Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

9. அன்னை மொழிக்காக உயிர் நீத்த 500 பேர்

1965-ஆம் ஆண்டில் தீவிரமடைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல வகைகளில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு உணர்வுகளைக் கண்ட இந்த போராட்டம், எதிரெதிர் அணிகளில் இருந்தவர்களை இணைக்கும் விந்தையையும் அரங்கேற்றியது. ஆட்சியையும் மாற்றியது.

ஜவஹர்லால் நேரு மறைந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகும் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் அலுவல் மொழிச் சட்டத்தையும், அதன் மூலம் இந்தித் திணிப்பையும் நடைமுறை படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக 1963-ஆம் ஆண்டில் தொடங்கி 1964-ஆம் ஆண்டின் இறுதி வரை நிதானமாகவும், உறுதியாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்களை 1965-ஆம் ஆண்டில் தீவிரப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அதுகுறித்து முடிவெடுக்க ஜனவரி 8&ஆம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் தான் குடியரசு நாளை துக்க நாளாக கடைபிடிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசு நாள் ஒரு துக்க நாள்

‘‘தென்னக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியையும், மனக் கொதிப்பையும் காட்டுவதன் அறிகுறியாக 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியை துக்க நாளாகக் கொண்டாடுவது என்றும், அன்று எல்லா ஊர்களிலும் கண்டனக் கூட்டங்களை நடத்துவது என்றும், துக்க நாளின் அறிகுறியாக அன்று அனைத்து இடங்களிலும்கறுப்புக் கொடியை ஏற்றி வைப்பது என்றும், கறுப்புச் சின்னம் அணிந்து கொள்வது என்றும் இந்தச் செயற்குழுக் கூட்டம் முடிவு செய்கிறது’’ என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. குடியரசு நாள் விழாவுக்கு எந்த குந்தகத்தையும் ஏற்படுத்தாமல் இந்தப் போராட்டத்தை அமைதியாக நடத்துவது என்றும், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையைத் தாண்டி போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் திமுக அறிவித்தது.
திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்பாராத திசைகளில் இருந்து ஆதரவு வந்தது. 1937&ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது இந்தியை கட்டாயமாக்கித் திணித்த ராஜாஜி, 1965-ஆம் ஆண்டில் திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தார். ஜனவரி 17-ஆம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டை அவர் தான் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியால் தமது மனதிலேயே பிரிவினை உணர்வு ஏற்பட்டு விட்டதாகக் கூறினார். ராஜாஜி ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி வருமாறு:

‘‘நாட்டுப்பற்றில் நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. ஆனால், வடவரின் கையில் உள்ள மத்திய அரசு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமுல் செய்தால் இந்திய துணைக் கண்டம் 15 பகுதிகளாக தனித்துப் பிரிந்து விடும். உண்மையைச் சொல்லுகிறேன். என்னுடைய உள்ளத்திலே கூட இப்போது பிரிவினை உணர்வு தோன்றிவிட்டது. பிரிவினை கூடாது என்று மத்திய அரசினர் முன்பு சட்டம் செய்தனர். இப்போது பிரிவினை மனப்பான்மையை உண்டாக்குவதற்கு சட்டம் செய்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு வழி செய்கிறது. அந்த பதினேழாவது பிரிவைத் தூக்கிக் கடலில் போடுங்கள்’’ என்று ராஜாஜி பேசினார்.

திமுக விடுத்த போராட்ட அழைப்பை ஏற்று தமிழகத்தின் பல பகுதிகளில் வீடுகளில் மக்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்தனர். அப்போராட்டத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவின் குடியரசு நாள் நெருங்கியது. திமுகவின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கத்துடன் திமுகவின் முன்னணித் தலைவர்களான அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,கலைஞர் கருணாநிதி, கே.ஏ. மதியழகன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை காங்கிரஸ் அரசு கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்தது.

