பிஹார் Election 2025 Results LIVE: பெரும்பான்மைக்கான இடங்களில் என்டிஏ முன்னிலை! மகா கூட்டணிக்கு பின்னடைவு!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 9:30 மணி நிலவரப்படி, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 147 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 73 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் | முன்னிலை / வெற்றி நிலவரம் @ காலை 9:30 மணி:
என்டிஏ – 147
மகா கூட்டணி – 73
மற்றவை – 04
கட்சி வாரியாக முன்னணி / வெற்றி நிலவரம்:
பாஜக – 76
ஜேடியு – 63
ஆர்ஜேடி – 58
காங்கிரஸ் – 10
ஜேஎஸ்பி – 03
மற்றவை – 14
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், விஐபி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. இதுதவிர, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 11-ம் தேதிஇரவு வெளியாகின. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சுமார் 19 ஊடகங்கள் கணித்தன. மெகா கூட்டணிக்கு சுமார் 85 இடங்கள் கிடைக்கலாம் என்று முன்னணி ஊடகங்கள் கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
