எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
12. தமிழுக்காக சாகும் வரை உண்ணாநிலை
அந்நிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது சுமத்தி, அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும், போலி நடத்தை உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை அந்நியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான். நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அந்நியக் கல்விமுறை பெரும் தடையாகும். எனக்கு மட்டும் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அந்நிய மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன். நமது ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன்.
இதற்காக பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட வேண்டுமே என நான் பொறுத்திருக்க மாட்டேன். அவை தன்னாலேயே இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும். உடனடியாகப் பரிகாரம் தேடப்படவேண்டிய மிகப்பெரிய தீமை அந்நிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும். அந்நிய ஆட்சியினால் விளைந்த பல தீமைகளில் மிகப்பெரியது நமது இளைஞர்களுக்கு அந்நிய மொழியில் கல்வி கற்பித்தது தான் என நமது வரலாறு பதிவு செய்யும். இது நமது தேசத்தின் சக்தியை அடியோடு அழித்துவிடும். மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்திவிடும். கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும். இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்குமேயானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். எனவே அந்நியக் கல்விமுறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை பெறுகிறதோ அந்த அளவுக்கு மக்களுக்கு நல்லது நடக்கும்’’- காந்தியடிகள்
தேசத்தந்தை மகாத்மா காந்தி 1919-ஆம் ஆண்டுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் இருந்தே தாய்மொழி வழிக் கல்வியின் ஆதரவாளர் ஆவார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த பிறகும் அதே நிலையே தொடர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியக் கருத்துகளைத் தான் மேலே வழங்கியுள்ளேன்.
மண்டேலாவின் மகத்தான கருத்து
மகாத்மா காந்தி மட்டுமின்றி, உலகில் மக்கள் ஆதரவுப் பெற்ற தலைவர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வியைத் தான் வலியுறுத்தியுள்ளனர். மகாத்மா காந்தியை தனது தலைவராக ஏற்றுக் கொண்டவரும், தென்னாப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவருமான நெல்சன் மண்டேலாவும் இதே கருத்தை தான் வழி மொழிந்துள்ளார். தாய்மொழியால் மட்டும் தான் இதயத்தை தொட முடியும் என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார். அவரது கருத்து வருமாறு:
‘‘ ஒரு மனிதருடன் அவரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நீங்கள் பேசினால் அது அவரது தலைக்கு செல்லும். அதேநேரத்தில் நீங்கள் அவரது தாய்மொழியில் பேசினால் அது அவரது இதயத்திற்கு செல்லும்’’.
தாய்மொழியின் சிறப்பு என்பதே அது இதயத்தை வருடி மகிழ்ச்சியடைய வைக்கும்; சிந்திக்கக் தூண்டும் என்பது தான். இந்த உண்மை உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது. ஆனால், தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்களுக்கு மட்டும் தமிழின் சிறப்பு தெரியாமல் போய்விட்டது. ஆங்கில வழிக் கல்வியும், அதனால் கல்விக் கொள்ளையர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கிடைத்த வணிகப் பயன்களும் தமிழகத்தில் ஆங்கிலவழி பள்ளிகள் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது. அதனால் பள்ளிகளில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்தது.
தமிழறிஞர்கள் கொந்தளிப்பு
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்ற பெயரில் தமிழ் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் தீவிரமாக குரல் எழுப்பி வந்தது. தமிழறிஞர்களும் ஆட்சியாளர்களின் தமிழ் துரோகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. ஆங்கில வழிப் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் மட்டும் தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனால் உணர்வுள்ள தமிழறிஞர்கள் கொதித்துப் போயினர்.
