Home » கார்த்திகை தீபம்: தி.மலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கார்த்திகை தீபம்: தி.மலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Karthigai Deepam: High Court orders government to respond on security arrangements in Tiruvannamalai

சென்னை:  டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணிக்க வேண்டும். வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கிரிவலப் பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை அனுமதிக்க கூடாது என்றும், கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியோர் நவ.24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)