Home » வாக்காளர்கள் சமர்ப்பித்த SIR படிவத்தின் நிலையை அறிவது எப்படி?

வாக்காளர்கள் சமர்ப்பித்த SIR படிவத்தின் நிலையை அறிவது எப்படி?

How to know the status of the SIR form submitted by voters?

சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் சமர்ப்பித்த ‘எஸ்ஐஆர்’ கணக்கெடுப்பு படிவத்தின் நிலையை அறிவது எப்படி என்பதை பார்ப்போம். இந்தப் பணியின் கீழ் வாக்காளர்களுக்கு வீடு வீடாக ‘எஸ்ஐஆர்’ படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நவ.4 முதல் டிச.4-ம் தேதி வரையில் இந்த பணி நடைபெறுகிறது. இதில் கணக்கெடுப்பு படிவங்களை பெற்ற வாக்காளர்கள், அதனை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தும் உள்ளனர்.

ஆன்லைன் மூலமாகவும் ஆதார் விவரங்களுடன் இந்த எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம். அதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கும் எஸ்ஐஆர் படிவங்களில் உள்ள விவரங்களை சரிபார்த்ததும், அதை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைல் செயலியில் அப்லோட் செய்ய வேண்டும். அப்போதுதான் டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிடும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம்பெறும்.

இந்நிலையில், வாக்காளர்கள் சமர்பிக்கும் எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள எஸ்ஐஆர்-2026 பகுதியில் உள்ள ‘Fill Enumeration Form’ என்ற லிங்கை பயனர்கள் கிளிக் செய்ய வேண்டும். அதில் பயனரின் மொபைல் எண் கேட்கப்படும். ஓடிபி கொடுத்து அதில் லாக்-இன் செய்யலாம். வாக்காளர்கள், தங்கள் மொபைல் எண்ணை கொண்டு Sign-Up செய்தும் இதை பயன்படுத்தலாம்.

பின்னர் லாக்-இந்த செய்ததும் வாக்காளரின் மாநிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் எண் கேட்கப்படும். அதை கொடுத்தால் உங்கள் எஸ்ஐஆர் படிவம் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டு விட்டது என இருக்கும். இப்படி வந்தால் வாக்காளர் வழங்கிய படிவத்தை பிஎல்ஓ சமர்பித்து விட்டார் என அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல் ஆன்லைன் மூலம் எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டால் வாக்காளர்கள், தங்களின் பிஎல்ஓ அதிகாரியை அணுகி விவரம் கேட்கலாம்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)