Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

3. தமிழ் வளர்த்த ஆழ்வார்கள்

தமிழை வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது. ஆழ்வார்கள் இயற்றியது வைணவ இலக்கியம். பெருமாளையும், அவர்களின் பல்வேறு அவதாரங்களையும் போற்றிப் பாடப்பட்டவை தான் ஆழ்வார்களின் பாடல்கள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை மொத்தம் 30 ஆண்டுகளில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகரஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் மொத்தம் 4000 பாடல்களை இயற்றியுள்ளனர். இவை அனைத்தையும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் நாதமுனிகள் என்பவர் தொகுத்தார். அந்த நான்காயிரம் பாடல்களும் இணைந்தது தான் நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகும். திவ்விய பிரபந்தம் என்றால் மேன்மையான பலவகைப் பாடல் தொகுப்பு என்று பொருளாகும்.

நான்கு பிரிவு; 24 வகை

நாலாயிர திவ்விய பிரபந்தம் மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு:
முதலாயிரம் -947 பாடல்கள்
பெரிய திருமொழி- 1134 பாடல்கள்
திருவாய்மொழி -1102 பாடல்கள்
இயற்பா -817 பாடல்கள்
ஆகியவையே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் நான்கு பிரிவுகள் ஆகும்.ஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவார். இவர் 1296 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்களைப் பாடியுள்ளார்.

அதேபோல், நாலாயிர திவ்விய பிரபந்தம் 24 வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம்  வருமாறு:
1.திருப்பல்லாண்டு, 2.பெரியாழ்வார் திருமொழி, 3.திருப்பாவை, 4.நாச்சியார் திருமொழி, 5.பெருமாள் திருமொழி, 6.திருச்சந்த விருத்தம் 7.திருமாலை, 8.திருப்பள்ளி எழுச்சி, 9.அமலனாதிபிரான், 10.கண்ணிநுண்சிறுத்தாம்பு,11.பெரிய திருமொழி,12.திருக்குறுந்தாண்டகம், 13.திருநெடுந் தாண்டகம்,14.முதல் திருவந்தாதி, 15.இரண்டாம் திருவந்தாதி, 16.மூன்றாம் திருவந்தாதி,17.நான்முகன் திருவந்தாதி, 18.திருவிருத்தம், 19.திருவாசிரியம், 20.பெரிய திருவந்தாதி, 21.திருஎழுகூற்றிருக்கை, 22.சிறிய திருமடல், 23.பெரிய திருமடல், 24.இராமானுச நூற்றந்தாதி ஆகியவையே நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் 24 வகைகள் ஆகும்.
தமிழை ஆழ்வார்கள் எவ்வாறு வளர்த்தனர்

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பக்திப் பாடல்கள். அவை அனைத்தும் பெருமாளை புகழ்ந்து பாடப்பட்டவை ஆகும். இவை எப்படி தமிழை வளர்க்கும் என்ற வினா எழலாம். ஆழ்வார்களின் பாசுரங்களில் பக்தியுடன் சேர்ந்து தமிழும், இசையும் பெருக்கெடுக்கும். அவர்களின் பாசுரங்களில்  தமிழ் துள்ளி விளையாடும். நாலாயிர திவ்விய பிரபந்தம் குறித்து அறியாதவர்கள் கூட, அதன் பாசுரங்களை, அவை நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பதை அறியாமலேயே மனதிற்குள் பாடுவார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்.

பச்சை மா மலைபோல் மேனிப்
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!

இந்தப் பாடல் தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதிய திருமாலையில் வரும் பாடல் ஆகும். பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கண்ணனைப் போற்றி இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழி தெரியாதவர்களும் இந்தப் பாடலை சரளமாக பாடுவார்கள் என்பது இதன் சிறப்பு ஆகும். அதுமட்டுமின்றி இந்தப் பாடலின் பொருள் வியக்க வைப்பதாகும்.

பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. “ஆயர் தம் கொழுந்தே” என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது.

ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது – முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர்.

கண்ணனை புகழ்ந்து பாடும் பணியைத் தவிர, இந்திர லோகத்தை ஆளும் பதவியை எனக்குக் கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உருகுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். இதன் மூலம் கண்ணனைப் புகழ்வது மட்டுமின்றி தமிழில் கவி பாடுவதும் தான் தமக்கு உவப்பான  செயல் என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆண்டாளும், திருப்பாவையும்

ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஆண்டாள். ஆண்டாள் தனது 15ஆம் வயதில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

மார்கழி மாதம் பிறந்தால் ஆண்டாள் அருளியுள்ள முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவை தொகுப்பினை ஒரு நாளைக்கு ஒரு பாடல் என்ற அளவில் பாடுவது வைணவர்களின் வழக்கம் ஆகும். திருப்பாவை பாடலின் விரிவான விளக்கங்கள் அவை சார்ந்த கருத்துகளளை போதித்தல் ஆகியவை மார்கழி மாதத்தில் பல பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெறும் நிகழ்வுகளாகும்.

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே. ஆண்டாள் பாடல்களில் தமிழ் தேனாகப் பாயும். அதனால் தான் ஆண்டாளை,‘‘ கோதை ஆண்டாள்…. தமிழை ஆண்டாள்’ என்று போற்றியுள்ளனர்.

தமிழ் – வழிபாட்டு மொழி

ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த இன்னொரு சேவை தமிழை வழிபாட்டு மொழியாக்கியது தான்.  ஆழ்வார்கள் காலத்திற்கு முன் சமஸ்கிருதம் தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. ஆனால், ஆழ்வார்கள் தான் தாய் மொழியில் இறைவனை அணுக வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்ததுடன் அதற்கு செயல்வடிவமும் கொடுத்தனர். இதை “விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய் கற்ற மொழியாகிக் கலந்து” என்ற திருமழிசைப் பிரானின் இனிய பாசுரத்தால் அறியலாம். மெய்யியல் ஞானம் உயர் குலச் சொத்தாக இருந்ததை மாற்றி உயர் வேதத்தை தமிழ் செய்து தமிழ் மறையை எக்குலத்தோர்க்கும் சமம் என்று வைத்தனர் வைணவர்கள். இதை விட சிறந்த தமிழ்த் தொண்டை எவராலும் செய்து விட முடியாது.

ஆழ்வார்களின் இந்த தமிழ்த் தொண்டை புரட்சிக்கவி பாரதிதாசன்,
‘‘முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?’’ என்கிறார்.

ஆழ்வார்கள் ஆக்கி வைத்த ஆதி தமிழ் மறுமலர்ச்சியால் இன்றளவும் வைணவத் திருக் கோவில்களில் தமிழ் பாசுரங்களால்தான் தினமும் ஆண்டவனுக்கு ஆர்ச்சனை ஆகிறது. தமிழ் முன் செல்ல பெருமாள் பின் தொடர அதன் பின் மற்றவற்றை அணிவகுக்க வைத்த பெருமை தமிழகத்தில் வைணவத்திற்கே சாரும்.

இறைவழிபாட்டில் ஆழ்வார்கள் புரட்சி செய்தார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் அவர்கள் எழுதிய நாலாயிர திவ்விய பிரபந்தம் தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன .தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்கள் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு.

இவ்வாறாக தமிழை ஆலயங்களில் தொடங்கி அகிலம் முழுவதும் தமிழைக் கொண்டு சென்றது ஆழ்வார்களின் அரிய பணி ஆகும். இதற்கு சற்றும் சளைக்காத வகையில் தமிழுக்கு பணியாற்றியவர்கள்  நாயன்மார்கள் ஆவர்.

நாளை….  நாயன்மார்களின் தமிழ்த் தொண்டு!

error

Enjoy this blog? Please spread the word :)