ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை!

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உயர் செயல்திறன் கொண்ட கணினி திறன், கட்டமைக்கப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய பலன்களை கொடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை, மனித மேற்பார்வை, பாதுகாப்பு, தவறான பயன்பாட்டைத் தடுப்பது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவானது மனித திறன்களை விரிவுபடுத்த வேண்டும். இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும். ‘அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் 2026 பிப்ரவரியில் இந்தியா, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த முயற்சியில் அனைத்து ஜி20 நாடுகளும் இணைய அழைக்கிறேன்.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்ற வகையில் நமது அணுகுமுறையை விரைவாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. புதுடெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் திறன் பரிமாற்றம் குறித்து பேசப்பட்டது. வரும் ஆண்டுகளில் திறன் பரிமாற்றம் குறித்த உலகளாவிய கட்டமைப்புக் குழுவை உருவாக்க வேண்டும். நிலையான வளர்ச்சி, நம்பகமான வர்த்தகம், அனைவருக்கும் செழிப்பு ஆகியவற்றுடன் உலகளாவிய நல்வாழ்வில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
