Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

8. ‘‘இந்த நாளில் இந்தி ஒழியப் போகிறது’’

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி மொழிப்போர் நாளாக  கடைபிடிக்கப் படுகிறது. 1938-39 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று  நடராசன் – தாலமுத்து செய்த உயிர்த்தியாகம் அப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. 1965-ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஓராண்டுக்கு முன்பே தொடங்கி வைத்தவர் கீழப்பழுவூர் சின்னசாமி. தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக தம்மையே மாய்த்துக் கொண்ட அந்த வீரப் போராளியின் நினைவு நாள் தான் மொழிப்போர் தியாகிகள் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

இராஜாஜி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தித் திணிப்பு முயற்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் பயனாக ஆங்கிலேய அதிகாரிகளால் திரும்பப் பெறப்பட்டது.  ஆனால், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை கொடுத்து விட்டு வெளியேறியதுமே இந்தித் திணிப்பு மீண்டும்  தொடங்கியது. 1948-ல் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் வெடித்ததால் மத்திய, மாநில அரசுகள் பின்வாங்கின. அதுமட்டுமின்றி இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என நேரு வாக்குறுதி அளித்தார்.

ஆட்சி மொழிகள் சட்டம்

அப்போது பின்வாங்கிய மத்திய அரசு அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து இந்தியைத் திணிக்கத் துடித்தது. அதற்காக ஆட்சி மொழிகள் சட்ட மசோதாவை 1963-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார். அந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற நிலை மாற்றப்படும்; 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்தி மட்டும் தான் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும். மத்திய அரசு அலுவல்கள் அனைத்தும் இந்தி மொழியின் மூலம் தான் மேற்கொள்ளபடும் என்பது தான்.  வேண்டுமானால் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று பட்டும்படாமலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தெளிவான இந்தித் திணிப்பு ஆகும்.

இதனால் அதிர்ச்சியடைந்த அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதை கடுமையாக  எதிர்த்தார்.  திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதை எதிர்த்த அண்ணா, இதை ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்தார். தொடரலாம் என்று பட்டும் படாமலும் இருந்தால் பின்னாளில் வரும் ஆட்சியாளர்கள், இந்தியுடன் ஆங்கிலம் ஆட்சிமொழியாக  தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டார். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர்.

அண்ணா – நேரு விவாதம்

அறிஞர் அண்ணாவின் வாதத்திற்கு விளக்கமளித்த ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான may மற்றும் shall இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். அதற்கு பதிலளித்த அண்ணா, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக்கொண்டால் அரசிற்கு shall என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று ஆட்சி மொழியாகத் தொடரவேண்டும் என்று கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப்படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் அண்ணாவின் வாதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. ஆனாலும் இதை ஏற்றுக் கொள்ளாத அறிஞர் அண்ணா, இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறை தண்டனையை அனுபவிக்கத் தயார் என்று அறிவித்தார்.

‘‘விளைவை குறித்து அஞ்சப்போவதில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்து போராடுவோம். கடந்த ஓராண்டு காலத்தில் நாம் உருவாக்கிய அமைதியான சூழ்நிலையையும், ஒற்றுமை மனப்பான்மையையும் குலைத்து குரோதத்தை இம்மசோதா ஏற்படுத்துகிறது.  நான் அரசியலில் மெதுவாகச் செல்பவன். அவசரமாக போய் குழியில் விழுந்து விட மாட்டேன். அதற்காக பயந்தவன் என்றோ, அஞ்சி ஒதுங்குபவன் என்றோ யாரும் என்னை நினைத்து விட வேண்டாம். இந்தியை எதிர்க்கும் போராட்டத்தில் 4 ஆண்டுகள் அல்ல 40 ஆண்டுகள் ஆனாலும் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.’’ என்று அறிஞர் அண்ணா ஆவேசமாகக் கூறினார்.

திமுக பொதுக்குழு

அத்துடன் நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கான உத்திகளை வகுக்க 1963-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 8-ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தையும் அறிஞர் அண்ணா கூட்டினார். அக்கூட்டத்தில் இந்தித் திணிப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இந்தித் திணிப்புக்கு  எதிராக திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், அதற்காக கலைஞர் தலைமையில்  போராட்டம் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சேலம், தஞ்சை, நெல்லை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. அடுத்தக்கட்டமாக இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவைத் தீயிட்டுக் கொளுத்தும்   போராட்டத்தை நடத்துவதென சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்தகைய போராட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த அண்ணா வழியிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பல இடங்களில்  கலைஞர், என்.வி.நடராசன் உள்ளிட்டோர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விரைவாக விசாரித்து முடிக்கப்பட்ட அந்த வழக்குகளில் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் தலா 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1964&ஆம் ஆண்டின் முற்பகுதிவரை நீடித்த இப்போராட்டங்களில் பங்கேற்ற திமுக தலைவர்கள் பலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கீழப்பழுவூர் சின்னசாமி

