Home » எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

எங்கே தமிழ்? – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

6. 1937 இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழை வளர்க்க பல்வேறு தரப்பினரும் பாடுபட்டு வந்த நிலையில், இந்தியைத் திணித்து அதன்மூலம்  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் முயற்சிகளும் கட்டவிழ்த்து விடப் பட்டன. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சம உரிமையும், சம அந்தஸ்தும்  பெற்றவை என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையே இருந்து வந்தது. ஆனால், இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த நம்பிக்கையை குலைக்கும் முயற்சிகள் தேசத்தலைவர்களால் தொடங்கப்பட்டன.

ஒட்டுமொத்த இந்தியர்களாலும் தேசத் தந்தை என்று போற்றப்பட்ட மகாத்மா காந்தியடிகள், மாநில மொழி உரிமைகளை மதிக்கவில்லை. இந்தியா முழுவதும் இந்தி தான் பொதுமொழியாக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகள் கருதினார். இந்த லட்சியத்தை எட்டுவதற்காக நாடு முழுவதும் இந்தி பிரச்சார சபைகள் தொடங்கப்பட்டன. 1916-ஆம் ஆண்டு சென்னையில் தென்னிந்தியாவுக்கான இந்தி பிரச்சார சபை தொடங்கப்பட்டது. இந்தித் திணிப்புக்காக காந்தியடிகளும், நேருவும் கூறிய காரணங்கள் வித்தியாசமானவை. நாடு முழுவதும் பொதுவான மொழி இருந்தால் மட்டும் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

ராஜாஜி வெற்றியும், இந்தித் திணிப்பும்!

காந்தியடிகளின் இந்த முடிவை தந்தைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவரது நண்பரும் காங்கிரஸ் தலைவருமான இராஜாஜி தீவிரமாக ஆதரித்தார். 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே தமது மனநிலையை ராஜாஜி கோடிட்டுக் காட்டினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக  1937-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ராஜாஜி பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு இரு நாட்கள் முன்பாகவே ஜூலை 12-ஆம் தேதி இந்தி பிரச்சார சபையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஜாஜி இந்தியின் சிறப்புகளை மிகவும் சிலாகித்துப் பேசினார்.

அப்போதே முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ராஜாஜி என்ன செய்வார்? என்பது அனைவருக்கும்  புரிந்து போனது. அதைப் போலவே முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாக  11.08.1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளில் இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற உணர்வு இப்போது இருப்பதைப் போலவே, ராஜாஜி அறிவித்த கட்டாய இந்தி மொழித் திட்டமும் கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவை சிதைத்து விடும் என்று பெற்றோர்கள் அஞ்சினர்.  இந்தி திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில்  மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புற உயர்நிலைப் பள்ளிகளில் சேரச் செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட கொடுமை நிலவியது.

ஊரக மாணவர்களுக்கு எதிரான சதி

கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பது கடினமாக இருக்கும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழி நன்றாகத் தெரியும் என்பதால் ஊரகக் குழந்தைகளை  முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். எனவே இந்தி திணிப்பு ஊரகக் குழந்தைகளின் கல்விக்கும்,   முன்னேற்றத்திற்கும் பெரியத் தடையாக இருக்கும் என்று பெற்றோர் கருதினர். அது உண்மையும் கூட.

இந்தி எதிர்ப்பு மாநாடு

பெற்றோர்களின் மனநிலை இவ்வாறு இருக்க, தமிழறிஞர்கள் மற்றும் சுயமரியாதை இயக்கத்தினருக்கு இந்தித் திணிப்பின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகத் தோன்றியது. இது தமிழை அழிக்கும் சதி என அவர்கள் கருதினர். அதனால், ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். 26.12.1937 அன்று திருச்சி தேவர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தந்தைப் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தந்தை பெரியார் இரு கடுமையான தீர்மானங்களைக் கொண்டு வந்தார். முதலாவது கட்டாய இந்தியை கடுமையாக எதிர்க்க வேண்டும்; இரண்டாவது தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்க வேண்டும் என்பதாகும். அவை இரண்டும் நிறைவேறின.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த தந்தைப் பெரியார், ஏ.டி. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் தமிழகத்தில் போராட்டத் தீ பற்றி எரிந்தது.

