SIR | 2002/05 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய முடியாவிட்டாலும் படிவம் அளிக்கலாம்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை விரைவாக பெற்றிட தங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்போது வீடு வீடாக வருகின்றனர்.
கடைசி நேர நடவடிக்கையை தவிர்த்து, உடனடியாக கணக்கீட்டுப்படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விடவும். கடந்த 2002/2005-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் உறவினர்களின் பெயரையோ கண்டறிய இயலாத வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவத்தில் அப்பகுதியினை பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டு, பிற விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பம் செய்து வழங்கினாலே போதும்.
அத்தகைய வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படும். எந்த ஆவணமும் கணக்கீட்டுப் படிவத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கும் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே, வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
எனவே, வாக்காளர்கள் கால தாமதம் செய்யாமல் உடனடியாக தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். மேலும், கணக்கீட்டுப் படிவத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் தகவல் அல்லது உதவி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தின், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1950-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
