வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும் – நிதிஷ் குமார் உறுதி!

பாட்னா: நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் பிஹார் இடம்பெறும் என தெரிவித்துள்ள நிதிஷ் குமார், எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்த்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. பாஜக 91, ஜேடியு 83, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், “வாக்காளர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் அரசாங்கத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். இதற்காக, பிஹாரின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையுடன் பாடுபட்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி. உங்கள் ஆதரவுடன் பிஹார் மேலும் முன்னேறும். அதோடு, நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் இடம்பெறும்” என தெரிவித்துள்ளார்.
