77 அடி உயர ராமர் சிலையை கோவாவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பனாஜி: தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர ராமரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளை சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார்.
சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டின் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
பல நூற்றாண்டுகளாக ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதிலும் கோவா, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்து படிப்படியாக வலுப்படுத்தி உள்ளது. கோவாவில் கோயில்கள், மரபுகள், மொழி என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளான காலங்கள் இருந்தன. ஆனால் இந்த அழுத்தங்கள், சமூகத்தின் உறுதியை ஆழப்படுத்தி அதன் கலாச்சார அடையாளத்தை வலுப்பதின. ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திற்குப் பிறகும் கோவா அதன் அசல் வடிவத்தைப் பாதுகாத்து வருகிறது. இது கோவாவின் தனித்துவமான பண்பு.
77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏராளமான சவால்களை எதிர்கொண்டு தப்பிப்பிழைத்து, தொடர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது. காலங்கள் மாறின, நாட்டிலும் சமூகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மாறி வரும் சவால்களுக்கு மத்தியில் மடம் அதன் திசையை இழக்கவில்லை. மாறாக, அது மக்களுக்கு வழிகாட்டும் மையமாக உருவெடுத்து நிற்கிறது. இதுவே அதன் மிகப் பெரிய அடையாளம்” என தெரிவித்தார். த்வைத தத்துவத்தை பின்பற்றும் ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் என்பது முதலாவது கௌட் சரஸ்வத் பிராமண வைஷ்ணவ மடமாகும். இது குஷாவதி ஆற்றங்கரையில் உள்ள பர்த்தகலியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
