Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

15. தமிழ் கட்டாயப் பாடச் சட்டம்!

தமிழ் பயிற்றுமொழி என்பது சற்று அதிக இலக்கு. தமிழ் கட்டாயப்பாடம் என்பது மிகவும் சாதாரணமான இலக்கு. ஆனால், அந்த சாதாரணமான இலக்கைக் கூட தமிழகத்தை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிட ஆட்சியாளர்களால் எட்ட முடியவில்லை என்பது தான் மிகவும் வேதனையான உண்மை ஆகும். தமிழைப் பயிற்று மொழியாக்குவது சாத்தியமில்லாத இலக்கு அல்ல. அதை சாத்தியப்படுத்த முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.

உலகின் மூத்த மொழிகளில் முக்கியமானது தமிழ் மொழி. ஆனால், தமிழை படிக்காமலேயே பள்ளிப்படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்து பட்டம் பெறலாம் என்ற அவல நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்; அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழால் ஆட்சிக்கு வந்த திமுகவும், அதிமுகவும் இந்த விஷயத்தில் மனத்தூய்மையுடன் எதையும் செய்யவில்லை.

1996-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற தமிழறிஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதற்காக சட்டம் நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாணை மட்டுமே பிறப்பித்தார். அவ்வாறு அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து சரியாக ஐந்தாவது மாதத்தில் அந்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அந்த வழக்குக்கு உயிரூட்டுவதற்கு தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, இரு கட்சிகளும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்து தங்களின் தமிழ் எதிர்ப்பு நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தின. தங்களுக்கு ஏதேனும் நெருக்கடி வந்தால் மட்டும் தான் அதற்கான கேடயமாக தமிழைத் தூக்கிப் பிடிப்பார்கள் திராவிடக் கட்சிகள்.

இந்திக்கு ஜெயலலிதா ஆதரவு

அப்படி ஒரு தருணத்தில் தான் தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க முடியாவிட்டாலும், அறிவியல் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் முடிவை 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா எடுத்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவது குறித்த வினாவுக்கு விடையளித்த ஜெயலலிதா,‘‘ மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்கினால் தமிழக பள்ளிகளில் இந்தியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்தார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் இந்தியைத் திணிக்க ஜெயலலிதா துடிப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன.

இதனால் ஏற்பட்ட அவப்பெயரை நீக்க வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் என்ற பாடம் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அப்போதைய கல்வித்துறை அமைச்சர் செம்மலை,‘‘தமிழகத்தில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால் பள்ளிகளில் தமிழை கட்டாயப்பாடமாக்கும் திட்டத்தையும் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, அதற்கு மாற்றாக ஒன்றா-ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தில் அறிவியல் தமிழ் என்ற புதிய பாடப்பிரிவு சேர்க்கப்படுகிறது. இதை அனைத்துப் பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

ஜெயலலிதா அறிவிப்பு; காற்றோடு போனது

அதன்படி, 2003-04 ஆம் கல்வியாண்டில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. 15.08.2003 அன்று சென்னை கோட்டையில் விடுதலை நாளையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,“2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்படியாக அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஏற்கனவே எனது அரசு, ஆணை பிறப்பித்துள்ளது’’ என்று கூறினார். ஆனால், அதே நிகழ்வில் “இந்த ஆண்டிலிருந்தே அதாவது 2003-2004 ஆண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்துள்ளேன் என்பதை சுதந்திர திருநாளில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய அறிவியல் தமிழ் பாடம் அறிவிக்கப்பட்ட நிலையில், 12- ஆம் வகுப்பு வரை அப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டதாக ஜெயலலிதா கூறினார். அவர் தவறுதலாக அவ்வாறு கூறினாரா? அல்லது 12-ஆம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் பாடம் நீட்டிக்கப்படும் என்று கூறினாரா? என்பது தெளிவாக வில்லை. ஆனால், ஜெயலலிதா அறிவித்த கட்டாய அறிவியல் தமிழ் பாடம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கட்டாயத் தமிழ் பாடம்: பா.ம.க. கோரிக்கை

அதன்பின்னர் 2006-ஆம் ஆண்டில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகள் சிலவற்றை கலைஞர் நிறைவேற்றினார். அவற்றில் முதன்மையானது ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆகும். தமிழ் பயிற்று மொழி விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பயனில்லாமல் போனதால், தமிழ் கட்டாயமொழிக்கு சட்டம் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வர் கலைஞரை பா.ம.க. உரிமையுடன் கேட்டுக் கொண்டது. அதை கலைஞரும் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம்-2006 கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கலைஞர் அரசு கொண்டு வந்த இந்த சட்டம் பாராட்டத்தக்கது என்று நான் கூறுவேன். இந்த சட்டத்திற்கு சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்தது. இதற்காக நான் கலைஞருக்கு நன்றி தெரிவித்தேன். பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக்கும் விஷயத்தில் யாருக்கும் எந்த பாதிப்பையும் இந்த சட்டம் ஏற்படுத்தாது என்பது தான் இந்த சட்டத்தின் சிறப்பான அம்சமாகும்.