அந்த நேரத்தில் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத திருப்பம் நிகழ்ந்தது. இப்போதைய அரியலூர் மாவட்டத்திலும், அப்போதைய திருச்சி மாவட்டத்திலும் உள்ள கீழப்பழுவூர்   கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் 25.01.1964 அன்று காலை திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு சென்று தமது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அதனால் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் ‘‘ தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’’ என்று முழக்கமிட்டவாறே உயிர் நீத்தார்.  அதற்கு முதல் நாள் தமது சொந்த ஊரில் உள்ள அனைவருக்கு இனிப்பு வழங்கிய சின்னசாமி,‘‘ இந்த நாளில் இந்தி ஒழியப் போகிறது; தமிழ் வாழப்போகிறது’’ என்று  மகிழ்ச்சியுடன் கூறினார். தாம் இறந்தாலும், தமது மொழி வாழ வேண்டும் என்பது தான் அவரது நோக்கமாக இருந்தது. அதனால் தான் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் தீக்குளித்தார். தீ உடலைத் தீண்டும் போது அதனால் ஏற்படும் வலியைப் பொருட்படுத்தாமல் ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக’’ என்று முழக்கமிடும் அளவுக்கு அவருக்கு மன உறுதி இருந்திருக்கிறது. அன்னை தமிழை அவர் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? வாழ்க சின்னசாமியின் புகழ்!

புத்த துறவியின் தாக்கம்

கீழப்பழுவூர் சின்னசாமி எரியும் தீப்பிழம்புகளுக்கு தன்னை பலி கொடுத்ததற்கு தூண்டுதலாக அமைந்தது வியட்நாமில் புத்தமதத் துறவி ஒருவர் அடக்குமுறைக்கு எதிராக இதேபோல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தான். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் வியட்நாம் இருந்தபோது, இங்கோ தின் தியம் என்ற கொடுங்கோலர் ஆட்சி செய்தார். அவர் அங்குள்ள புத்த துறவிகளை கொடுமைப்படுத்தினார். அதைப் பார்த்து திச் குவாங்க் டக் என்ற புத்தமதத் துறவி கொதித்தெழுந்தார். கொடுங்கோலன் தின் தியம் ஆட்சியின் அவலங்களை உலகுக்கு அம்பலப்படுத்த தீர்மானித்தார்.

ஜூன் 11, 1963-இல் சாய்கானின் முக்கிய வீதி ஒன்றுக்கு, இரண்டு  துறவிகளோடு ஒரு காரில் வந்து இறங்கினார் குவாங் டக். நடுவீதிக்கு சென்று அமைதியாக தியான நிலையில் அமர்ந்துக் கொண்ட இவர் மீது அவரின் சக துறவி ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். பிறகு தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார். நான்கு அடி உயரம் தீ கொழுந்துவிட்டு எரிந்த போதும் சத்தம் போடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர். காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் சுற்றி நின்ற புத்த பிட்சுகளை மீறி அவர்களால் செல்ல முடியவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி தரையில் பயபக்தியோடு மண்டியிட்டு, எரிந்துக்கொண்டிருந்த துறவியை தொழத் துவங்கினார். பெரும்பாலானோர் அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, சிலர் அலறவும், சிலர் பிராத்தனை செய்யவும் துவங்கினர்.

அங்கே குழுமி இருந்த புத்தத்துறவிகளும் அந்த வழியாகக் கடந்து சென்ற பொதுமக்களும் எரிந்து கொண்டிருந்த துறவியின் முன் மண்டியிட்டு வணங்கத் தொடங்கினார்கள். ஒலிபெருக்கியில் துறவிகள் தொடர்ந்து முழக்கமிடத் துவங்கினர். “ஒரு புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார், ஒரு புத்தத்துறவி தியாகி ஆகிறார்” என்று அவர்கள் முழக்கமிட்டனர். தியான நிலையிலேயே பத்து நிமிடங்கள் எரிந்த அவரின் உடல், முழுமையாக எரிந்தப் பின்பு மெதுவாக முன்பக்கமாக சாய்ந்தது. அங்கே இருந்த துறவிகள் ஒரு மஞ்சள் துணியில் அவரின் சாம்பலையும் மற்ற பாகங்களையும் எடுத்து சவப்பெட்டியில் அடைத்தனர். குவாங் டக் எந்த உறுதியுடன் தீக்குளித்தாரோ, அதே உறுதியுடன் தான் சின்னசாமியும் தீக்குளித்தார். சின்னசாமியின் இந்த செயல் இந்திக்கு எதிரான போராட்ட உணர்வை தமிழர்களிடம் தீவிரப்படுத்தியது.

ஜவகர்லால் நேரு

இதனிடையே, ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்க வேண்டும் என்று துடித்தவர்கள்.  நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று சாஸ்திரி கூறிய போதும்  மொழிச் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டது. நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடிமைப் பணி தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை வாட்டின. அதனால் நேரு மறைந்த பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ந்து நடத்த திமுக தலைவர்கள் தீர்மானித்தனர்.

நாளை… அன்னை மொழிக்காக உயிர் நீத்த 500 பேர்!

error

Enjoy this blog? Please spread the word :)