கோரிக்கைகளை வைப்பதன் மூலமாக மட்டுமே தமிழைப் பயிற்று மொழியாக்கும் இலக்கை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்த தமிழறிஞர்கள் அக்கோரிக்கைக்காக போராடுவதென 1999-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவு செய்தனர். தமிழறிஞர்கள் தரப்புக்கு சிலம்பொலி செல்லப்பனாரும், தமிழண்ணலும் தலைமையேற்றனர். தமிழ் சான்றோர் பேரவையின் நிறுவனர் அருணாச்சலம் தமது குழுவினருடன் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் 100 தமிழ் உணர்வாளர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொள்வது தான் போராட்டம் ஆகும். இப்போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக 20.03.1999 அன்று சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்திற்கான நாள் அறிவிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நான், தமிழ் உணர்வாளர்களின் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதன்முதலில் அறிக்கை கொடுத்தேன்.
தமிழ் வழிக் கல்வி மாநாடு
அதற்கு அடுத்த நாள், அதாவது மார்ச் 21-ஆம் தேதி சென்னை பொதிகைத் தொலைக்காட்சி எதிரில் உள்ள அண்ணா அரங்கில் தமிழ்வழிக் கல்வி ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டாவது நாள், அதாவது மார்ச் 23-ஆம் தேதி தமிழ் உணர்வாளர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு முன்னோட்டமாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. மொத்தம் 74 முக்கிய ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும் சராசரியாக நூறு தமிழுணர்வாளர்கள் பங்கேற்க ஒரு நாள் அடையாள உண்ணாநிலை மாநிலத்தையே குலுக்கும் வகையில் நடைபெற்றது. சென்னையில் குறளகம் அருகில் நடந்த பட்டினிப் போரில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டனர்.
இதற்கிடையே வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள தமிழ் உணர்வாளர்கள்/ தமிழறிஞர்களின் பெயர்கள் கோரப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்க 170–க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க 100 பேர், அவசர மாற்று ஏற்பாடாக 6 பேர் என மொத்தம் 106 பேரை ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் போராட்டக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
சென்னைக்கு பரப்புரை பயணம்
அதைத் தொடர்ந்து சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தோரும், உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்வோரும் 17.-4-.1999&ஆம் நாள், குற்றாலம், திருமறைக்காடு, போடி ஆகிய ஊர்களில் இருந்து பல லட்சக்கணக்கான துண்டறிக்கைகளுடன் வாகனங்களில் சென்னைக்கு பரப்புரை பயணம் தொடங்கினர். இக்குழுவினருக்கு வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மூன்று இடங்களில் இருந்து புறப்பட்ட பரப்புரைப் பயணக்குழுக்களும் ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ‘குட்ஷெப்பர்டு’ கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராளிகள் அனைவரும் கூடியிருந்தவர்களுக்கும், சக போராளிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர். பட்டினிப் போராளிகளின் கூட்டத்திற்குப் பேராசிரியர் தமிழண்ணல் தலைமை தாங்கினார். அன்றைய கூட்டத்திலும் பல புதிய தமிழுணர்வாளர்கள் பட்டினிப் போரில் தம்மையும் இணைத்துக் கொள்ளும்படி ஒப்புதல் கடிதங்களை அளித்தனர். எனினும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதில் உறுதியாக இருந்ததால், புதிதாக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் புதியவர்களுக்கு சற்று வருத்தம் தான்.