சாத்தியமான சட்டம்

தமிழ் கற்பதற்கான சட்டம் – 2006-ன்படி 2006-07 ஆவது கல்வியாண்டில் யார், யார் எந்தெந்த பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்தப் பாடத்தைத் தொடர்ந்து படிக்கலாம். அவர்கள் மீது தமிழ் மொழி திணிக்கப்படாது. 2007-08 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேருவோருக்கு மட்டும் தான் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும். அதற்கு அடுத்த ஆண்டில் ஒன்று, இரண்டு ஆகிய வகுப்புகளில் படிப்பவர்களுக்கு தமிழ் கட்டாயப்பாடமாக இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் கட்டாயப்பாடமாக நீட்டிக்கப்படும். மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் ஆகியவற்றுக்கு மட்டும் தான் தமிழ் கட்டாயப்பாடம் என்பது பொருந்தும். இவ்வாறு நீட்டிக்கப்பட்டு 2015-16 ஆம் ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு இருக்கும். இது தான் சட்டத்தின் நோக்கம்.

வழக்கம் போலவே தமிழ் கற்பதற்கான சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் கற்பதற்கான சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை 18.02.2008 அன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தமிழ் கட்டாயப்பாடச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஒரு மாநிலத்தின் மொழியை அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் அனைவரும் படிப்பது நல்லது தான் என்றும், இது நாட்டு ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.

‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ என்றும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியிருந்தது.

தடையை தடுக்காத தமிழக அரசு

ஆனால், தமிழுக்கு எதிரான சில சக்திகளும், ஆங்கிலத்தைக் காட்டி பிழைப்பு நடத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பத்தாம் வகுப்பில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். தங்கள் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பலர் அதற்கு முந்தைய வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாக படிக்கவில்லை என்பதால் அவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டன.

தனியார் பள்ளிகளின் இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோருவது எவ்வகையில் நியாயம்? ஆனால், இந்த நியாயத்தை எல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு தமிழ் கட்டாயப்பாடத்திலிருந்து தங்களுக்கு விலக்கு வேண்டும் என சில பள்ளிகள் கோரின.

தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருந்திருந்தால் அனைத்துப் பள்ளிகளும் தமிழை கற்பித்திருக்க வேண்டி இருந்திருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழ் உறுதியாக இல்லாததால் 2015-16 ஆம் ஆண்டில் சில பள்ளிகளுக்கு மட்டும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் 2016-17 ஆம் ஆண்டிலும் சில பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது.
அரசே அளித்த விலக்கு

அதன்பின் 2017-18 ஆம் ஆண்டில் மாணவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பே, சில தனியார் பள்ளிகளுக்கு அவற்றின் கோரிக்கையை ஏற்று தமிழ் கட்டாயப் பாடத்திலிருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்தது. பல ஆண்டுகள் போராடி தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ஒரு பிரிவினருக்கு விலக்களித்ததன் மூலம் தமிழ்நாட்டில் தமிழுக்கு பெரும் துரோகத்தை அப்போதைய அரசு செய்தது.

அதேநேரத்தில் 2015-16 ஆம் ஆண்டில் தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் மற்றொரு திருப்புமுனையை சந்தித்தது. 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் கற்றுத்தருதல் சட்டத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சேர்க்கப்படவில்லை. 2015-16 ஆம் ஆண்டு முதல் மற்ற பாடத்திட்ட பள்ளிகளும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன. இதுதொடர்பாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரம் வருமாறு:

கடந்த, 2006-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், தமிழக அரசு பாட திட்டத்தை சேராத இதர பள்ளிகளும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), முதல் வகுப்பில், தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும். பின், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீட்டிக்கப்படும். 2024-25ம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடம் இடம் பெறும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த அரசாணையிலிருந்தும் சில சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்கும் முயற்சி பாதி கிணறு தாண்டியிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் மட்டுமே முதல் மொழித் தாளாக நடத்தப்படும் போது தான் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும் முயற்சி மீதி கிணறையும் தாண்டும்.

நாளை ….
உயர்நீதிமன்றத்தில் தமிழ்… ஓர் உன்னத முயற்சி!
********

error

Enjoy this blog? Please spread the word :)