Home » மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரித்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரித்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

Mekethatu issue: Cauvery rights group arrested for burning copy of Supreme Court order

தஞ்சாவூர்:  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவ.23-ம் அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், அவசரமாக மேகேதாட்டு அணை விவகார வழக்கை கடந்த நவ.13-ம் தேதி விசாரித்து, கர்நாடகம் மேகேதாட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை அளிக்கவும், அதை இந்திய அரசின் நீர்வளத் துறை அனுமதிக்கு அனுப்பவும் தடை இல்லை என்று கூறி, தமிழக அரசு 2018-ல் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இதனை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இன்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக்கு ழுவின் பொருளாளர் மணிமொழியன் தலைமை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெகதீசன், காவிரி உரிமை மீட்புக்குழுவின் நிர்வாகிகள் வைகறை, ராசேந்திரன், துரை.ரமேஷ், முனியாண்டி, சாமி.கரிகாலன், செந்தில் வேலன், விடுதலை சுடர், ராமசாமி, தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில், “மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன், “உச்ச நீதிமன்றம் மேகேதாட்டு அணை கட்ட அனுமதித்த விட்டதாகக் கூறுவது தவறு, மத்திய நீர்வளத் துறையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் தனது வலுவான வாதங்களைத் தமிழக அரசு முன் வைக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய நீர்வளத் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் ஏற்கெனவே கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டன என்ற உண்மையை மறைக்கிறார் துரைமுருகன். தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் துரைமுருகன், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் எந்த முயற்சியையும் முளையிலேயே தமிழக அரசு கிள்ளி எறியும் என்று உண்மைக்கு மாறான தகவலை சொல்கிறார்.

ஆனால், கர்நாடக அரசு வனப்பகுதிகளில் இந்த அணையைக் கட்டுவதற்கான தளம் அமைத்தல் போன்ற அடிப்படைப் பணிகளுக்காக மட்டும் இதுவரை ரூ.1,000 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. எனவே, தமிழக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால் தான் காவிரி உரிமையைப் பாதுகாக்க முடியும்” எனக் கூறி கோஷங்களை போராட்டத்தில் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)