கலைஞரின் அரசியல்
இந்த இடத்தில் ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். தமிழ் உணர்வாளர்களின் சாகும்வரை உண்ணாநிலைக்கு மக்களிடம் ஆதரவு பெருகியதைக் கண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், அப்போராட்டத்தின் தீவிரத்தை தணிக்க நினைத்தார். அதன்படி போராட்டம் தொடங்குவதற்கு இரு நாட்கள் முன்பாக ஏப்ரல் 23-ஆம் தேதி கலைஞர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘‘தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான வழி வகை குறித்து அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதால் தமிழ்ச் சான்றோர் பேரவையினர் அவர்களின் பட்டினிப் போரை ஒரு நாள் அடையாள உண்ணாநிலையாக மேற்கொண்டு முடித்துக் கொள்ள வேண்டும்” என்று கலைஞர் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சரின் அறிக்கை வெளியான சிறிது நேரத்தில், உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் கலைஞரை நேரில் சந்தித்து பேசினார். பேசியது மட்டுமின்றி, தமிழகத்தில் தமிழை பயிற்றுமொழியாக்கும் பணியை கலைஞர் செய்து முடிப்பார் என்று கூறி, உண்ணாநிலை போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழண்ணல் புதிய தலைவர்
ஆனால், போராட்டக்குழுவினர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழண்ணலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்து தொய்வின்றி தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். தமிழ் நாட்டில் தமிழை பயிற்றுமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் கடமை ஆகும். அண்ணா முதலமைச்சராக பதவியேற்றதும் இதை அறிவித்ததுடன் செயல்படுத்தவும் செய்தார். அவருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் தான் தமிழ் பயிற்று மொழி என்ற நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தனர். அந்தத் தவறை திருத்த வேண்டும் என்பதற்காக தமிழறிஞர்கள் போராடும் போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் தான் ஆட்சியாளர்களின் கடமை ஆகும். ஆனால், அதை செய்யாமல் போராட்டக்குழு தலைவரையே பின்வாங்க வைத்தனர்.
தொடங்கியது உண்ணாநிலை
போராட்ட நாளும் வந்தது. 25.4.1999 ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை கட்டிடத்திற்கு அருகிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் பேரணியாகப் புறப்பட்டு, ‘‘உயிரைத் தருகிறோம்… தமிழைத் தா!’’ என்று முழக்கமிட்டவாறே வள்ளுவர் கோட்டத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. 100 தமிழ் உணர்வாளர்கள் மட்டும் தான் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவர் தாங்களும் உண்ணாநிலை இருப்போம் என பிடிவாதமாகக் கூறி விட்டதால் போராளிகளின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.
போராட்டம் தொடங்கிய நாளன்று மாலை 6.30 மணிக்கு அரசு போராட்டக் குழுவினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குப் போன போராட்டக் குழுவினர் அமைச்சர் தமிழ்க்குடிமகன் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எந்தவிதமான மனநிறைவும், கோரிக்கை மீது வெற்றியும் கிட்டவில்லை. அதனால், போராட்டத்தைத் தொடரும் உறுதியோடு போராட்டப் பந்தலுக்குத் திரும்பினர். வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ள பகுதியே தமிழுணர்வாளர்களால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் குறைக்கும் நோக்குடன் வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் தமிழுணர்வாளர்கள் அவரவர் ஊருக்குத் திரும்பி ஆங்காங்கே சென்னையில் நடக்கும் இப்போராட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்துப் பரப்பும் பணியை மேற்கொள்ளும்படி போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தமிழ் உணர்வாளர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. கூட்டம் அசையவோ, கலையவோ இல்லை. அன்று இரவு போராளிகள் உறங்கியபின் அவர்களுக்கு அரணாக ஏனைய தமிழுணர்வாளர்கள் சாலையிலேயே படுத்திருந்தனர்.
மீண்டும் பேச்சு
26.4.1999 ஆம் நாள் காலை அமைச்சர் தமிழ்க்குடிமகன் போராட்டப் பந்தலுக்கு வந்து அரசின் நிலையை விளக்கியதுடன், தமிழ்ச் சான்றோர் பேரவையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்றும் உறுதியளித்தார். தமிழ்ச் சான்றோர் பேரவை தனது போராட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முடிவை அறிவித்தால் மட்டும் தான் தாம் அங்கிருந்து புறப்படுவேன் என்று கூறி உண்ணாநிலைப் பந்தலிலேயே அமர்ந்து கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட போராட்டக் குழுவினர், தாங்கள் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும், அந்த முடிவுடன் அவரை கோட்டைக்கு வந்து சந்திப்பதாகவும் கூறி அனுப்பி வைத்தனர்.
நாளை…. இறங்கி வந்த அரசு… முடிவுக்கு வந்த போராட்டம்!
