டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: NIA வசம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முழுமையான, ஒருங்கிணைந்த விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்லி போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணையை என்ஐஏ விரைவில் முறைப்படி ஏற்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸ் சேகரித்துள்ள ஆவணங்கள், தரவுகள் அனைத்தும் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்.
முன்னதாக, வெடிவிபத்து தொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்தினார். இதில், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஐ.பி. இயக்குநர் தபன் தேகா, என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சதானந்த் வசந்த் டேடீ, டெல்லி காவல் ஆணையர் சத்திஷ் கோல்ச்சா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையை அடுத்து, வழக்கு விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என்பதால் வழக்கு விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் மாலை 3 மணி அளவில் டெல்லி கர்த்தவ்ய பவனில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எந்த தீவிரவாத இயக்கம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது. முன்னதாக, தடய அறிவியல் துறை குழுவும், என்ஐஏ குழுவும் இரண்டாவது நாளாக இன்றும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டன.

