Home » திசம்பர் 17 நமது வலியையும், வலிமையையும் சமூக அநீதியாளர்களுக்கு புரிய வைப்போம்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல்!

திசம்பர் 17 நமது வலியையும், வலிமையையும் சமூக அநீதியாளர்களுக்கு புரிய வைப்போம்! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல்!

December 17 Let us make the social injustices understand our pain and strength! - PMK leader Dr. Anbumani Ramadoss message!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் திசம்பர் 17 ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் அழிக்க முடியாத இன்னொரு முத்திரையை பதிக்கவிருக்கும் நமது போராட்டத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதை நினைவூட்டுவதற்காகவும், எரியும் தீபத்தின் திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டுவதைப் போல, சமூகநீதிப் போராட்டத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் தான் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் சாபம், குறிப்பாக சமூகநீதியின் சாபம் தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள். சமூகநீதி என்ற சொல்லின் உணர்வையும், பொருளையும் அறியாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நம்பிக்கைத் துரோகம் தான். அவர்களது உடலின் அணுக்களில் பொதிந்திருப்பது எல்லாம் அது மட்டும் தான். நம்பிக்கைத் துரோகத்தின் எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள் என்பதை அனுபவித்தவர்கள் நாம்.

கடந்த ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் வாங்கிய வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு செல்லாது என்று, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனால் நாம் அடைந்த மனக்காயங்களுக்கு மருந்து போட்டது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு தான். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியும், மருத்துவர் அய்யா அவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022&ஆம் நாள் தீர்ப்பளித்தது. அன்றே சமூகநீதிக்கான போராட்டங்களை நாம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நாம் நம்பினோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான இரண்டாம் நாள் சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ நமக்கான சமூகநீதியை நாம் எப்போதும் போராடிப் பெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த முறை நாம் போராடத் தேவையில்லை. நாம் போராடாமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்குவார்’’ என்று நம்பிக்கைத் தெரிவித்தார். நாமும் அப்படியே நம்பினோம். அதைத் தொடர்ந்து எனது தலைமையில் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு மே 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது நமது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,‘‘ இப்போது நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தால் என்ன? சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 2022&ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன்’’ என்று வாக்குறுதி அளித்தார். அதையும் நாம் நம்பினோம்.

அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் 10 முறை கடிதம் எழுதினார்; 10 முறை தொலைபேசியில் பேசினார்; ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நான் 3 முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினேன். நமது கட்சி நிர்வாகிகள் குறைந்தது 50 முறையாவது ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளித்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நம்ப வைத்த ஆட்சியாளர்கள், கடைசியாக 2024&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதே கோரிக்கையை வலியுறுத்திய போது தான், ஆட்சியாளர்கள் அவர்களின் உண்மை முகத்தைக் காட்டினார்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்தனர்.

ஆட்சியாளர்கள் பரிசாக அளித்த நம்பிக்கைத் துரோகம் என்ற வலி இன்னும் என்னையும், உங்களையும் வருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் நமது தலைமுறைகள் அனுபவிக்கக் கூடாது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தான் வலிகளையும் தாங்கிக் கொண்டு நான் போராடத் தயாராகிறோம். தமிழகத்தை ஆளும் திமுகவினர், சென்னை மாகாணத்தில் நூறாண்டுக்கு முன் 100% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த நீதிக் கட்சியின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்வார்கள். வள்ளலார் அவர்களால் வஞ்சகர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் கொண்டோர் அவர்கள். பொதுவெளிக்கு வந்தால், சமூகநீதி தான் தங்களின் உயிர்மூச்சு என்று மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால், அதிகாரம் அவர்களின் கைகளில் கிடைத்தால் சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள். அதுவும் வன்னியர்களுக்கான சமூகநீதி என்றால், அதன் தடமே தெரியாமல் அழிக்க நினைப்பவர்கள் தான் இந்த சமூக அநீதியாளர்கள்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, இன்றுடன் 1327 நாள்கள் நிறைவடைந்து விட்டன. திமுக அரசு நினைத்திருந்தால் 27 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், கூடுதலாக 1300 நாள்களாகியும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இது தான் ஆட்சியாளர்களின் உண்மை முகம். ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல சமூகநீதிக்கு எதிரான திமுக அரசு, சமூகநீதிக்கு எதிரான பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1040 நாள்கள் ஆகி விட்டன. ஆனால், இன்று வரை அதற்கான பரிந்துரையை ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், பதவியில் இல்லாத இந்த ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை வழங்குவதற்காக அடுத்த ஆண்டு ஜூலை 16&ஆம் நாள் வரை அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. இதைவிட சமூகநீதி பித்தலாட்டம் இருக்க முடியாது.

திமுக அரசின் இந்த சமூகநீதி நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்; தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் திசம்பர் 17&ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான போராட்டம் மட்டும் அல்ல. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும், அனைத்து இயக்கங்களிலும் உள்ள சமூக அநீதியால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்கான போராட்டம் தான் இதுவாகும்.

திமுக அரசின் சமூக அநீதிகளைக் கண்டு திமுகவில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதேபோல், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் வரும் திசம்பர் 17&ஆம் தேதி நாம் நடத்தவிருக்கும் ‘‘வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்’’ நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் திசம்பர் 17&ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)