என்று தணியும் இந்த மதுவின் தாகம்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வேதனை.
என்று தணியும் இந்த மதுவின் தாகம்! – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வேதனை.
பாட்டாளி சொந்தங்கள் பலரும் என்னை இன்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி.
உங்கள் பிரச்சினை என்னம்மா? என்று கேட்டேன். அதைக் கேட்ட அந்த பெண்மணி, மதுவால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து கண்ணீர் விடாத குறையாக என்னிடம் விளக்கினார். அவரது சோகக்கதை இதோ…
‘‘ விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சிற்றூர் தான் எங்களின் சொந்த ஊர் அய்யா. எனக்கு இரு மகள்கள். அவர்களில் ஒருவரை வயலுக்கு சென்று களை வெட்டி சேர்த்த காசில் பட்டப்படிப்பு படிக்க வைத்தேன். அவர் சென்னையில் ரூ.10,000 மாத ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். இன்னொரு பெண் ஒரு வீட்டில் பணி செய்து வருகிறார்.
எனது கணவர் குடிகாரர். அடிக்கடி குடித்து விட்டு வந்து என்னுடன் சண்டையிடுவார். அதனால் எனது குடும்பத்தில் பல ஆண்டுகளாகவே நிம்மதியில்லை. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யலாம் என்று நினைப்பேன். ஆனால், எனது மகள்கள் வேண்டாம் என்று சொல்லி தடுத்து விடுவார்கள். அதனால் இதுவரை புகார் செய்யவில்லை.
மற்றொருபுறம் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயிலும் சிறுவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். அண்டை மாநிலமான புதுவையில் மது மிகவும் மலிவாக கிடைக்கிறது. அங்கு ஒரு குவார்ட்டர் புட்டி ரூ.75 என்ற விலையில் மொத்தமாக வாங்கும் சிலர், அதை காவல்துறையினரின் உதவியுடன் அப்படியே எங்கள் கிராமத்திற்கு கடத்தி வந்து ரூ.150&க்கு விற்கிறார்கள். அதை பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவர்கள் வாங்கி குடிக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலம் என்று போற்றப்படும் இளைய தலைமுறையினர் மதுவினால் சீரழிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையெல்லாம் உங்களிடம் சொன்னால் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்று எங்கள் ஊரில் சொன்னார்கள் அய்யா. அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன் அய்யா’’ என்று அந்தப் பெண்மணி கூறினார்.
அவரது கண்களில் தமது குடும்பம் குடியால் பாதிக்கப்படுவது குறித்த வேதனையும், அவரது பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் கூட மதுவுக்கு அடிமையாகி சீரழிவது குறித்த கவலையும் நிரம்பி இருந்தது.
அவரைப் போன்ற பெண்களின் கவலைகள் தீர வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறேன். எப்போது மது ஒழியும்…. எப்போது மதுவின் தாகம் தணியும்? என்ற வினாக்கள் தான் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.
