நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.1 முதல் 19 வரை நடைபெறும் என்று கிரண் ரிஜிஜு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளோம். நிறைவேற்றப்பட வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம். பின்னர், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும். அதில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மசோதாக்களின் பட்டியலை பகிர்ந்து கொள்வோம். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளின்படி உத்திகளை உருவாக்குவோம்” என தெரிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் 15 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. டிச.5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தனியார் உறுப்பினர்களின் மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. டிச.12-ம் தேதி தனியார் உறுப்பினர்களின் தீர்மானங்கள் பரிசீலனைக்கப்பட உள்ளன.
