டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை நான் எதிர்நோக்குகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 21 அன்று நிறைவுற்றது. இந்த கூட்டத்தொடர் 32 நாட்களில் 21 அமர்வுகளை கொண்டிருந்தது.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.

