Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 18. அனாதையான

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. 18. அனாதையான

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

18. அனாதையான தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்!

‘‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’’ என்பது தாம் நமது முழக்கம் என்றாலும், ‘‘எங்கே தமிழ்… எதிலே தமிழ்’’ என்பது தான் வழக்கமாக இருக்கிறது.  இந்த நூலுக்கு ‘‘எங்கே தமிழ்?’’ என்று தலைப்பிடவும்  இது தான் காரணம் ஆகும். இந்த அவல நிலைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் தான்.

தமிழ் ஆட்சி செய்ய வேண்டிய தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஆட்சி செய்வதற்கு காரணம் மொழிக்கான அரசியலமைப்புச் சட்டம் மதிக்கப்படாதது தான். மொழிக்காக தனி அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா? என்று குழம்பிக்கொள்ள வேண்டாம். இந்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும், எத்தகைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆட்சியாளர்களுக்கு வழி நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அதேபோல், மொழி வளர்ச்சிக்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஆகும். இது தமிழ்நாட்டில் தமிழை அரியணையில் அமர்த்துவதற்கான முயற்சி ஆகும்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்

இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நிலையில், அடுத்த 50 நாட்களுக்குப் பிறகு 27.12.1956 அன்று  தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காமராசர் ஆட்சிக் காலத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு 1957-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஆளுனர் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஜனவரி 23-ஆம் தேதி இச்சட்டம்  அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்மூலம் தமிழர்களின் 120 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், ஆங்கில மொழியை ஆட்சி மொழியாக இந்திய மக்களின் மீது திணித்தனர். 1835ஆம் ஆண்டு மெக்காலே வெளியிட்ட ஆங்கில முறைக்கல்வி பற்றிய அறிக்கைக்குப் பின்னர், ஆங்கிலம் ஆட்சி மொழியானது. ஹார்டிங் 1844ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணையின்படி ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டும் அரசுப் பணியில் முன்னுரிமை பெற்றனர். ஆங்கிலம் படித்தால் தான் அரசு வேலை என்ற நிலை ஏற்பட்டதால், மரபு வழி தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் அதேநேரத்தில் ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் அடைந்தது. ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் போல ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் உயர்வானது என்ற புனைந்துரை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன் விளைவாக தமிழ் ஆண்ட தமிழகத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அரியணையில் ஏறியது.

கனவு நிறைவேறியது

இதற்கு எதிராகவும், தமிழகத்தில்  தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் போன்றோர் வலியுறுத்தினர். அதற்காக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களின் விருப்பம் 1956-ஆம் ஆண்டு தமிழகப் பேரவையில் இயற்றப்பட்ட ஆட்சி மொழிச்சட்டம் மூலம் நிறைவேறியது.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பாக சுவையான தகவல் ஒன்றை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் ஆட்சி மொழி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும்,  திருச்சி மாநகராட்சி தான் முன்னோடி ஆகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இப்போதுள்ள தமிழ்நாடு சென்னை மாகாணம் என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்   நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக 1951-ஆம் ஆண்டிலேயே  திருச்சி நகராட்சியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, திருச்சி நகராட்சியில் ஆட்சி மொழி கடந்த காலங்களில் ஏட்டளவில் மட்டுமின்றி செயலளவிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆட்சி மொழி என்பது  ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அடையாளம் ஆகும். அத்தகைய ஆட்சி மொழி தாய்மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா  தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார். ஆட்சி மொழி குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்து வருமாறு:

ஆட்சி மொழி: அண்ணாவின் கருத்து

“ஆட்சி மொழி என்பது மொழியால், மொழி சார்ந்த மக்களுக்காகச் செயல்படுவது ஆகும். மக்கள் ஒரு மொழியினராகவும், அவர்களுக்குரிய ஆட்சியின் மொழி வேறு ஒன்றாகவும் அமையுமாயின் அம்மக்களின் மொழியும், பண்பாடும், கலையும், நாகரிகமும், பொருளியலும், உலக அரங்கில் அவர்களைப் பற்றிய சமுதாய மதிப்பீடுகளும் தாழ்ந்து போகும். இதற்குக் காரணம் மக்கள் மொழிக்கும், ஆட்சி மொழிக்கும் தொடர்பின்றிப் போவதேயாகும். இவ்வாறு தொடர்பற்ற நிலை உருவாகாதிருக்க வேண்டுமெனில் ஆட்சி என்பது எம் மக்களுக்கு உரியதோ, அம்மக்களின் மொழியில் செயல்படுவதாக இருக்க வேண்டும். ஆட்சிமொழியாக ஒரு மொழி அமைவதற்கு எனத் தனியே எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் எதுவும் வரையறுக்கப் படவில்லை. ஒரு மொழி ஆட்சிமொழி ஆவதற்கு, அது தாய்மொழி என்னும் தகுதிக்கீடாக வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லை’’

