திமுக அரசைக் கண்டித்து திசம்பர் 17-ஆம் தேதி பா.ம.க ஆர்ப்பாட்டம்! – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பல மாநிலங்கள் சமூகநீதியை பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருகிறது. சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சமூகநீதியை சிதைத்து, படுகொலை செய்யும் முயற்சிகளில் மு.க.ஸ்டாலின் அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை நடப்பு பத்தாண்டின் முதல் பாதி சமூகநீதிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கும் வகையில் பல மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. 2021&ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல், தொழில் தொடங்க கடன் வழங்குதல், வீடு கட்டித் தருதல் உள்ளிட்ட நிகர்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதே காலத்தில் தான் ஒதிஷா மாநில அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கடந்த 2015&ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய மாநிலமான கர்நாடகம், இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்திருக்கிறது. அதுகுறித்த அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆந்திரத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக 2027&ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை?
உண்மையில், இந்தியாவின் முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தான் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், தென்னிந்தியாவின் இரு மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, மூன்றாவது மாநிலத்தில் விரைவில் முடிக்கப்படவுள்ள நிலையில். தமிழ்நாடு மட்டும் மறந்தும் கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட, தமிழ்நாட்டிற்கு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், 50%க்கும் கூடுதலாக இடஓதுக்கீடு வழங்கப்படுவதை நியாயப்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த நூற்றாண்டிலிருந்தே சமூகநீதியில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழும் தமிழ்நாடு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதிலும் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்றாலும் கூட, தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளுக்காக மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவே முடியாது என்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடாவடி செய்து வருகிறது.
மத்திய அரசு நடத்துவது சென்சஸ் எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், மக்களும் வலியுறுத்துவது சாதிவாரி மக்கள்தொகை சர்வே ஆகும். ஆனால், இதை நடத்துவதற்கு கூட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பொய் கூறி, தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்ற முயல்வதை ஏற்க முடியாது.
2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி சர்வேயை நடத்தி முடித்துள்ளன; நடத்தி வருகின்றன. சாதிவாரி சர்வே நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை கர்நாடகம், பிகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. உச்சநீதிமன்றமும் இதே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கிறது. அதனால் தான் பிகார் மற்றும் தெலுங்கானா அரசுகள் சாதிவாரி மக்கள் தொகை சர்வேயின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தது மட்டுமின்றி ஏராளமான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் அரசு கூறுவது ஏமாற்று வேலையாகும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவைகளை திமுக அரசு உணரவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்படி தமிழ்ச் சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தான், சமூகநீதியில் விருப்பம் இல்லாத திமுக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மறுத்து வருகிறது. இது தான் உண்மை.
1989&ஆம் ஆண்டில் தொடங்கி, 2021&ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு 3 வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால், அந்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவிடாமல் செய்தது திமுக அரசு. 36 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகநீதிக்கு எதிராக திமுக எவ்வாறு சதி செய்து வருகிறது என்பதற்கு இவற்றை விட மோசமான எடுத்துக்காட்டுகள் எதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் திசம்பர் 17&ஆம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் இராசரத்தினம் திடல் அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் திசம்பர் 17&ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை 2026&ஆம் ஆண்டு ஜனவரி 29&ஆம் தேதி வியாழக்கிழமை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
சென்னையில் திசம்பர் 17&ஆம் தேதி நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். சமூகநீதியில் அக்கறை கொண்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு & இணை அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் சென்னையில் நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
