எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
10. மாநாடுகள் வளர்த்த தமிழ்!
தமிழ் சங்கம் வைத்து மட்டும் வளர்க்கப்படவில்லை… மாநாடுகள் நடத்தியும் வளர்க்கப்பட்டுள்ளது. தமிழை வளர்த்ததிலும், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதிலும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அளித்த பங்கை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் தொடக்க காலங்களில் நடைபெற்ற மாநாடுகள் அளவுக்கு பின்னாளில் நடத்தப்பட்ட மாநாடுகள் தமிழாராய்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உதவி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை மொத்தம் 10 முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு மலேசியாவிலும், இரண்டாம் மாநாடு சென்னையில் 1968-ஆம் ஆண்டும், மூன்றாவது மாநாடு பாரிஸ் நகரில் 1970-ஆம் ஆண்டும் நடைபெற்றன. நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை 1974-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் நடத்தினர். ஐந்தாம் மாநாடு 1981-ஆம் ஆண்டு மதுரையிலும், ஆறாவது உலகத் தமிழ் மாநாடு 1987-ஆம் ஆண்டு மலேஷியாவிலும், ஏழாவது மாநாடு 1989-ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டிலும் நடத்தப்பட்டன. எட்டாவது மாநாடு 1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடத்தப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படாத நிலையில் 2015-ஆம் ஆண்டில் மலேஷியாவில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
பதினோராவது உலகத் தமிழ் மாநாட்டை 2023-ஆம் ஆண்டு மே மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனிநாயகம் அடிகள்
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார் என்பவர். இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு தான் நடத்துகிறது. உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். இந்த மாநாட்டை நடத்தும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் தொடங்கப்பட்டது.
1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பேராசிரியர்களில் தமிழ் மற்றும் திராவிட மொழி சார்ந்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்களை மொழி ஆய்வு சார்ந்த ஆலோசனைக்காக பேராசிரியர் தனிநாயக அடிகளாரும், பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் அழைத்தனர். அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்த இருபத்தாறு தமிழறிஞர்கள் ஜனவரி 7 ஆம் நாள் சாதாரண முறையில் புதுதில்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில் தான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. தமிழை வளர்க்கும் நோக்குடன் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தவும் இந்த மன்றம் முடிவு செய்தது.
தனிநாயகம் அடிகளாரின் சிறப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள நெடுந்தீவை சேர்த்த கணபதி பிள்ளை – இராசம்மாள் இணையருக்கு 1913-ஆம் ஆண்டு பிறந்தவர் தனிநாயகம் அடிகளார். இவர் யாழ்ப்பாணம் கரம்பனில் பிறந்தவர். அவரது இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்து குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். ஆனாலும் ஒரு கட்டத்தில் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தாலும், நெடுந்தீவின் புகழ்பெற்ற தனிநாயக முதலி வழி வர்ந்ததாலும் தமது பெயரை தனிநாயகம் என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் அவரது கிறித்தவ அடையாளமும் இணைந்து சேவியர் தனிநாயகம் அடிகளார் என்று அழைக்கப்பட்டார்.
இலங்கையில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஹீப்ரூ, ஜப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, லத்தீன், இத்தாலியம், ஜெர்மன், ரஷ்ய மொழி, கிரேக்க மொழி ஆகிய 12 மொழிகளில் புலமை பெற்றார். 1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் எடுத்த முடிவினால் இளநிலைப்பட்டப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைப்பட்டப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.
மலேஷியாவில் முதல் மாநாடு
பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையின் தலைவராக 1961-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரை தனிநாயகம் அடிகளார் பணியாற்றினார். அவர் ஏற்கனவே தனது ‘தமிழ் கல்ச்சர்’ எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு 1966 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் -23 தேதி வரை முதல் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் கோலாலம்பூரில் நடத்தினார். இந்த மாநாட்டில் மிகப்பெரிய அளவில் தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா மாநாட்டை சிறப்பாக நடத்தினார். 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணா, அவரது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்த மாநாட்டை நடத்தியதாகக் கூறுவோரும் உண்டு. இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.
இலங்கை வன்முறை
இலங்கையில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் மாநாடு தான் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்த மாநாடு 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர்.
அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள். பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்ற இதுவும் ஒரு காரணமாகும். உலகத்தமிழ் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி தமிழர்களை படுகொலை செய்த ஆல்பிரட் துரையப்பா தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் அழித்தொழிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி ஆவார்.