– இவ்வாறு அறிஞர் அண்ணா ஆட்சி மொழி குறித்து கூறியிருக்கிறார். இந்தக் கருத்து தமிழகத்துக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகுக்கும் பொருந்தும். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலமும் ஒரு மொழியை ஆட்சி மொழியாக்கிக் கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 345 ஆவது பிரிவு வழங்குகிறது. எனினும், இந்த சட்டம் ஒரு மாநிலத்தின் தாய்மொழிக்கு எல்லையில்லா அதிகாரத்தையும், பயன்பாட்டு உரிமையையும் வழங்கவில்லை. மாநிலத்தின்  ஆட்சி மொழி என்பது அந்த மாநிலத்திற்குள் அந்த மாநிலத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட அமைப்புகள் மற்றும் மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டும் தான் என்ற அளவில் சுருக்கப்பட்டுள்ளது. மாநில ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படும் போது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் நடைபெற்றது. அதனால், மாநில மக்களின் உரிமைகளை முழுமையாக மதிக்காமல், இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் மாநில அளவில் ஆட்சி மொழிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மத்திய அரசு சட்டங்கள்

மாநிலத்திற்கென தனியாக ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஆட்சி மொழி தொடர்பான மத்திய சட்டங்கள் தான் எந்தெந்த இடங்களில் என்னென்ன மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். உதாரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(1) மற்றும் அவற்றின் உட்பிரிவுகள்ஆட்சி மொழி குறித்த  மத்திய சட்டப்பிரிவுகள் ஆகும். 348(1) பிரிவின் ‘ஏ’ உட்பிரிவின்படி  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். 348(1) பிரிவின் ‘பி’ உட்பிரிவின்படி  நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்ட மன்றத்தின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்படும் அனைத்து மசோதாக்கள் அல்லது சட்டத்திருத்தங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்; நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும், குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனைத்து விதிமுறைகளும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விதிகளை தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் எந்த வகையிலும் மாற்ற முடியாது. மத்திய சட்டத்துக்கு அவ்வளவு வலிமை.

அரசியலமைப்பு சட்டத்தில் ஆட்சி மொழி என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள சட்டங்களில் என்னென்ன கூறப்பட்டுள்ளனவோ, அதற்கு உட்பட்டு தான் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்  என்று தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழை முழுமையான ஆட்சி மொழியாக பயன்படுத்த முட்டுக்கட்டை ஏற்படுத்துபவை என்றாலும் கூட, இவற்றைக் கடந்து மாநில அளவில் தமிழை சிறப்பாக பயன்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன. இதற்காக தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின் 4-ஆவது பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை பயன்படுத்தி 1958-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாளில்  காமராசர் தலைமையிலான அரசு வெளியிட்ட முக்கியமான அறிக்கையின்படி முதலில் தட்டச்சுப் பொறிகள் இல்லாத அரசு அலுவலகங்களில், அதாவது கையினால் கடிதங்கள் எழுதி அனுப்பும் வேளாண்துறை முதல் வருவாய்த் துறை வரை பத்தொன்பது துறை அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1961 -63ஆம் ஆண்டுக் காலத்தில் இத்திட்டமானது மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. துறைத் தலைமை அலுவலகங்களைப் பொறுத்தவரையில் ஆட்சிமொழிச் சட்டம் 4 நிலைகளில் செயல்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது. அவற்றின் விவரம் வருமாறு:

4 நிலைகளில் தமிழ் ஆட்சி மொழி

முதல் நிலை: பொதுமக்களுக்கு எழுதப்படும் அனைத்துக் கடிதங்களும் தமிழ் பயன்படுத்தப் பெற வேண்டும்.

இரண்டாம் நிலை: சார்நிலை, மாவட்ட அலுவலகங்களுக்கு எழுதப்படும் அனைத்துக் கடிதங்களுக்கும் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.

மூன்றாம் நிலை: பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்களுக்குத் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.

நான்காம் நிலை: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்களுக்குத் தமிழ் பயன்படுத்தப்பெற வேண்டும்.

இதன்படி முதல்நிலை 1963ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பெற்றது. இரண்டாம், மூன்றாம் நிலைகள் முறையே 1965, 1968 ஆகிய ஆண்டுகளில் செயல்பாட்டு வந்தன. நான்காம் நிலை 1971ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. ஆட்சிமொழித் திட்டத்திலிருந்து அதுவரை சில அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்குகள் திரும்பப் பெறப்பட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையாக இத்திட்டத்தை நிறைவேற்ற வழி வகுக்கப்பட்டது. இந்த ஆணை மற்றும் முழுமையாக  கடைபிடிக்கப்பட்டிருந்தாலே தமிழகத்தில் தமிழ் தழைத்தோங்கியிருக்கும். ஆனால், ஆட்சி மொழிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழை வளர்க்க கடந்த 55 ஆண்டு கால ஆட்சிகளிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

அண்ணா அளித்த வாக்குறுதி என்ன?

