திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர யார் முயன்றாலும் அது தமிழின துரோகம் – ஹெச்.ராஜா

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது: “கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை… இதனுடைய ஒட்டு மொத்த உருவம் முதல்வர் ஸ்டாலின் அரசு. கடந்த 55 மாதங்களில் சுமார் 6,700 படுகொலைகள் நடந்துள்ளன.
பல ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் நிலையில், இன்று வரை பள்ளிக்கூடங்களில் சாதிக் கொலைகள் நடைபெறுகின்றன. தமிழகத்துடன் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் 7 மாநிலங்களில் வாக்காளர்கள் சரிபார்ப்பு நடைபெறுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை; ஆனால், தமிழகத்தில் தான் எஸ்ஐஆரை எதிர்க்கின்றார்கள்.
தமிழகத்தில் உள்ள முதல்வர் பிரிவினைவாதி. மத்திய அரசுக்கு எதிரானவர். மிக மோசமான திமுக ஆட்சியை தூக்கி எறியாமல், அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது. இன்றைக்கு போதை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலம் தமிழகம். தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் அடுத்த தலைமுறையை போதையில் அழிக்கின்றது திமுக ஆட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியால தான் இந்த திமுக ஆட்சியை தூக்கி எறிய முடியும்.
செங்கோட்டையன் எங்கு போனால் என்ன? தீய சக்தியான திமுகவை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வெற்றி பெற முயற்சி செய்யும் அனைவரையும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பின்தொடர்பவர்கள் தூக்கி எறிவார்கள். மேலும், திமுக ஆட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டு வர யார் முயற்சி செய்தாலும் அது தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும். கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அழிவுக் குடும்பம். தமிழகம் போதையில் மிதக்கிறது, முதல்வர் ஸ்டாலின் வெற்றி களிப்பில் மிதக்கின்றார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சிக்கு வரும்” என்று அவர் தெரிவித்தார்.
