Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

5. தமிழ் வளர்த்த சங்கங்களும், மன்னர்களும்!

சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட மொழி என்ற பெருமை தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும்  கிடையாது. தொல்காப்பியத்தையும், அகத்தியத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழ் இலக்கியங்களுக்கு   வயது 3000 ஆண்டுகளுக்கும் அதிகம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், சங்க காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழ் மொழியின் செழுமை மட்டுமின்றி, வயதும் அதிகரிக்கிறது.

தமிழ் மொழியின் அடையாளமாகப் போற்றப்படும் இலக்கியங்களில் பெரும்பாலானவை சங்க காலங்களில் படைக்கப்பட்டவை. தமிழ் மொழி இன்றைக்குள் வளர்ந்து வருவதற்கு சங்க இலக்கியங்கள் முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முதல் சங்கம்

முதல் சங்கம் அல்லது தலைச்சங்கம் எனப்படுவது கி.மு 9000 முதல் 4400 வரை நடைமுறையில் இருந்தது என்று இறையனார் எழுதிய இறையனார் அகப்பொருள் என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பாண்டிய மன்னனான ‘காய் சினவழுதி’ தான் முதல் சங்கத்தை நிறுவியவர் ஆவார். தென்மதுரை தான் பழங்கால பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும், முதல் சங்கம் அமைந்திருந்த இடமாகவும் இருந்தது. முதல் சங்கம் மொத்தம் 4600 ஆண்டுகள் தமிழ் வளர்த்ததாக அறிய முடிகிறது.

காய் சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழ் வளர்த்தனர். அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் உள்ளிட்ட 4449 புலவர்கள்  இந்த காலத்தில் வாழ்ந்தனர். 549 புலவர்கள் இலக்கியங்களைப் படைத்தனர். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்ட பல இலக்கியங்கள் இந்தக் காலத்தில் தான் படைக்கப்பட்டன. 

இந்தக் காலத்தில் படைக்கப்பட்ட அகத்தியம் தான் தமிழ் மொழியின் மூத்த இலக்கியமாக கருதப் படுகிறது. முதல் சங்கம் அமைந்திருந்த தென்மதுரை என்பது கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த நகரம் ஆகும். அந்த நகரம் உள்ளிட்ட பழைய பாண்டிய நாட்டின் பல பகுதிகள் கி.மு. 2387 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி அழிந்து விட்டன. தென் மதுரை அமைந்திருந்த இடம் தான் இப்போது இந்தியப் பெருங்கடலாக உள்ளது.  தென்மதுரை அழிந்த போது அகத்தியம் உள்ளிட்ட இலக்கியங்களும் அழிந்து விட்டன. அகத்தியத்தின் பெரும் பகுதி மட்டும் மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மற்ற இலக்கியங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

இடைச் சங்கம்

முதல் சங்கம் கி.மு.4400-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில் அதே ஆண்டில் பாண்டிய மன்னன் வெண்தேர்ச் செழியன் இடைச்சங்கம் அதாவது இரண்டாவது தமிழ் சங்கத்தை உருவாக்கினார். புதிதாக உருவாக்கப்பட்ட பாண்டிய நாட்டின் தலைநகரமான கபாடபுரத்தில் இரண்டாவது தமிழ் சங்கம் அமைந்திருந்தது.  இந்த சங்கம் கி.மு.900 ஆவது ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது.

வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை மொத்தம் 59 மன்னர்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிகோலினர். அகத்தியர், தொல்காப்பியர், இத் தொடக்கத்தார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தையார் உள்ளிட்ட 3700 புலவர்கள் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்தனர். அவர்களில் 59 பேர் இலக்கியங்களை படைத்தனர் என்று நக்கீரனாரின் குறிப்புகளில் காணப்படுகிறது. தொல்காப்பியம் கலி, குருகு, வெண்டளை, வியாளமலை அகவல் உள்ளிட்ட இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் இயற்றப்பட்டவை ஆகும். ஆனால், ஒரு கட்டத்தில் கடல் கோளால் அழிந்த போது தொல்காப்பியம் தவிர மற்ற நூல்கள் அனைத்தும் அழிந்து விட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

கடைச்சங்கம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் கடைச்சங்க காலம் தான் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தக் காலத்தில் தான் ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. கி.மு 900&ஆவது ஆண்டில் முடத்திருமாறன் கடைச்சங்கத்தை தோற்றுவித்தார். இது பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்த இப்போதைய மதுரை மாநகரில் செயல்பட்டது. கி.பி. 300-ஆவது ஆண்டு வரை கடைச்சங்கம் நீடித்தது.

கடைச்சங்க காலத்தில் 449 புலவர்கள் வாழ்ந்தாலும், அவர்களில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார் உள்ளிட்ட 49 புலவர்கள் குறிப்பிடத்தக்க இலக்கியங்களை படைத்தனர்.

நக்கீரன், சீத்தலைச்சாத்தனார்,கபிலர், பரணர் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்க காலத்தவர்களே. இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.

நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை ஆகியவை கடைச்சங்க காலத்தில் படைக்கப்பட்ட முக்கிய இலக்கியங்கள் ஆகும். அந்த வகையில் கடைச்சங்க காலம் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் ஆகும்.

சங்க இலக்கியங்கள் பதினென் மேற்கணக்கு நூல்கள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.இவ்விரண்டு பிரிவில் பதினென் மேற்கணக்கு நூல்களை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரண்டு பிரிவாகப் பிரித்தனர்.

எட்டுத்தொகை

எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதன் விவரம்:
‘‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்து எட்டுத்தொகை.’’

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்களின் பட்டியல் வருமாறு:
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணற்றுப்படை
5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்)
6. மரக் காஞ்சி
7. முல்லைப்பாட்டு
8. குறிஞ்சிப் பாட்டு
9. நெடுநல்வாடை
10. பட்டினப்பாலை

எட்டுத்தொகையைப் போலவே பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட தனிப்பாடல் வருமாறு:

‘‘முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மரக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.’’

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்
உலகப் பொதுமறையான திருக்குறள் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 18 இலக்கியங்களின் விவரம் வருமாறு:
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5, கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. முப்பால் (திருக்குறள்)
12. திரிகடுகம்
13. ஆசாரக் கோவை
14. பழமொழி
15. சிறுபஞ்சமூலம்
16. கைந்நிலை
17. முதுமொழிக் காஞ்சி
18. ஏலாதி
ஆகியவையே பதினென் கீழ்க்கணக்கு இலக்கியங்கள் ஆகும். இதே காலத்தில் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்று நூலையும், சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்ற நூலையும் இயற்றினர்.  இவை ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.  இவை இரண்டும் தனித்தமிழ் காப்பியங்களாகும்.

நான்காம் தமிழ்ச்சங்கம்

முச்சங்கங்களின் வரிசையில் தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் இருபதாவது நூற்றாண்டில் நான்காவது தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது. நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து.
சங்க காலங்களில் தான் தமிழில் அற்புதமான நூல்கள் படைக்கப்பட்டன. அவை தான் இன்று வரை தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. சங்கங்கள் அமைக்கப்படவும், அவற்றின் மூலம் இலக்கியங்கள் படைக்கப்படவும் காரணமாக இருந்தவர்கள் மன்னர்கள் தான்.

பின்னாளில் வந்த மன்னர்களில் நாயன்மார்களின் படைப்புகளை மீட்டெடுத்து உருவாக்கிய பெருமை இராசராச சோழனுக்கு உண்டு. தமிழ் மரபில் வந்து வெற்றிகரமாக திகழ்ந்த மன்னர்கள் அனைவருமே தமிழுக்காக சிறப்பாக பங்காற்றியுள்ளனர்.

நாளை…. 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம்

error

Enjoy this blog? Please spread the word :)