெளியானது.
கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெறும் நிலையில், சென்னையில் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலப் பள்ளிகள் இருப்பதால், அவற்றின் நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு கருத்துத் தெரிவித்து அரசின் முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வாய்ப்பிருப்பதாக போராட்டக்குழு கருதியது. அந்த வாய்ப்பை முறியடிக்கும் நோக்குடன் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் பயிற்றுமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி கருத்துக் கேட்பு நடந்த மே 20, 21,22 ஆகிய மூன்று நாட்களும் சென்னையில் அதிக எண்ணிக்கையில் திரண்ட தமிழ் உணர்வாளர்கள் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். அதன் பயனாக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் தமிழுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். இதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக போராட்டக்குழுவினர் எண்ணினர்.
அறிக்கை தாக்கல்
கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து சரியாக ஒரு மாதம் கழித்து 21.06.1999 அன்று காலை முதலமைச்சர் கலைஞரை சென்னை கோட்டையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்த நீதிபதி மோகன் தலைமையிலான குழு, தங்களின் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதை தங்களுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாக தமிழறிஞர்கள் நினைத்தனர்.
தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையை வெளியிடுமாறும், நடைமுறைப்படுத்துமாறும் அரசுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதப்பட்டன. தமிழை பயிற்றுமொழியாக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி நீதியரசர் மோகன் குழு அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். தமிழ் பயிற்று மொழி குறித்த முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அது குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து முடிவு செய்வதாகவும் கலைஞர் தெரிவித்தார்.
சட்டம் இல்லை…. அரசாணை உண்டு
1999 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன. மத்தியில் புதிய அரசு பதவியேற்றது. அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூடி தமிழை பயிற்று மொழியாக்குவது குறித்த சட்டத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞரோ, தமிழறிஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான அரசாணை எண் 324-ஐ 1999-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:
(1) அரசாங்கத்தின் மொழிக் கொள்கைகள் பற்றிய ஆணைகள் தொடர்ந்து அரசாணைகள் மூலமே அறிவிக்கப்படும்.
(2) அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளிகள், உதவி பெறும், உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்) முதல் மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்.
(3) மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்.
(4) 2000-2001 முதல் மூன்றாண்டு காலத்திற்குள் தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழி என்பது நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழறிஞர்கள் ஏமாற்றம்
தமிழ் பயிற்று மொழி என்பது சட்டமாக்கப்பட்டால் தான் நிலைத்து நிற்கும்; நீதிமன்ற ஆய்வுகளைத் தாங்கும் என தமிழறிஞர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்கு மாறாக இதுகுறித்து அரசாணை பிறப்பித்ததுடன் கலைஞர் அரசு நிறுத்திக் கொண்டது. இந்த அரசாணை நீதிமன்றத்தில் நிற்காது என்று தெரிந்தும் கலைஞர் அரசு அதை செய்தது. தமிழை பயிற்றுமொழியாக்குவதில் அரசு இந்த அளவுடன் அதன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.
அதுமட்டுமல்ல…. அடுத்த ஒரு மாதத்தில் தமிழறிஞர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சியை கலைஞர் அரசு அறிவித்தது. 19.11.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இருந்தால் தமிழ் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்.
ஆனால், 27.12.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 355இன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தமிழ், தாய்மொழி அல்லது ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் மெட்ரிக் பள்ளிகளில் 6 -ஆம் வகுப்புக்கு மேல் தமிழும் பயிற்று மொழியாக இருக்கலாம்; ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்கலாம் என்ற இரண்டும் கெட்டான் நிலையை அப்போதைய தமிழக அரசு ஏற்படுத்தியது.
இரத்தான அரசாணை;
உறங்கும் மேல்முறையீடு
இதனிடையே எது நடக்கக்கூடாது என்று தமிழறிஞர்கள் நினைத்தார்களோ அது நடந்தது. தமிழை பயிற்றுமொழியாக அறிவித்து தமிழக அரசு 19.11.1999ஆம் தேதி பிறப்பித்த அரசாணை 324ஐ எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் பயிற்று மொழி அரசாணையை ரத்து செய்து 20.4.2000 அன்று தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் 10.7.2000 அன்று உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு 22 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு உயிரூட்ட தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
நாளை… தமிழ் கட்டாய பாடச் சட்டம்!
