NDA சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு
பாட்னா: நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வெற்றி பெற்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்டு வருகிறது.
முக்கிய நடவடிக்கையாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், பிஹார் மாநில பாஜக தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, திலிப் குமார் ஜெய்ஸ்வால், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை, நிதிஷ் குமாரின் பாட்னா இல்லத்தில் ஜேடியு எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடியு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல், பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டமும் இன்று காலை நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளராக உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் குழு துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். கேசவ பிரசாத் மவுரியா இதனை அறிவித்தார்.
ஆளுநர் ஆரிப் கானைச் சந்தித்த நிதிஷ் குமார், பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். மேலும், புதிய அரசை அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை காலை 11.30 மணி அளவில் புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. இதில், 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்க இருக்கிறார். இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
