Home » குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்: டெல்லி முதல்வர்

குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்: டெல்லி முதல்வர்

Government will provide all assistance to blast victims: Delhi CM

புதுடெல்லி: டெல்லியில் 10.11.2025 அன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “இது ஒரு துரதிருஷ்டவமான சம்பவம். இது தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. காயமடைந்தவர்களை நாங்கள் நேற்று மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. அவர்கள் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது, கவலை அளிக்கக்கூடியது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ, எஃப்எஸ்எல் ஆகிய பாதுகாப்புப் படைகள் இணைந்து முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.

டெல்லி ஜே.பி. மருத்துவனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உடனடியாகவும் அவசரமாகவும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என தெரிவித்திருந்தார்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சட்டவிரோத தடுப்புச் சட்டம் (உபா), குண்டுவெடிப்பு சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகப்படும் நபரின் நகர்வுகள், ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்துடனான அவரின் தொடர்புகள், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)