அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணி!

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) ரத்துசெய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ‘கோட்டை நோக்கி பேரணி’ நேற்று நடைபெற்றது. எழும்பூர் எல்ஜி கார்டன் சாலை சந்திப்பில் தொடங்கி பேரணி தெற்கு கூவம் சாலை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை தமிழ்நாடு அரசு ஊழிய சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் தொடங்கிவைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்றனர்.
முன்னதாக, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் ஏங்கல்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், பொறுப்புக்கு வந்த நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்து கடந்த 22 ஆ்ண்டுகளில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். ஆனால் யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்டவில்லை.
ராஜஸ்தான் சத்தீஷ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டது. ஆனால், தமிழக அரசு தொடர்ந்து ஒவ்வொரு குழுக்களாக அமைத்து வருகிறதே தவிர ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை.
காலவரையற்ற போராட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் சிபிஎஸ் தொகையில் ரூ.54 ஆயிரம் கோடி அரசுக்கு உபரி நிதியாக கிடைக்கும். ஐந்தாண்டு பதவிக்காலம் கொண்ட எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதுவும் அவர்களுக்கான ஓய்வூதியம் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இது எந்த வகையில் நியாயம்? தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் மாதம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், அதைத்தொடர்ந்து ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
