Home » தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு – செயல்படுவது எப்படி?

தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு – செயல்படுவது எப்படி?

25 'Anbu Solai' centers opened for senior citizens in Tamil Nadu - How do they work?

25 'Anbu Solai' centers opened for senior citizens in Tamil Nadu - How do they work?

சென்னை: மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 25 ‘அன்புச் சோலை’ மையங்களை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ‘அன்புச் சோலை’ மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 ‘அன்புச் சோலை’ மையங்களை தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக குழந்தைகள், மகளிர், கல்வி பயிலும் மாணவ, மாணவியர், திருநங்கைகள் மற்றும் முதியோர் அனைவரையும் பேணிக் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்கள் இத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதியவர்கள் அமைதியான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்து, அத்தியாவசிய வசதிகளை வழங்குவதே இத்திட்டங்களின் நோக்கம் ஆகும்.

மூத்த குடிமக்களுக்கான ‘அன்புச் சோலை’ மையங்கள்: தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும், 2 தொழில் துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில் தண்டையார் பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் ‘அன்புச் சோலை’ மையங்கள் தொடங்கப்பட்டு, இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy), யோகா, பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் நூலகம் போன்றவை வழங்கப்படவுள்ளன.

அன்புச் சோலையின் முக்கிய நோக்கங்கள்: முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுது போக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும், உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு அன்புச் சோலை மையங்கள் செயல்படும்.

அன்புச் சோலையின் சமூக நோக்கம்: அன்புச் சோலை திட்டமானது, முதியோர்களை போற்றும் தமிழ் பாரம் பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும், நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்வதால் அவர்களது குடும்பத்தினருக்கு மன அமைதியை ஏற்படுத்துகிறது. இதனால் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்தும், குடும்ப பிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க இயலாததால் வேலைக்கு செல்ல இயலாத நிலையுள்ளது. எனவே, வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்களுக்காகவும், அவர்களது வீட்டு முதியவர்களுக்கு தனிமையில்லாமல் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, மகிழ்வாக வாழ வழிவகை செய்யும் நோக்கத் தோடும் இம்மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக திருச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 அன்புச் சோலை மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, கேரம் விளையாடினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)