நெற்பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் துங்ரோ நோய் பாதிப்பு – கட்டுப்படுத்துவது எப்படி?

மதுரை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் துங்ரோ நோய் பாதிப்பால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
துங்ரோ நோய் என்பது நெல் பயிர்களை தாக்கி, வளர்ச்சி குறைபாடு மற்றும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயானது, நெல் துங்ரோ பெஸ்லிஃபாம் வைரஸ், நெல் துங்ரோ ஸ்பெரிகல் வைரஸ் ஆகிய வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள், பச்சை இலைப்பேன் என்ற பூச்சியால் பரவுகின்றன. இந்த வைரஸ் தாக்கப்பட்ட நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி, குட்டையாகவும், இலைகளின் விளிம்புகளில் இருந்து அவற்றின் அடிப்பகுதி வரை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் கோடுகள் காணப்படும். இதனால், நெற்பயிர்களில் பக்க கன்றுகள் வளர்ச்சி இல்லாமல் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்படும்.
இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணை தலைவர் அய்யக்கண்ணு கூறுகையில், தற்போது மாவட்டத்தில் மேலூர் வட்டம், மதுரை கிழக்கு வட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் துங்ரோ நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் பாதிப்பு, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதால், பெருமளவு பாதிப்பு தடுக்கப்படும். இருப்பினும், மகசூல் குறைவு, காலம் தாழ்த்தி கதிர் வருதல் போன்றவற்றால், விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கப்படும் பிரச்சனைகள் உள்ளன. இது குறித்து, அரசு விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நோயை கட்டுப்படுத்த: இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.பி.முருகேசன் கூறுகையில், துங்ரோ நோய் பாதித்த நெற்பயிர் வயல்களில், ஒரு ஏக்கர் நாற்றாங்காலுக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். பிப்ரோ பேசின் 320 கிராம் நடவு செய்த 15 மற்றும் 30 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்தல் வேண்டும்.
தூர் கட்டும் பருவத்தில் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில், ஒரு கிலோ மணலில் கலந்து நெல் வயலில் துாவி விட வேண்டும். பச்சை இலைப்பேன்களை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீர் கரைத்து தெளிக்க வேண்டும் என்று கூறினார்.