மாணவர் பேரணியில் தாக்குதல்

ஜனவரி 25-ஆம் தேதி….

தமிழுக்காக திருச்சியில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னசாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். சின்னசாமியை நினைவுகூறும் வகையில் அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் அரசியலமைப்பு சட்டத்தின் பதினேழாம் பகுதியை பொதுவெளியில் எரிப்பது தான் அவர்களின் திட்டம் ஆகும். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து இந்தி ஒழிக என்று முழக்கமிட்டவாறு சென்று கொண்டிருந்தனர்.

இந்திக்கு எதிரான திமுகவினரின் போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இதை விரும்பவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், திமுகவினர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் நெருக்கடி கொடுப்பதாக நினைத்தனர். வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் நினைத்தனர்.

மதுரையில் மாணவர்கள் பேரணி காங்கிரஸ் அலுவலகம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் போராட்டத்தில் வருபவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இது மாணவர்களுக்குத் தெரியவில்லை. மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது ஜீப் ஒன்றில் வந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலத்தில் அணி வகுத்து வந்த மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டினர். பதிலுக்கு மாணவர் தரப்பிலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. கத்திகளுடன் காங்கிரசார் மாணவர்களைத் தாக்கினர். இதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ராணுவம் வந்தது

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலகத்தின் முன்பாக குடியரசு நாள் கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் செய்தி எங்கும் பரவி மதுரையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. மதுரை நகரெங்கும் காங்கிரசு கொடிக்கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிப்பு என சட்டம்- ஒழுங்கு சீரழிந்தது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக துணைராணுவப் படைகளை முதலமைச்சர் பக்தவச்சலம் அழைத்தார். அந்த காலத்தில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது காஷ்மீருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடம்பாக்கம் சிவலிங்கம்

இவை ஒருபுறம் நடக்க சின்னசாமியின் நினைவு நாளில் அவரது நினைவுகள் இளைஞர்களின் மனதில் புதிய போராட்டத்தீயை ஏற்படுத்தின. இன்னும் சிலரின் மனதில் தியாகத் தீயை உண்டாக்கியது. அத்தகைய தியாகத் தீ எழுந்தவர்களில் கோடம்பாக்கம் சிவலிங்கம் என்பவரும் ஒருவர். அவர் சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அப்போது வயது 24 மட்டும் தான். சிவலிங்கம் சென்னை மாநகராட்சியில், பணியாற்றி வந்தார். தமிழுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். கீழப்பழுவூர் சின்னசாமி தமிழுக்காக தன்னுயிரையே கொடுத்ததைப் போல நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறிவந்தார். ஜனவரி 25-ஆம் தேதி உணர்ச்சிகரமாக தம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘‘நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்’’ என்று அவர் கூறிவந்தார். அதன் பொருளை அவரது நண்பர்கள் எவரும் உணரவில்லை.

சிவலிங்கம் வழக்கமாக வீட்டின் திண்ணையில் தான் படுத்துறங்குவார். குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவு வழக்கமான இடத்தில் அவரைக் காணவில்லை. அதனால் அவரது அண்ணன் திடுக்கிட்டார். அதே நேரம் வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் பார்த்தார் அவர். அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். 2 பெட்ரோல் டின்கள் அருகில் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்தில், ‘‘உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன. சின்னசாமி வழியில் சிவலிங்கம் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தமிழகம் அதிர்ச்சியிலும், மீள முடியாத சோகத்திலும் மூழ்கியது.

விருகம்பாக்கம் அரங்கநாதன்

சிவலிங்கத்தின் தியாகம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எங்கு பார்த்தாலும் அவரின் அந்த தியாகம் பற்றியே உருக்கமாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானவர்களில் ஒருவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அரங்கநாதன். காலையில் தீக்குளித்து இறந்த சிவலிங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அரங்கநாதன், அன்றிரவு முழுவதும் அதுபற்றியே பார்ப்பவரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்.

