தேவதானம் அதிர்ச்சி: மக்களோடு மக்களாக போலீஸுடன் வாக்குவாதம் செய்த கொலையாளி!

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பொதுமக்களுடன் சேர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், ‘யாரை நம்புவதோ!’ என பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரநாராயணன் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை செவ்வாய்க்கிழமை இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
புதன்கிழமை காலை 5 மணிக்கு திருடிய பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்ற போது, எஸ்.ஐ அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி நாகராஜூவை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். குற்றவாளி நாகராஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயில் முன் பொதுமக்களுடன் சேர்ந்து கொலைக் குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளை, கொலை சம்பவம் குறித்து அறிந்தது செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான பொது மக்கள் கோயில் முன் திரண்டனர். பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளி நாகராஜ் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தெரியாத அப்பாவி போல் நடித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாரை ஏமாற்ற முயன்று உள்ளார். ஆனால் நாகராஜ் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளி வந்ததும், சிசிடிவி காட்சிகளில் அவரது உருவம் தெரிந்ததை வைத்து போலீஸார் நாகராஜை கைது செய்துள்ளனர். கொலை செய்து விட்டு பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கொலையாளி அப்பாவி போல் நடித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
