தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் – நகரும் வேகமும் நிலவரமும்!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கு – தென் கிழக்கில் 220 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலைக்குள் சென்னை – புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் தற்போது தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்த்து வருகிறது.
டிட்வா புயல் தற்போது காரைக்காலில் இருந்து கிழக்கு – வடகிழக்கில் 90 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து வடகிழக்கில் 120 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென் கிழக்கில் 130 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென் கிழக்கில் 220 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி கடற்கரைக்கு பக்கவாட்டில் முன்னேறுகிறது. இது இன்று (நவ.30) மதியம் அல்லது மாலைக்குள் தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் 70 கிமீ தொலைவிலிருந்து 30 கிமீ தொலைவுக்குள் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் கொட்டித் தீர்த்தது மழை?
டிட்வா புயல் இலங்கை நிலப்பரப்பில் இருந்து நகரத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் மாவட்டம் (17 செ.மீ), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் (17 செ.மீ), நாகப்பட்டினம், சீர்காழி, திருவாரூரில் 14 செ.மீ , ராமநாதரபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் தொண்டி, நாகை திருப்பூண்டி, தஞ்சை மாவட்டம் கருங்குளம் ஆகிய பகுதிகளில் 13 செ.மீ, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, நாகை மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கன்னி மற்றும் வேதாரண்யத்தில் 12 செ.மீ. என மழை பதிவாகியுள்ளது.
ரெட் அலர்ட்:
டிட்வா புயல் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பரவலாக பல இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தவிர சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