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக ஆட்சிமொழித் திட்ட நிறைவேற்றக் குழு 1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஆவண செய்யவம், ஆட்சிமொழி அகராதியை வளப்படுத்தவும், சட்ட விதித் தொகுப்புகளை மொழிபெயர்க்கும் பணியை மேற்பார்வையிடவும், தனி அலுவலர் ஒருவர் அமர்த்தப்பட்டார். இவை தவிர தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை செயல்படுத்த இன்னும் பல குழுக்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் கனவு இன்றுவரை நிறைவேறவில்லை.

1968ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது, இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாகவும் அனைத்து நிலைகளிலும், கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்றுமொழியாகவும் வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பயிற்றுமொழித் திட்டத்திற்கென ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அவற்றால் பயனில்லை.

தலைமைச் செயலகத்தில் 25% தமிழ்

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதில்  திராவிடக் கட்சிகள் தோல்வியடைந்து விட்டன என்பதை கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளராக இருந்தவரும், பின்னர் அதிமுகவில் இணைந்து முக்கியப் பதவிகளை அனுபவித்தவருமான ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரி வை. பழனிச்சாமி புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். ‘‘ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கமாவது கீழ் நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் நல்ல முன்னேற்றத்தினை எய்தியுள்ளது. மேலே செல்லச் செல்லத்தான் முன்னேற்றத்தின் அளவு குறைந்துள்ளது. அரசின் பல்வேறு ஆணைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 விழுக்காடும், துறைத் தலைமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைமை அலுவலகங்களில் 75 விழுக்காடும், சார்நிலை அலுவலகங்களில் 100 விழுக்காடும் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் அமைய வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் தலைமைச் செயலகத் துறைகளில், 25 விழுக்காடு முதல் 35 விழுக்காடு, துறைத் தலைமை அலுவலகங்களில் 60&-70 விழுக்காடு, சார்நிலை அலுவலகங்களில் 70-&80 விழுக்காடு என்ற அளவில் தான் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் உள்ளது’’ என்று வை. பழனிச்சாமி  ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழக அரசின் அனைத்துக் கடிதத் தொடர்புகளும் தமிழில் தான் இருக்க வேண்டும்; அனைத்து அரசாசாணைகளும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும்; கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களின் பயனாக  ஆட்சி மொழி சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் விரைந்து செயல்படுத்த செயல்படுத்துவதற்காக  20.02.2018 அன்று மீண்டும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதனாலும் பயன் கிடைக்கவில்லை.

3 அரசாணைகள்… எதனாலும் பயனில்லை

உதாரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதை கட்டாயமாக்கி பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘‘பெயர்ப் பலகைகள் முழுக்க தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திலுள்ள பெரும்பாலான பெயர்ப்பலகைகள் பிற மொழிகளில் தான் உள்ளன. இதைக் கண்டித்தும்,  கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக தமிழில் பெயர்ப்பலகை  அமைக்கும் அரசாணையை செயல்படுத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தி 09.06.2010 அன்று சென்னையில் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் நான் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

‘‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கின்றனர். ஆனால் எங்கே தமிழ் என்று கேட்கும் நிலையில் தான் தமிழ்மொழியின் நிலை உள்ளது. இங்குதான் மொழிக்காக போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.கடந்த 1983ம் ஆண்டு முதல் இங்குள்ள ஆட்சியாளர்கள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக இதுவரை 3 அரசாணைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை 27 ஆண்டுகளாகியும்  செயல்படுத்தப்படவில்லை.

அரசு நினைத்திருந்தால், 27 நாட்களிலேயே அரசாணைகளை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம். தமிழுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். இனியாவது தமிழகத்திலுள்ள வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக வளாகங்களின் பெயர் பலகைகளை, தமிழில் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம்’’ என்று நான் வலியுறுத்தினேன்.
அதன்பின் 12 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், தமிழ் சார்ந்த விவகாரங்களில் எந்த முன்னேற்றமும்  எட்டப்படவில்லை. அது தான் கடந்த 55 ஆண்டு கால ஆட்சிகளால் தமிழுக்கு விதிக்கப்பட்ட சாபம் போலும்!

நாளை….. சீரழிக்கப்படும் செம்மொழி நிறுவனம்!

error

Enjoy this blog? Please spread the word :)