கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு: திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சென்னை: கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பிய திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமையும். அங்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டன.
அதேபோல, மதுரையில் திருமங்கலம்-ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. 27 கி.மீ. மேம்பால பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டன. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது. இதையடுத்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, மதுரையில் ரூ.11,340 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்த மத்திய அரசு, சில மாற்றங்களை செய்து, அறிக்கையை திருத்தி அனுப்புமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்ட அறிக்கை, கூடுதல் ஆவணங்களுடன் கடந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசு திருப்பி அனுப்பிஉள்ளது. 2017-ம் ஆண்டைய மெட்ரோ ரயில் திட்டவிதிகள்படி 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பதிலாக, பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் பிஆர்டிஎஸ் (பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்) போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு ஆலோனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
