Home » சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ

Salem, Erode and Tiruppur districts should be included in the Madurai bench of the High Court - Markandeya Katju

மதுரை: உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பார் அசோசியேஷனுக்கு (எம்எம்பிஏ) இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்தபோது தமிழ் கற்றேன். தமிழ் இலக்கியம் உட்பட பல்வேறு புத்தகங்களை படித்தேன். அப்போது சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருந்த தனக்கு அநீதி இழைத்த மதுரை மாநகரை கண்ணகி எரித்த சம்பவம் என்னை பாதித்தது. இது தொடர்பான பல்வேறு கருத்துகளை எனது தீர்ப்புகளில் தெரிவித்துள்ளேன்.

தற்போது நாட்டில் வேலையின்மை, வறுமை அதிகரித்து உள்ளது. இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தெருவோர வியாபாரம் உள்ளிட்ட சிறிய வேலைகளை செய்து தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளனர். முதுநிலை பட்டதாரிகள் கூட சாதாரண வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருவதை பற்றி பேசுகிறோம். அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் நன்மை அடைகின்றன. சாதாரண மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள் பூர்த்தியானதால் தான் மற்ற விஷயங்களை பற்றி சிந்திப்பான். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசியல் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் நேரம் மற்றும் பண விரயத்தை தடுக்கும் வகையில் மதுரையில் உயர் நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 20 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இணையாக பணியாற்றி வருகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்த சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் வெறும் 14 மாவட்டங்கள் மட்டுமே உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் எல்லைகளுக்கும் வருகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்குக்காக செல்பவர்கள் சுமார் 8 முதல் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரைக்கு 3 முதல் 4 மணி நேரத்தில் வந்துவிடலாம். எனவே, இந்த மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் இணைப்பதை பரிசீலிக்க வேண்டும். மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 100 ஆகவும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் எண்ணிக்கையை 40 ஆகவும் அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)