Home » வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

Weather forecast: Heavy rain likely in 15 districts including Chennai tomorrow

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்.

இதன் காரணமாக, நாளை (நவ.17), தமிழக கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 19-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 20-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 21, 22 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும், 19-ம் தேதி மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 20-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 21-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும் பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 6 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 4 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3 செமீ, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேளாங்கண்ணி, கோடியக்கரை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)