Home » வானிலை முன்னறிவிப்பு: நவ.22 தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை முன்னறிவிப்பு: நவ.22 தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Weather forecast: Chance of heavy rain in 11 districts of Tamil Nadu on Nov. 22!

சென்னை:  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.22) ஒரு சில இடங்களிலும், நவ.23-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நவ.24ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.25 முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை (நவ.22) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.23-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும், நவ.24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.22்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 24, 25 தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், திருவாரூரில் தலா 5 செ.மீ மழை, நாகப்பட்டினத்தில் 4 செ.மீ மழை, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, வேளாங்கண்ணியில் தலா 3 செ.மீ மழை, திருப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)