Home » UPSC மெயின் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை: அரசு அறிவிப்பு!

UPSC மெயின் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை: அரசு அறிவிப்பு!

Government announces Rs. 50,000 incentive for Tamil Nadu students who pass UPSC mains exam

சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ”நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 659 பேருக்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் 87 பேர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டின் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி பெற நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இத்தொகையானது நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு 2025 யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் வாயிலாக நவ.13-ம் (வியாழன்) முதல் நவ.24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என்று சிறப்புத் திட்ட இயக்குநர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)