Home » ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் ஒரு கட்டாய தேவை: பிரதமர் மோடி

ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் ஒரு கட்டாய தேவை: பிரதமர் மோடி

UN Security Council reform is a must: PM Modi

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா

ஜொகன்னஸ்பர்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் என்பது இப்போது ஒரு கட்டாயத் தேவை என்றும் இதை, இந்தியா – பிரேசில் – தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே இந்தியா – பிரேசில் – தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற IBSA கூட்டம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுகிறது. ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெறுகிறது. வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருகின்றன. அதில் கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளன. இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன.

ஐபிஎஸ்ஏ என்பது மூன்று நாடுகளின் குழு மட்டுமல்ல. மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக நாடுகள், மூன்று முக்கிய பொருளாதாரங்கள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான தளம். உலகளாவிய நிர்வாக நிறுவனங்கள் 21-ம் நூற்றாண்டின் யதார்த்த நிலைகளிலிருந்து வெகு தொலைவில் செயல்பட்டு வருகின்றன. உலக நிர்வாக நிறுவனங்களில், குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் என்பது இப்போது ஒரு கட்டாயத் தேவை என்பதை ஐபிஎஸ்ஏ நாடுகள் இணைந்து வலியுறுத்த வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பில் நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்போது இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமளிக்கக்கூடாது. மனித குலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை உறுதி செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யுபிஐ போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, கோவின் போன்ற சுகாதார தளங்கள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப முயற்சிகள் ஆகியவற்றை மூன்று நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளும் வகையில் ‘ஐபிஎஸ்ஏ டிஜிட்டல் புதுமை கூட்டமைப்பு’ என்ற அமைப்பை நிறுவலாம்.

பாதுகாப்பான, நம்பகமான, மனிதகுல நலனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளை வகுப்பதில் ஐபிஎஸ்ஏ வலுவான திறனை கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு வருமாறு ஐபிஎஸ்ஏ தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஐபிஎஸ்ஏ அமைப்பில் ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்து நிலையான வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். சிறு தானியங்கள், இயற்கை வேளாண்மை, பேரிடர் மீள்தன்மை, பசுமை எரிசக்தி, பாரம்பரிய மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சூரிய மின்சக்தி போன்ற துறைகளில், நாற்பது நாடுகளின் திட்டங்களை ஆதரிப்பதில் ஐபிஎஸ்ஏ நிதியத்தின் பணி பாராட்டுக்குரியது. வளரும் நாடுகளுக்கு (உலகளாவிய தெற்கு நாடுகள்) இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் பருவநிலை மீட்சித் தன்மையுடன் கூடிய வேளாண்மைக்கான ஐபிஎஸ்ஏ நிதியத்தை அமைக்கலாம்” என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)