Home » சென்னையில் விதிகளை மீறி ஆளுங்கட்சி திமுக கொடிகளை பறக்கவிட்டதை வீடியோ எடுத்துள்ளேன்: நீதிபதி குற்றச்சாட்டு

சென்னையில் விதிகளை மீறி ஆளுங்கட்சி திமுக கொடிகளை பறக்கவிட்டதை வீடியோ எடுத்துள்ளேன்: நீதிபதி குற்றச்சாட்டு

I have taken a video of the ruling party DMK flying flags in violation of rules in Chennai: Judge alleges

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்

சென்னை: மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் என்பவர் மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘பொது இடங்கள், சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் கடந்த ஏப்.28-க்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தார்.

மேலும் கொடிக்கம்பங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம் என்றும், அரசியல் கட்சிகளின் சார்பில் சாலைகளின் நடுவே உள்ள சென்டர் மீடியன்கள், பாலங்களில் கொடிக்கம்பங் களை நட அனுமதிக்கக்கூடாது, பொதுக்கூட்டங்களின் போது சாலையோரங்களில் நடப்படும் ஒவ்வொரு கொடிக்கம்பத்துக்கும் தலா ரூ.1000 கட்டணம் வசூலிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் சட்டவிரோதமாக சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் ஆகியோர் ஆஜராகி, கொடிக்கம்பம் விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மாவட்ட வாரியாக அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அதேநேரம் சாலைகளின் சென்டர் மீடியன்களில், கொடிக்கம்பங்களை நடக் கூடாது என உத்தரவிட்டும், எந்த கட்சியும் அந்த உத்தரவை மதித்து நடப்பதில்லை. தமிழக அரசும் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. சென்னை அண்ணா மேம்பாலத்தில் விதிகளை மீறி ஆளுங்கட்சியினரே கொடிகளை போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கவிட்டதை நானே அவ்வழியாக வாகனத்தில் செல்லும்போது வீடியோ எடுத்துள்ளேன் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலைகளின் நடுவே கொடிகளை அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றியது தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீறப்பட்டால் தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் இது தொடர்பாக மாவட்டம் வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.3-க்கு தள்ளி வைத்தார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)