உலகத் தமிழ் மாநாடுகளின் பயன்கள்
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டதால் தமிழ் வளர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழர்களால் மட்டும் பேசப்பட்டு வந்த தமிழை தமிழர்கள் இல்லாத நாடுகளுக்கும் கொண்டு சென்றதில் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நோபுரு கரஷிமா என்ற ஜப்பானியர் தமிழ் மீது காதல் கொண்டு தமிழைப் படித்து தமிழறிஞராக மாறியதுடன், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
‘‘தமிழ் இலக்கியம் பற்றியோ, மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே உண்டு என்பது தகர்க்கப்பட்டுவிட்டது. தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில் விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கியம் பற்றியும், தமிழ் இலக்கணம் பற்றியும் உள்ள ஆராய்ச்சி மட்டுமே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்துவங்கள், தமிழ்த் தொல்பொருளியியல், தமிழ்நாட்டவர் பிறநாட்டவரோடு கொண்ட தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னோரன்ன பல துறைகளிலும் தமிழராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிறப்புப் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி பற்றியும், தொன்மை பற்றியும், மொழியியல் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன’’என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகப் புகழ்பெற்ற தமிழறிஞருமான சு. வித்தியானந்தன் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
751 நூல்கள் வெளியீடு
தமிழாய்வையும் வெளியீட்டையும் தலையாய பணியாகக் கொண்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1975 இல் தனது நூல் வெளியீட்டைத் தொடக்கியது. ச.வே. சுப்பிரமணியன் எழுதிய ’தமிழில் விடுகதைகள்’ எனும் நூல் நிறுவனத்தின் முதல் வெளியீடாகும். அதன் தொடர்ச்சியாக இதுவரை 751 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஓலைச் சுவடிகள் பதிப்பிலும் அரிய நூல்களின் மறு பதிப்பிலும் இந்த நிறுவனம் தனிக் கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களில் பெரும்பாலானவை உலகத் தமிழ் மாநாடுகளில் தாக்கல் செய்யப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நூல்கள் ஆகும்.
தனிநாயகம் அடிகளார் இருந்தவரை நடத்தப்பட்ட மாநாடுகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால், அவருக்குப் பிறகு நடத்தப்பட்ட மாநாடுகளை அரசியல் சூழ்ந்து விட்டது என்றொரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவுக்கு உண்மை உண்டு என்றாலும் கூட, உலகத் தமிழ் மாநாட்டால் பல நன்மைகளும் விளைந்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்
1981-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதே ஆண்டின் ஜூலை மாதத்தில், தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. முதல் துணைவேந்தராக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் இருந்த போது தொலைநோக்குப் பார்வையுடனும் திட்டமிட்டும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தார்.
‘‘தமிழ்மொழி, இலக்கியங்களின் அடிப்படையில் கலை, அறிவியல், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் பல்துறை ஆய்வினை முறைப்படுத்தல்; வளர்த்தெடுத்தல்; ஓலைச்சுவடிகளையும் அரிய/பழமையான அச்சு நூல்களையும் பாதுகாத்தல்; பதிப்பித்தல்; தமிழ்மொழி, பண்பாடு தொடர்புடைய கல்வெட்டுகளையும் தொழில்சார் வழக்குச் சொற்களையும் இலக்கியச் சொல்லடைவுகளையும் தொகுத்து வெளியிடுதல்; மற்ற இந்தியப் பண்பாட்டோடு தமிழுக்குரிய தொடர்புகளை ஆய்வு செய்திட மையங்களை ஏற்படுத்துதல்; மற்ற நிறுவனங்களோடு கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்; இன்றைய அறிவியல் தேவைக்கேற்பத் தொன்மை மரபின் தொடர்ச்சியாகத் தமிழ்மொழியை வளர்த்தெடுத்தல்’’ ஆகியவை தான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
41 ஆண்டுகளில் சாதித்தது என்ன?
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு 41 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த நோக்கங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அது தமிழ் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இருந்திருக்கும். ஆனால் எத்தகைய நோக்கத்திற்காக தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக வேண்டுமென தமிழறிஞர்கள் விரும்பினார்களோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பின்மை, திட்டங்களை நிறைவேற்றப் போதுமான நிதியின்மை போன்ற காரணங்களினால் தனது பதவிக் காலம் முடியும் முன்பே பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் பதவி விலகினார். அவருக்குப் பிறகு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக பதவியேற்ற பலரும் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை வகுத்த போதிலும் அவற்றில் எதையும் செயல்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருந்தன. அதனால் உலக அளவில் மொழி சார்ந்த ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய பல்கலைக்கழகமாக உருவெடுத்திருக்க வேண்டிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், வருமானத்திற்காக ஆங்கில இலக்கியப் படிப்பை அஞ்சல் வழியில் கற்றுத்தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
நிறைவேறாத முடிவுகள்
இதுவரை நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழ் வளர்ச்சி குறித்து ஏராளமான முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழர் வரலாற்றை தொகுத்தல், உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றைத் தொகுத்தல், தமிழர் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குதல், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் குறித்த பாட பேதங்களைப் போக்கும் வகையில் அனைத்து இலக்கியங்களின் செம்மை பதிப்புகளை வெளியிடுதல், உலகம் முழுவதும் நடைபெற்ற தமிழ் ஆய்வுகளை தொகுத்து அவை அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வகை செய்தல், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை மீட்டு, உலகத் தமிழறிஞர்களின் பொறுப்பில் ஒப்படைத்தல், ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல் மற்றும் படி எடுத்தல், தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல், எழுத்துச் சீர்திருத்தம் செய்தல் உள்ளிட்டவை உலகத் தமிழ் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும். இவை செம்மையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கும். ஆனால், இந்த பணிகளில் பெரும்பாலானவை இன்னும் தொடங்கப்படவில்லை. தொடங்கப் பட்ட பணிகள் அரைகுறையாக கிடக்கின்றன என்பது தான் உண்மை.
மொத்தத்தில் உலகத் தமிழ் மாநாடுகள் தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுத்தன. ஆனால், அதில் புகுந்த அரசியல் தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது.
நாளை …
ஆங்கிலப் பள்ளிகளின் வளர்ச்சி… தமிழ் மொழியின் வீழ்ச்சி