1938-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் இந்த மாநாட்டிலும் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில் பேசிய தந்தைப் பெரியார், இந்தியை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். போராட்ட அறிவிப்பு அனைவரிடமும் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்தித் திணிப்பில் தளர்வு

தந்தை  பெரியாரின் போராட்ட அறிவிப்பு அவரது நண்பரும், முதலமைச்சருமாகிய ராஜாஜிக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்தித் திணிப்பு முடிவிலிருந்து பின்வாங்க அவர் தயாராக இல்லை. அதனால், தமது முந்தைய நிலையிலிருந்து சற்று இறங்கி வந்து புதிய அறிவிப்பு ஒன்றை  21.04.1938 அன்று ராஜாஜி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

‘‘ சென்னை மாகாணத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படாது. தமிழ் மொழி வழங்கும் பகுதிகளில் உள்ள 60 உயர்நிலைப் பள்ளிகள், தெலுங்கு மொழி வழங்கும் பகுதிகளில் உள்ள 54 உயர்நிலைப்பள்ளிகள், கன்னடம் வழங்கும் பகுதிகள், மலையாளம் வழங்கும் பகுதிகளில் முறையே 4, 7 உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 125 பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயப்பாடம் ஆக்கப்படும். 3 ஃபாரங்களுக்கு மட்டும் தான் இந்தி மொழி கட்டாயப்பாடமாக இருக்கும். ஏற்கனவே அறிவித்ததைப் போல இந்தி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. இந்தித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்  இல்லை. படித்தால் மட்டும் போதுமானது’’ என்று சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி அறிவித்தார். நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்தி எதிர்ப்பு வாரியம் அமைப்பு

இந்த அறிவிப்புக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த தமிழர் அமைப்புகள் தயாராயின. இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு 28.05.1938 அன்று  திருச்சியில் நடந்த  தமிழ் பாசறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக நாவலர் சோமசுந்தர பாரதியார், செயலாளராக கி.ஆ.பெ. விஸ்வநாதம் பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் உறுப்பினர்களாக தந்தை பெரியார், தா.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, கே.எம்.பாலசுப்பிரமணியன், டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நாடார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதற்குள்ளாகவே மக்கள் போராட்டம் முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டு வாசலைத் தொட்டது.   1938-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று ஸ்டாலின் ஜெகதீசன் என்ற இளைஞர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கலானார். அவர் போராட்டக்காரர்களின் சின்னமாக விளங்கினார். விடுதலை நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்  ‘‘தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்’’ என்று கூறினார். அவரது இந்த நேர்காணல் ஏற்படுத்திய எழுச்சி காரணமாக பொன்னுசாமி என்ற இளைஞர் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முதலமைச்சர் ராஜாஜி வீட்டு முன் உண்ணாநிலையைத் தொடங்கினார்.இத்தகைய போராட்ட வடிவை பெரியார் ஆதரிக்காத போதும் மற்ற தலைவர்கள் இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். ‘‘இன்று ஜெகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்’’ என்று கூறி போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களை அழைத்தார்.

இந்தி திணிப்புக்கு எதிராக வெடித்த போராட்டங்கள் காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தின. அவற்றை சமாளிக்கும் வகையில் இந்தித் திணிப்பை நியாயப்படுத்தி 14.06.1938 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் புதிதாக எந்த தகவலும் இல்லை. அதுகுறித்த விவரம் வருமாறு:

‘‘இந்திய தேசிய வாழ்வில் சென்னை மாகாணம்  சரியான இடத்தைப் பெற, நமது இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடதிட்டத்தில் இந்துஸ்தானியைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, தாய்மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. இந்தி இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6வது, 7வது, 8வது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்விக்கு இது எந்தவிதத்திலும் குறுக்கீடாக இருக்காது. இந்தி வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னடத்திற்கு மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்’’ என அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

காந்திக்கு சத்தியமூர்த்தி கடிதம்

ஆனால், இந்த அரசாணை எதிர்பார்த்த பயன்களைத் தரவில்லை. மாறாக தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களான சத்தியமூர்த்தியும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும் இந்தித் திணிப்பைக் கண்டித்தனர். இதுதொடர்பாக காந்தியடிகளுக்கு சத்தியமூர்த்தி கடிதம் எழுதினார். அதன் விவரம்:

‘‘ எவரது பெற்றோரோ காப்பாளரோ ஓர் நீதிபதியின் முன்னிலையில் தன்னுடைய மகனோ மகளோ கட்டாயமாக இந்துஸ்தானி கற்பது தனது மனசாட்சிக்குப் புறம்பானது என்று காரணம் கூறி உறுதிமொழி வழங்குவாரேயானால் அச்சிறுவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இத்தகைய விலக்கை வெகு சில பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களே விரும்புவர் என நான் நம்புகிறேன். இது எதிர்ப்பில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தி அதனை முறியடிக்கும். இதனை அறிவுரையாக திரு.சி. இராஜகோபாலாச்சாரிக்கு நீங்கள் எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் மறியல் செய்வோர்மீது மதராஸ் அரசு குற்றச் சட்டம் திருத்த ஆணையைப் பயன்படுத்துவது மகிழ்ச்சி தரவில்லை.’’ என்று அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அந்தக் கடிதம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்குள் இந்தி எதிர்ப்பு போர் தீவிரமடைந்திருந்தது. அது வரலாற்று நிகழ்வாக மட்டுமின்றி வாழ்க்கையிழப்பு நிகழ்வாகவும் மாறியது.

நாளை…. நடராசன்  – தாலமுத்து உயிர்த்தியாகம்!

error

Enjoy this blog? Please spread the word :)