தமிழக நிலவரம் குறித்தும் நண்பர்களிடம் கவலையோடு பேசியிருக்கிறார். அன்றிரவு வீட்டில் மனைவியும், மற்றவர்களும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு சுமார் 3 மணிக்கு வீட்டிற்கு வெளியே உயிரோடு தன்னை எரித்துக்கொண்டார். வீட்டிலிருந்து அரங்கநாதன் எழுதிய ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே _ இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என எழுதப்பட்டிருந்தது.

27.12.1931-ம் ஆண்டு ஒய்யாலி- முனியம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த அரங்கநாதன், மத்திய அரசின் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர். இளம் வயதிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார். விருகம்பாக்கத்து இளைஞர்களால் ‘குரு’ என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன், விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நிறுவி நடத்திவந்தார். அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார்.

தமிழ் உணர்வாளர்

தமிழுணர்வு மிக்கவரான அரங்கநாதன், தமது பகுதியில் இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் நூல்களை படிப்பது, விவாதங்களில் பங்கேற்கச்செய்வது என தமிழ் உணர்வாளராகவும் இயங்கிவந்தார். அரசு ஊழியராக இருந்தாலும், தமிழ்மொழி மீதான பற்றில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அரங்கநாதனுக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தனர். அவர்களைக் காப்பதை விட தமிழ் மொழியைக் காப்பதையே தமது முதல் கடமையாக அரங்கநாதன் நினைத்தார். அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் சென்னை தியாகராயநகர் சுரங்கப்பாதைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

500 பேர் உயிரிழப்பு

கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் என பலர் தொடர்ச்சியாக தீக்குளித்தும், நஞ்சு குடித்தும் உயிர்த்தியாகம் செய்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பலர் துப்பாக்கிச் சூட்டிலும், உடல்நலம் பாதித்தும் உயிரிழந்தனர். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மொத்தம் 70 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறினாலும், உயிர்த்தியாகம் செய்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 500-க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும், தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் இந்தித் திணிப்பைக் கைவிட மறுத்தார். மாணவர்களை சந்திக்க மறுத்த அவர், மொழிப்போர் தியாகிகளின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார். அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என்று மிகவும் அலட்சியமாகவும், திமிராகவும் பேசினார் முதலமைச்சர் பக்தவச்சலம்.

குடியரசுத் தலைவர் எச்சரிக்கை

மற்றொரு பக்கம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் இந்தித் திணிப்பைக் கைவிட மறுத்தார். ஆனால், தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை மிரட்டியது. பிரதமரின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், இந்தித் திணிப்பைக் கண்டித்தும் மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியன், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவி விலகினர். ஆனால், அவர்களின் பதவி விலகல் ஏற்கப்படவில்லை. 1937-ஆம் ஆண்டிலேயே இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்த போராட்டத்தின் போது குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியைத் திணித்தால் தமிழகம் தனிநாடாக பிரியும் என்று பிரதமரை கடுமையாக எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைக்கும், மார்ச் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் நடைபெற்ற உக்கிரமான போராட்டங்களுக்கு பணிந்து மத்திய அரசு இந்தித்திணிப்பை கைவிட்டது. இதற்கான சட்டத் திருத்த முயற்சிகள் லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் தொடங்கப்பட்டு இந்திராகாந்தி காலத்தில் முடிக்கப்பட்டன.

இந்திப் திணிப்புப் போராட்டங்களுக்குப் பிறகு 1967&ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் இந்திக்கு எதிராக போராடிய கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காமராசர் அவரது சொந்தத் தொகுதியான விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற இந்தித் எதிர்ப்பு போராட்ட மாணவர் தலைவரால் வீழ்த்தப்பட்டார். இவ்வாறாக தமிழை ஒழிக்க முயன்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வெளியேறியது.

நாளை…. தமிழ் வளர்த்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்!
*********

error

Enjoy this blog? Please spread the word :)