செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்! ‘டித்வா’ புயல் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

சென்னை: இலங்கை அருகே நிலவி வரும் டித்வா புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நாளை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டித்வா’ புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 100 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (நவ.29), நாளை மறுநாளும் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டிச.1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (நவ.29) டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று, அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
30-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிச.1-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் நாளை காலை முதல் நாளை மறுநாள் காலை வரை அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். டிச.1-ம் தேதி காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளை நள்ளிரவு வரை அதிகட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 3 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பனில் தலா 2 செமீ, மண்டபம், ராமேஸ்வரம், தீர்த்தாண்டதானம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
