Home » வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுக நிர்வாகிகள்: திரைமறைவில் மோசடி செய்வதே திமுக தொழில்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுக நிர்வாகிகள்: திரைமறைவில் மோசடி செய்வதே திமுக தொழில்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

DMK executives in the process of revising the voter list: DMK's business is to commit fraud behind the scenes! - PMK leader Dr. Anbumani Ramadoss condemns.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக திமுகவினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் 4&ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திசம்பர் 4&ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக திசம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தப் பணிகள் முறைகேடுகள் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துக் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினர் இந்தப் பணியில் முறைகேடு செய்து வருகின்றனர். எந்தவித ரகசியமும் இல்லாமல் வெளிப்படையாகவே திமுகவினர் இதை செய்கின்றனர்.

தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக திமுகவின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை. கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் திமுகவின் மறைமுகச் செயல் திட்டமாகும்.

சில இடங்களில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கட்சியினரிடம் சிக்கி, தப்பி ஓடிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஓர் ஊரில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடமிருந்து திமுக நிர்வாகிகள் வாங்கி, தங்கள் கட்சியினர் ஐ.டி பிரிவினர் மூலம் வீடுகளுக்கு கொடுத்து வாங்குவதை எதிர்க்கட்சியினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொலிகள் சமூகவலைத் தளங்களில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது மட்டுமின்றி, இன்னும் பல இடங்களில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகளும் வீடு வீடாக செல்கின்றனர். திமுகவினர் கைகாட்டும் வீடுகளுக்கு மட்டும் தான் படிவங்கள் வழங்கப்படுகின்றன. இதுவும் கூட திமுகவுக்கு எதிராக வாக்குகளை பட்டியலிலீருந்து நீக்குவதற்கான சதித் திட்டம் தான்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது திமுக ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முகாரி ராகம் பாடி வருகிறார். இன்னொரு பக்கம் திமுகவினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார். ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொருபுறம் மோசடிகளை அரங்கேற்றுவது தான் காலம் காலமாக திமுகவினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை.இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல திமுக தொடர் நாடகங்களை நடத்துகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, அந்தப் பணியில் திமுக அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடுகளை செய்யும் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால், இது தொடர்பாக காணொலி மூலம் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன்,‘‘ஒரு பணியாளரைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்’’ விளக்கம் அளித்தார். பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் கூட, அவர்களை திமுக அரசு அச்சுறுத்தி தங்களின் மோசடிக்கு துணை சேர்த்துக் கொள்ளும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் இப்போது நடக்கும் முறைகேடுகள்.

தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளையே திமுக அதன் அதிகாரத்தை பயன்படுத்தி அச்சமூட்டி, தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை செய்ய வைத்தததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் இப்போது இடம் பெற்றிருக்கும் இராச கண்ணப்பன் அவர்கள் 2009&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். கடைசி சுற்று வரை அவர் 4000&க்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக, அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இராச கண்ணப்பன் தோல்வியடைந்ததாகவும், திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை அறிவிக்க வைத்தாக குற்ரச்சாட்டுகள் எழுப்பப்பட்டன; இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. திமுகவினரின் தேர்தல் பித்தலாட்டங்களுக்கு இதேபோல் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில இ.ஆ.ப அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் சட்டவிரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட திமுகவினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)