Home » தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

2 buses collide head-on near Tenkasi - 6 killed, more than 30 injured

தென்காசி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம், திருமலைக்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இதேபோல், தென்காசியில் இருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் கிராமத்தில் இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் 2 பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்துகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அந்த வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விபத்து குறித்து இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.\ இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)